கமர்கட்டு @ விமர்சனம்

kamarkattu 5
ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீ தக்ஷா இன்னோவேஷன்ஸ் தயாரிக்க, யுவன் , ஸ்ரீராம், ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கலை இயக்கமும் செய்து ராம்கி ராம கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் கமர்கட்டு. 

 சாப்பிடும் கமர்கட்டு போலவே படம் நீடித்து இனிக்குமா ? பார்க்கலாம் .

திருவண்ணாமலைப் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த – மேல் நிலைப் பள்ளி படிக்கும்– நெருங்கிய நண்பர்களான  மாணவர்கள் இருவர் (யுவன் , ஸ்ரீராம்) . அதே கிராமத்தைச் சேர்ந்த அக்கா தங்கைகளில் (ரக்ஷா ராஜ், மனிஷா ஜித்) அக்காவை ஒருவனும் தங்கையை இன்னொருவனும் காதலிக்கிறார்கள். இருவழிக் காதல்தான்.

ஆனால் மாணவிகள் இருவரும் படிப்பில் மக்குகளாக இருக்க, அந்த மாணவிகளின் அம்மா (அங்காடித் தெரு சிந்து) , நண்பர்களான மாணவர்கள் இருவரையும் காட்டி — அவர்களுக்குள் இருக்கும் காதலை அறியாமலேயே — “அந்த பசங்க அளவுக்கு நீங்க படிக்கலையே ” என்று தனது மகள்களை கரித்துக் கொட்டுகிறாள் .

kamarkattu 3அது அந்தப் பெண்களை மிகவும் வதைக்க, அது காதல் காளைகளின் மனதைப் பிசைகிறது . எனவே எதிர் வரும் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அந்த மாணவிகளை விட குறைவாக மார்க் எடுக்க முடிக்க முடிவு செய்கிறார்கள். அந்த மக்கு மாணவிகளை விட குறைவாக மார்க் எடுக்க ஒரே வழிதான் இருக்கிறது .

யெஸ்! பையன்கள் இருவரும் இரண்டு பரீட்சையை எழுதாமலேயே பெயில் ஆக, பாஸ் பண்ணிய  மாணவிகள் இருவரும் கல்லூரி போகிறார்கள். அங்கே ஒரு பெரிய கான்ட்ராக்டர் சகோதரர்களின் மகன்கள் இருவர் படிக்க வர, அவர்களில் ஒருவன் அக்காவை விரும்புகிறான் . இன்னொருவன் தங்கையை விரும்புகிறான் .

ஒரே நாளில் அவர்கள் வாங்கிக் கொடுக்கும் தங்கக் கொலுசுகள், பர்கர்கள் ,கார் பயணம் எல்லாம் மாணவிகளின் மனதை மாற்றுகிறது.  மாணவிகளின் அம்மாவும் பணக்கார இளைஞர்களின் காதலே நல்லது என்று கூற, அந்த பெண்களும் ஏழைகளின் காதலை தூக்கிப் போட்டுவிட்டு பணக்காரக் காதலை ஏற்றுக் கொள்கிறார்கள்.

விஷயம் அறிந்து ஏழைக் காதலர்கள் குமுற, பெண்ணின் அம்மா ஆள் வைத்து மாணவர்கள் இருவரையும் கொலை செய்து விடுகிறாள்.

செத்துப் போன மாணவர்கள் இருவரும் தத்தம் காதலிகளைப் பேயாக  வந்து  பிடித்துக் கொள்ள, பணக்காரக் காதலர்கள் உடனான அவர்களது திருமணம்  நிற்கிறது.

kamarkattu 2

மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வந்து பேய்களை ஓட்ட முயல , சிவ பக்தனாக வாழ்ந்த அந்த மாணவர்களுக்கு அண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் ஆசியே  இருப்பது,  ஒரு சித்தர் மூலம் தெரிய வருகிறது .

ஆனாலும்  இஸ்லாமிய மந்திரவாதி, மலேசிய மந்திரவாதி என்ற பல வகையிலும் பேயை ஓட்ட முயல .. அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த கமர்கட்டு .

கமர்கட்டு என்பது ஏழைகளின் இனிப்பு . மிக சுவையான இனிப்பு. நீடித்து இனிக்கும் இனிப்பு . ஆனால் அதை சரியாக சுவைக்காமல் இஷ்டத்துக்கு கடித்தால் பல் உடைந்து விடும் .

Kamara-Kattu 1ஏழை எளிய இளைஞர்களின் சக்தியும் காதலும் அப்படிதான். மிக சிறப்பானது . மாறாதது . ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டு அப்புறம் துரோகம் செய்தால் என்ன ஆகும் என்பதையே இந்தப் பெயரின் மூலம் சொல்கிறது படம் .

இளமையான காதல் கதை போல ஆரம்பித்து , அப்புறம் அதில் பேயைக் கலந்து , அதோடு கடவுளை இணைத்து , சித்தர் பாட்டோடு பிணைத்து .. இப்படி அடுத்தடுத்த திருப்பங்களோடு பயணிக்கிறது திரைக்கதை. பெரும்பாலான காட்சிகளில் அழகான இரண்டு சிற்றிளம் கதாநாயகிகள், இரண்டு உற்சாகமான இளைஞர்கள் என்று ஃபிரெஷ் ஆக இருக்கின்றன ஃபிரேம்கள் .

kamarkattu 6

திடீரென்று பெண்கள் மனம் மாறுவது ஏற்புடையதாக இல்லை என்றாலும்  , அடுத்த சில காட்சிகளில் நம்மை ஏற்றுக் கொள்ள வைத்து விடுகிறது இயக்குனரின் சாமரத்தியம். அதுவும் புது காதலர்கள் பர்கர் சுவையை அறிமுகப்படுத்திய நிலையில் , பழைய காதலர்கள் சந்தித்து “நாங்க வச்ச அன்பு பாசம் எல்லாம் உங்களுக்கு பெருசா தெரியலையா?” என்று கேட்கும்போது ” உன் அன்பு பாசத்தை தூக்கி குப்பையில் போடு . அதை வச்சு ரெண்டு பர்கர்  கூட வாங்க முடியாது ” என்று பூங்கொடி சொல்லும் வசனம்….. சும்மா கொந்தளிக்க வைக்கிறது . நச் !

ஃபைசலின் இசையில்  “எருமாட்டுப் பயலே … ” பாடல், “என் காதல் பிச்சுகிச்சு ” பாடல் மற்றும் ”கெத்து பொய்யடா ..”பாடல்கள் மிக அருமை . அதுவும் கெத்து பொய்யடா பாடல் வரிகளும் , திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை மலை உச்சியில் இருந்து படமாக்கி இருக்கும் விதமும் சிலிர்க்க வைக்கிறது. அந்தப் பாடல் கேட்கும்போது மனம் முழுக்க ஆன்மீகத்தில் மூழ்கி , வாழ்வின் நிலையாமை பற்றியும் சைவ வழிபாடு பற்றியும் யோசிக்கத் துவங்கி விடுகிறது .

காதலித்த பெண்களின் அம்மாவால் கொல்லப்பட்டு இறந்த பிறகும் காதலை மறக்க முடியாமல் காதலித்த பெண்களையே பேயாக வந்து பிடித்து..;  இந்த செண்டிமெண்ட் காரணமாகவே கிளைமாக்ஸ் கனம் பெறுகிறது.

kamarkattu 4

யுவன் படம் முழுக்க சுறுசுறுப்பாக சுற்றுகிறார். ஸ்ரீராம் உணர்ந்து நடிக்கிறார். ரக்ஷா ராஜும் மனிஷா ஜித்தும் சிரித்தே கவிழ்க்கிறார்கள், ரசிகர்களையும் !

இரண்டாம் பாதியில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் . ஒவ்வொரு காட்சியிலும் ஒரு காதல் ஜோடி என்ன செய்கிறதோ அதையே அடுத்த ஷாட்டில்,இன்னொரு காதல் ஜோடி செய்கிற மாதிரி எடுத்து இருப்பதை தவிர்த்து தனித்தன்மை கொடுத்து இருக்கலாம்

கமர்கட்டு ….  காதலுக்கு மல்லுக்கட்டு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →