காஞ்சனா 2 @ விமர்சனம்

kanchana 1

ராகவா லாரன்சின்  நேர்மை நமக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு .

பின்னே?

கொரியப்படம்,  ஹாலிவுட் படம் என்றெல்லாம் காப்பி அடிக்காமல்,  காஞ்சனா 2 என்ற பெயரில் தனது காஞ்சனா முதல் பாகத்தைதானே  எடுத்து இருக்கிறார் .

அதே பயந்த லாரன்ஸ் … சிறுவர்களுடன் பேய்ப்படம் பார்த்து பயப்படுகிறார் . இரவில் பாத் ரூம் போக பயந்து கொண்டு அதே அம்மா கோவை சரளாவை பாத் ரூமுக்குள் வந்து நிற்க சொல்கிறார் .

அதே பாணியில் கோவை சரளா இடுப்பில் ஏறி ஜிங்ங்ங்ங்ங் என்று உட்காருகிறார் . எக்ஸ்ட்ராவாக காஞ்சனா முதல் பாகத்தில் வேலைக்காரி . இதில் கோவை சரளாவின் தோழியாக வரும் ஒரு மாமி இடுப்பில் உட்காருகிறார் . இது போதாதென்று       டி வி நடிகை பூஜாவின்  இடுப்பும் தாங்குகிறது .

இந்தப் படத்திலும் பேயோ அல்லது யாரோ  அவ்வப்போது அ… அ…அ…அ  என்று அடிக்குரலில் அழுகிறார்கள் !

இன்னும் இருக்கு . அதுக்கு முன்ன கொஞ்சம் கதை பார்ப்போம் .

ஒரு தொலைக்காட்சி நிறுவனம்,  குலசாமிகளை வைத்து புரோக்ராம் பண்ணி டி ஆர் பி ரேட்டிங்கில் எகிறிவிட….  லாரன்ஸ் கேமரா மேனாக வேலை செய்யும் டிவி முதலாளி நமது முதலிடம் போச்சே  என்று புலம்ப (இது சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்யும் படமுங்கோ !)…. அங்கே நிகழ்ச்சி தயாரிப்பாளராக உள்ள டாப்ஸி,  பேயை வைத்து புரோக்ராம் பண்ணும் ஐடியா கொடுக்க….  எல்லோரும் மகாபலிபுரம் கடற்கரை பங்களாவுக்கு வந்து பேய் புரோக்ராம் ஷூட் பண்ண….அங்கே நிஜமாகவே பேய் இருக்க … இவ்ளோ புதுசா சொல்லி இருக்காங்களே , போதாதா ?

 அப்புறம் மறுபடியும் அதே முதல் காஞ்சனாதான்.

அதில் லாரன்சின் அண்ணனாக நடித்த ஸ்ரீமன் இதில் டி வி நிறுவன முதலாளியின் நண்பராக கேரக்டர் மாறி வந்தாலும் அதே மாதிரி நடித்து விட்டுப் போகிறார் (ஆளையாவது மாற்றி இருக்கலாமே பாஸ் !)

முதல் பாகத்தில் கோவை சரளாவும் அவரது மருமகள் தேவதர்ஷினியும் மாறி மாறி பேயிடம் அடிவாங்கி பயப்படுவார்கள். இதில் கோவை சரளாவும் அவரது சம்மந்தியாக வரும் ரேணுகாவும் ! அந்தப் படத்தில் அந்த இருவரும் வாடி போடி என்று பேசி அடித்துக் கொள்வார்கள் . இதில் சக்களத்தி என்று திட்டிக் கொள்கிறார்கள் .

பயந்தாந்குளி லாரன்ஸ் அதில் எப்படி திடீர் என்று பேய் பிடித்ததும் மிரட்டுவாரோ அதே போல இதிலும் பயந்தாங்குளி லாரன்ஸ் மொட்டை சிவா என்ற இன்னொரு கதாபாத்திரமாக வந்து மிரட்டுகிறார் .

kanchana 2

காஞ்சனா முதல் பாகத்தில் லாரன்ஸ் பேயானதும்,  ஏற்கனவே செத்துப் போன பல கதாபாத்திரங்களைப் போல வருவார் . இதிலும் அப்படி வந்து நடிக்கிறார் , ஆடுகிறார் . ஆனால் இந்த விசயத்தில் முதல் பாகத்தில் இருந்த கனம், நேர்த்தி இரண்டும் இதில் மிஸ்ஸிங் .

காஞ்சனா 1இல்  சரத் குமாரை வைத்து திருநங்கைகளை சம்மந்தப்படுத்தி ஒரு அட்டகாசமான பிளாஷ்பேக்கில் பட்டையை கிளப்பி இருப்பார் லாரன்ஸ் . இதில் நித்யா மேனன் கால் மாற்றுத் திறனாளி என்ற கேரக்டரைசேஷனை தவிர,  பிளாஷ்பேக்கில் விசேஷம் இல்லை .

காஞ்சனா முதல் பாகத்தில் பாடல்கள் பட்டயைக் கிளப்பும் . குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல்!  ஆனால் இதில் நான்கு இசையமைப்பாளர்கள் ஆளுக்கு ஒரு பாட்டுப் போட்டும்  பாடல்கள் சொதப்பல் . எஸ் எஸ் தமனின் பின்னனி இசையிலும் தனித்தன்மை ஏதும் இல்லை .

காஞ்சனாவின் கிளைமாக்சில் பக்தி, லட்சியம் , நியாயமான பழி உணர்ச்சி , ஆவேசம் எல்லாம் மாறி மாறி சுழன்றடிக்கும் . ஆனால் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஏதோ  வீடியோ கேம்ஸ் பார்ப்பது போல இருக்கிறது .

அம்மா அப்பா குழந்தைகளோடு வர வாய்ப்புள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் , மயில்சாமி , மனோ பாலா , சாம்ஸ் சம்மந்தப்பட்ட ஒருபால் பாலுறவு ஜோக்ஸ் தேவையா லாரன்ஸ் ? அதுவும் காட்சி ,  வசனம் , முகபாவனை , மயில்சாமி நிற்கும் விதம் என்று சகல விதத்திலும் பல தடவை ? அதில் என்ன ஜோக் என்று குழந்தைகள் கேட்டால் என்ன பதில் சொல்வீங்க லாரன்ஸ் ?

இருக்கட்டும் .

பேய்க்கு பயப்படும் கோவை சரளா, லாரன்ஸ் ,  பேயாக மாறும் டாப்ஸி , பேயாக வரும் நித்யா மேனன் நால்வரும் .. சும்மா சொல்லக் கூடாது நடிப்பில் சும்மா பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார்கள் .

கோவை சரளா காமெடி நடிப்பில் இன்னும் எவ்வளவு பொக்கிஷங்களை வைத்திருக்கிறாரோ? இதற்கு முன்பு காஞ்சனா முதல் பாகத்தில்  செய்த கேரக்டர் என்றாலும் சில புதிய எக்ஸ்பிரஷன்களைக் காட்டி சிரிக்க வைத்து வியக்க வைக்கிறார் .

 லாரன்ஸ் …?  பயம் , கோபம் , குறும்பு , அவருக்கு பிடித்த பெண்மை நளினம் எல்லாவற்றிலும் மீண்டும்  ராட்சஷ அசத்து அசத்துகிறார் . கூடவே நடனத்திலும் ஒரு கலக்கல் . படத்தில் நடனக் காட்சியில் அறிமுகம் ஆகி இருக்கும் அவர் தம்பிக்கு வாழ்த்துகள் !

டாப்சியின் சாதாரண முக பாவனைகளே பயமுறுத்துகிறது . அவரை இந்த கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த விதத்தில் ஜொலிக்கிறார் இயக்குனர் லாரன்ஸ் .

இந்த வ்வ்வவ்வ்வாரம் … நித்யா மேனன் வ்வ்வ்வவ்வ்வ்வாரம்… !

 ஒகே கண்மணி படத்தில் படம் முழுக்க மாடர்ன் பெண்ணாக கிளர்ச்சி ஊட்டி இருப்பவர்,  இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நெகிழ வைக்கிறார் . அவரது தோழி , தோழியுடனான சண்டை , கண்ணீர் என்று….. அந்த ஏரியாவில் மட்டும் ”உள்ளேன் அய்யா….”  சொல்கிறார் திரைக்கதை ஆசிரியர் லாரன்ஸ் .

kanchana 3

பேயைப் பார்த்து பயப்படுவதிலும் பேயிடம் அடி வாங்குவதிலும் பேயைப் பார்த்து பயப்படும்  மனிதர்கள் அதை வைத்து ஒருவரை ஒருவர் தங்களுக்குள் அடித்துக் கொள்வதிலும் பயம் , காமடி , நெகிழ்ச்சி இவற்றைக் கொண்டு வருவதில் முன்னோடி விட்டலாச்சர்யாதான் . ஆனால் நாம் பார்த்த அவரது படங்கள் எல்லாம் மொழி மாற்றுப் படங்கள் என்ற அந்நியத்தன்மையுடனேயே இருந்தன .

அதை சரியாகப் பயன்படுத்தி  நேரடித் தமிழுக்கு  தனது முனி படத்தில் மூலம் கொண்டு வந்து பரிசோதனை செய்து பார்த்து காஞ்சனா முதல் பாகம் மூலம் கல்லாப் பெட்டியைக் கர்ப்பிணி ஆக்கியவர் லாரன்ஸ் . இந்தப் படத்திலும் அதை அப்படியே செய்திருக்கிறார். குறைகள் இருப்பது புரிந்தாலும் காஞ்சனா முதல் பாக ஹேங் ஓவரில் கொண்டாடுகிறார்கள் மக்கள் .

இடையில் மற்ற சிலரும் அந்த பாணியில் ஜெயித்திருக்கும் நிலையில்,  இன்னும் சில படங்களுக்கு இதையே  லாரன்ஸ் பயன்படுத்தினாலும் இது போலவே அவருக்கு பலன் இருக்கும் .அவருக்கு அந்த உரிமையும் யோக்கியதையும் உண்டு . செய்யக் கூடாது என்று சொல்கிற உரிமை யாருக்கும் இல்லை.

ஆனால் இந்தப் படத்தின் இறுதியில் ‘ வருகிறது முனி – 4’  என்று டைட்டில் போட்டு முடிக்கிறாரே .. அந்தப் படத்தில் , மீண்டும் எடுத்ததையே எடுக்காமல் வேறு ஏதாவது சொல்லி ஜெயித்தார் என்றால் …

அப்புறம் நாமும் சொல்லலாம்.

லாரன்ஸ் … நீங்க மாஸ் இல்ல ….. பக்கா மா…..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

மொத்தத்தில்,

காஞ்சனா 2 … காஞ்சனா 1 ன் கலர் ஜெராக்ஸ் .. சில இடங்களில் பிரின்ட் கிளாரிட்டி கம்மி !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →