கமல்ஹாசனின் பிறந்த நாள் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலக்கிய விழாவாகவே நடைபெறும் . தவிர அந்த விழாவில் கமல் பேசும் பேச்சும் பரபரப்பானதாகவே இருக்கும் .
இந்த வருஷமும் அப்படியே .
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்குப் பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வது அவருக்கு வழக்கம். இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,
புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து,ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவரை கௌரவித்தார். இந்த சந்திப்பின் போது ‘தூங்காவனம்’ திரைப்படத்தின் வசனகர்த்தா சுகாவும் உடன் இருந்தார்.
பிறந்த நாள் அன்று சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மனநலக் காப்பகம் ஒன்றுக்கு உணவு மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன . அரும்பாக்கத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது .
மாலையில் நடந்த விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் கமலின் தாயார் ராஜலக்ஷ்மி அம்மையார் நினைவாக இலவச கணினி பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது. கமலின் தந்தையார் தியாகி சீனிவாசன் கல்வி அறக்கட்டளை சார்பில் பரமக்குடி மேல் நிலைப் பள்ளிக்கு கட்டிடநிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பல மன்ற நிர்வாகிகளுக்கு விருது வழங்கினார் கமல்
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் புவியரசு
“மத்த நடிகன் போஸ்டர்ல சாணி அடிக்கிற எவனும் என் மன்றத்தில்இருக்க வேணாம்’னு சொன்ன நடிகர் கமல் ஒருத்தர்தான் . ‘எனக்குதான் சினிமா தொழில் . உனக்கு சினிமா என்பது முக்கியம் இல்லை’ என்று ரசிகனைப் பார்த்து சொல்லக் கூடிய நேர்மை கமலுக்கு மட்டுமே இருக்கிறது ” என்றார் .
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட , நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது ” சினிமாவில் எந்த அளவுக்கு சிறப்பாக நடிப்பாரோ அந்த அளவுக்கு சினிமாவுக்கு வெளியே நடிக்காமல் சிறப்பாக இருப்பவர் கமல் .
முக்கியமாக தனது கோபத்தை அவர் மறைப்பதே இல்லை . அது பற்றிப் பேசும்போது ‘ என் பாராட்டை நீங்கள் விரும்பும்போது என் கோபத்தையும் ஏற்கத்தான் வேண்டும் ‘ என்பார்.
பொதுவாக சினிமாவில் தான் பெற்ற அறிவை ரகசியமாக வைத்துக் கொண்டு பலன்பெறவே பலரும் விரும்புவார்கள் . ஆனால் அதை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து மற்றவர்களையும் தன் இடத்துக்கு உயர்த்த முயலும் ஒரே கலைஞன் கமல் ” என்றார் .
கமல் பேச்சில் ஏகத்துக்கு சூடு
"மரணம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்பதை என்றைக்கும் மறக்கமாட்டேன். எனது பிறந்தநாளும், என் தந்தையின் நினைவுதினமும் ஒரே நாள்.
நான் பகுத்தறிவாளன்தான் . நாத்திகன் அல்ல.
நாட்டில் இருக்கிற பிரச்னை போதாதுன்னு என்னெனவோ வருது . மாட்டுக்கறி சாப்பிடறது பெரிய குற்றமா இருக்கு சிலருக்கு . எனக்கு மாட்டுக்கறி பிடிச்சிருக்கு. நான் அதை சாப்பிடுவேன் . அது என் இஷ்டம் .
நான் என்ன சாப்பிடணும்னு எனக்கு மெனு நீங்க கொடுக்காதீங்க . சாப்பாடு இல்லாம ஏராளமான பேரு தவிக்கிறாங்க. அவங்களுக்கு போய் ஏதாவது சாப்பாடு கொடுங்க
விருதுகளை திருப்பித் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு அளிக்கப்பட்ட விருதுகளை ஆளுங்கட்சியோ ஆண்ட கட்சியோ வழங்கல. 12 அறிஞர்கள் அடங்கிய குழு தான் வழங்கியுள்ளது. அவர்களை நான் அவமதிக்க விரும்பவில்லை.
நான் எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன், அதேபோல், அரசியல்நோக்கத்திற்காக என்னை பயன்படுத்திக்கொள்ளவும் யாரையும் அனுமதிக்க மாட்டேன். எனது ரசிகர்கள் செய்யும் நற்பணிகளை தொடர அனுமதியுங்கள் நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை.ஆனால் எங்கு தவறு நடந்தாலும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும்"
என்றார் கமல் .