ப்ளூ ஓஷன் சார்பில் ஜி.தனஞ்செயன், புத்தா பிக்சர்ஸ் சார்பில் எடிட்டர் பி.லெனின் மற்றும் ஜே எஸ் கே சார்பில் சதீஷ் குமார் தயாரிக்க,
ஆனந்த், ஜானகி , கர்ணா , ராமு ஆகியோர் நடிப்பில்
கதை திரைக்கதை வசனம் எழுதி பி.லெனின் இயக்கி இருக்கும் படம் கண்டதை சொல்லுகிறேன் . காணச் சொல்லி சொல்ல முடியுமா ? பார்க்கலாம் .
உலகின் ஆதி இசை , தமிழின் மூத்த இசை , ஒரு காலத்தில் மங்கள இசையின் முதன்மை இசை ஆகிய சிறப்புகளோடு இருந்து,
பின்னாளில் சாவுக்கு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களால் இசைக்கப் படும் அமங்கல இசையாக துரோகிக்கப் பட்ட பறை இசைக் கலைஞர்கள் வாழ்வானது,
கர்நாடக இசைக்குப் பின்னால் இயங்கும் மேட்டுக்குடி சக்திகளால் இப்போது சந்திக்கும் சூறாவளிகள், புயல்கள், பூகம்பங்கள், சுனாமிகளை சொல்லி,
அந்த பறை இசைக் கலைஞர்கள் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாவதையும் சொல்கிற படம் இது.
இளம் வயதில் பறை இசை பயிலும்போது காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மாசனம் (ஆனந்த்) — ஜோசபின் (ஜானகி) தம்பதிக்கு இளம் வயது மகன் மகள் உண்டு .
மாசனத்தின் நெடுங்கால நண்பர் அய்யனார் (கர்ணா) தன் மனைவியும் மகளும் ஓடிப் போன நிலையில் மகனுடன் மட்டும் இருப்பவர்
எளிய கிராமத்தில் அதனினும் எளிய நிலையில் ஊர் ஓரம் உள்ள குடிசைகளில் காலம் காலமாக வாழும் வாழ்வு இவர்களுடையது .
மேட்டுக் குடியில் பிறந்தாலும் இசையை மதிக்கும் சித்தார்த் என்ற டிரம் இசைக் கலைஞன் ( பிரகாஷ்) இந்த ஊருக்கு வந்த போது பறை இசையால் கவரப் படுகிறான் .
மாசானத்தின் மகன் செல்லாண்டி (மாரிமுத்து) அய்யனாரின் மகன் சுடலை (ஆடலரசு) ஆகியோருடன் நட்பு பாராட்டுகிறான் .
இவர்களை சென்னை டெல்லி என்று அழைத்துப் போய் பறை இசைக் கலையை பிரபலப்படுத்த விரும்புகிறான் .
இந்த புதிய மாற்றங்களில் அய்யனாருக்கும் விருப்பம் என்றாலும் மாசனம் விரும்பவில்லை . அழைத்துப் போய் அசிங்கப்படுத்துவார்கள் என்பது அவர் தரப்பு .
இந்த கருத்து வேறுபாட்டில் அய்யனாரின் மனைவியும் பிள்ளையும் ஓடிப் போனது குறித்து மாசானம் அருவருப்பாகப் பேச ,
மனம் வெறுக்கும் அய்யானர் சென்னைக்கு வந்து மனிதக் கழிவுகளை சுத்தப் படுத்தும் வேலை செய்து பிழைக்கிறார்
காதலித்து அழைத்து வந்தவன் ஏமாற்றி விட்டுப் போகும் நிலையில் கஞ்சா விற்கும் மகளை சந்திக்கிறார் .
சித்தார்த் மீண்டும் முயன்று செல்லாண்டி, சுடலை இருவரையும் சென்னைக்கு அழைத்துச் வருகிறான் .
அவர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர சித்தார்த் முயல , அதை சித்தார்த்தின் அப்பாவும் சித்தியும் வஞ்சகமாய் தடுக்கிறார்கள் .
ஊரில் மாசனம் குடிக்கு அடிமையாகிறான் . டாஸ் மாக் கடை ஊழியரான ஒரு வயதான நபருக்கு மகளை கல்யாணம் செய்து தர ஜோசபினை வற்புறுத்துகிறான் .
நிலைமைகள் விபரீதம் ஆகும்போது என்ன நடந்தது என்பதே இந்த கண்டதை சொல்லுகிறேன் .
பகட்டோ படாடோபமோ இல்லாத எளிய உயிர்ப்பான லெனினின் இயக்கமே படத்தின் உயிர்நாடி . வாழ்வியல் சொல்லும் கதையும் காட்சிகளும் படம் முழுக்க வருகின்றன .
அதற்கு சரியான ஒத்துழைப்பை வழங்குகிறது ஆஷிஷ் தவார் செய்து இருக்கும் ஒளிப்பதிவு .
பறை பற்றிய படத்துக்கு சத்தம் அதிகம் இல்லாத இசையை கொடுத்து அசத்துகிறார் பி.ஆர். ரஜின். பறை இசையின் மெல்லிசைத் தன்மையை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு .
படத்தில் வரும் அந்த ஒற்றைப் பாடலும் உயிர்ப்போடு இசை(க்)கிறது
கர்ணா, ஆடலரசு, மாரிமுத்து ஆகியோர் மிக இயல்பான சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
மாசனத்தின் அருவருப்புப் பேச்சுக்குப் பிறகு கிழிந்த பறையை கையில் வைத்துக் கொண்டு படுத்தபடி அழும் காட்சியில் நெகிழ வைக்கிறார் கர்ணா .
.
பிரகாஷ் , திருநங்கை கேரக்டரில் வருபவர் ஆகியோரும் பாராட்டும்படி நடித்துள்ளார் .
ஆனந்த் , ஜானகி இருவரும் என்னத்துக்கு அப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் ஒரு நிமிஷ இடைவெளி விட்டு பேசுகிறார்களோ தெரியவில்லை .
தவிர சித்தார்த்தின் தந்தை மற்றும் சித்தி உட்பட பலரின் நடிப்பும் அதீத செயற்கை . எரிச்சல் .
படத்தின் மிகப் பெரிய குறை இதுவே .
ஜி. தனஞ்செயன் பெரிய படங்கள் மட்டுமல்லாது இது போன்ற சின்ன படங்களுக்கும் தனது பங்களிப்பை தருவது பாரட்ட வேண்டிய விஷயம்.
மொத்தத்தில்
கண்டதை சொல்கிறேன்… கவனிக்க வேண்டிய கலைப் படைப்பு
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————