பார்த்திபன் எழுதி இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்த ரீவ்ஸ் கிரியேசன்ஸ் சந்திரமோகன், தனது ஸ்ரீ தக்ஷா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அடுத்து தயாரிக்கும் படம் கமர்கட்டு .
சாட்டை யுவன், கோலி சோடா ஸ்ரீராம் , தொப்பி பட நாயகி ரக்ஷா ராஜ், மற்றும் மனிஷா ஜித் ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் நிறைய படங்களுக்கு கலை இயக்குனராக பணி புரிந்த ராம்கி ராமகிருஷ்ணன் . இந்த கமர்கட்டு படத்தின் கதை திரைக்கதை வசனம் கலை இயக்கம் , பாடல்கள் மற்றும் இயக்கம் இவரே .
”அது என்ன படத்துக்கு பெயர் கமர்கட்டு?” என்றால் ” கமர்கட்டு கிராமத்துத் தின்பண்டம் . மிக சுவையான இனிப்பு . கடினமாக இருக்கும் . சீக்கிரம் கரையாது . வாயில் வைத்துக் கடிக்கும்போது கவனமாக கடிக்க வேண்டும் . கொஞ்சம் அசந்தால் பல்லையே பதம் பார்த்து விடும் . மாணவர்களின் சக்தியும் அப்படிதான். அதை முறைப்படி கையாண்டால் இனிப்பாக இருக்கும் . இல்லை எனில் நம்மையே பதம் பார்த்து விடும் . அதற்குதான் இந்தப் பெயர் ” என்கிறார் .
கதை ?
இரண்டு ஜோடிகள் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலிக்கின்றன. அவர்கள் காதலுக்கு இறைவனே உதவுகிறான் . இறைவன் நேரடியாக உதவ மாட்டான் அல்லவா? எனவே சித்தன் என்ற கதாபாத்திரம் மூலம் உதவுகிறான் . இந்தக் கதைக்கு ஏற்ப படத்தை முழுக்க முழுக்க திருவண்ணாமலை பகுதியிலேயே எடுத்துள்ளார். ராம்கி ராமகிருஷ்ணனின் சொந்த ஊரும் அதுவே .
விளைவு?
படத்தில் ராம்கி ராமகிருஷ்ணன் எழுதி இருக்கும் “கெத்து பொய்யடா… சொத்து பொய்யடா… முத்து பொய்யடா.. சிவம்தான் மெய்யடா” என்ற பாடலில் திருவண்ணாமலை தீபத்தை இதுவரை யாரும் பார்க்காத வகையில், தீபம் கோவிலில் இருந்து கொண்டு போகப்படுவது …ஏற்றப்படுவது… உள்ளிட்ட அந்த சம்பிரதாயங்களை, பல கேமராக்கள் வைத்து எடுத்து இருக்கிறாராம் .
படத்தின் டிரைலரையும் பாடல்களையும் பார்க்கும்போது நாயக நாயகிகள் மிக உற்சாகமாக நடித்திருப்பது தெரிந்தது . முன்னரே எழுதப்பட்ட பாடல்களுக்கு ஆர்வமாக இசை அமைத்து இருந்தார் புதுமுக இசை அமைப்பாளர் ஃபைசல் .
“பார்த்திபன் சாரை வச்சு ஒரு வெற்றிப் படம் கொடுத்துட்டு அடுத்து அதை விட பெரிய பிரபலங்களிடம் போகாமல் எங்களை நம்பி சின்ன யூனிட்டுக்கு படம் கொடுத்த சந்திரமோகன் சாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ” என்று நாயகன் ஸ்ரீராம் பேச…
அது பற்றிக் கூறும் ராம்கி ராம கிருஷ்ணன் ” நாங்க இந்த படத்தை வெற்றிப் படமா கொடுத்தால்தான் , அடுத்து புது படைப்பாளிகள் இந்தக் கம்பெனியில் படம் பண்ண முடியும். அதை மனதில் கொண்டு உழைத்திருக்கிறேன் ” என்கிறார்.
வாழ்த்துகள் !