
வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க புதுமுகங்கள் அர்ஜுனா, பிரியங்கா வர்ஷா அஸ்வதி நடிப்பில் , உயிர் , சிந்துச் சமவெளி. மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கங்காரு .
படத்தை வெளியிட இருக்கும் கலைப்புலி தாணு மற்றும் அவரோடு டி.சிவா, இயக்குனர்கள் ஆர். சுந்தராஜன் , வி.சேகர், ஆர்.கே.செல்வமணி , மனோஜ்குமார், கே எஸ் அதியமான் ஆகியோர் கலந்து கொண்ட இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பால முரளி வர்மன் “கங்காரு என்ற வார்த்தைக்கு ‘அது என்ன?’ என்று பொருள் . கங்காருவை முதன் முதலில் பார்த்தவர்கள் ‘அது என்ன?’ என்று கேட்க அதுவே அதன் பெயராக ஆனது . ஆனால் நம் தமிழ் மொழியில் மட்டும்தான் இப்படி எல்லாம் அசட்டுத்தனமாக பெயர் வைக்காமல் காரணப் பெயர்களாக வைப்போம்.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை கங்காரு என்றால் கர்ப்பம் தரித்த போது சுமப்பது மட்டும் அல்லாமல்… பெற்றெடுத்த பிறகும் பிள்ளையை அடி வயிற்றில் சுமக்கும் அதன் குணம்தான் நினைவுக்கு வரும் . அந்த வகையில் , தங்கையை தாய்ப் பாசத்துடன் சுமக்கும் ஒரு அண்ணனின் கதைதான் இந்தப் படம் “என்றார் .
அதற்கேற்ப பாசமலர் , முள்ளும் மலரும் , கிழக்கு சீமையிலே , பொற்காலம் போன்ற சரித்திரம் படைத்த அண்ணன் தங்கை படங்களின் பாசப் படையல் வரிசையில் 2015 இல் கங்காரு என்று மிக எளிமையான — ஆனால் கனமான ஒரு முன்னோட்டத்தைக் காட்டி அசத்தினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய பலரும் சாமி இப்படி ஒரு குடும்பப்படம் எடுத்து இருப்பதை பாராட்ட அதற்கு பதில் சொன்ன சாமி ” ஒரு படத்தின் கதை என்ன என்பதை இயக்குனர் மட்டுமே முடிவு செய்வது இல்லை . அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை . ஆக இதுவரை நான் எடுத்த படங்களின் கதைகள் அப்படி இருந்ததற்கு நான் மட்டுமே காரணம் இல்லை.
சினிமாவில வெற்றியும் நல்ல பேரும் வந்தா எல்லாரும் பங்கு போட்டுக்குவாங்க. தோல்வியும் கெட்ட பேரும் வந்தால் ஒருத்தன் தலையில கட்டிட்டு போய்டுவாங்க .அப்படிதான் நான் மாட்டினேன் . இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , நல்ல கண்ணியமான இந்த குடும்பக் கதையை படமாக்க முன் வந்தார் . அதனால் கங்காரு யூ சர்டிபிகேட் படமாக வந்துள்ளது ” என்றார் .
பெரிய படங்கள் , நடுத்தர படங்கள் , சின்ன படங்கள் இவை சரியான முறையில் ரிலீஸ் ஆக வழிவகுத்துக் கொடுப்பதை போக்குவரத்து சிக்னலில் உள்ள காவலரின் பணியோடு ஒப்பிட்டு பேசிய இயக்குனர் வி.சேகர் ” தயாரிப்பாளர் சங்கம் அந்த போக்குவரத்துக் காவலர் போல நின்று எல்லா படங்களும் ரிலீஸ் ஆகும் சூழலை ஏற்படுத்த வேண்டும்” என்று கூற , அதையே பலரும் கலைப்புலி தாணுவுக்கு கோரிக்கையாக வைத்தனர்.
படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட ஒரு அநியாயத்தை எந்த தயக்கமும் குழப்பமும் இன்றி போட்டு உடைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி . “ஒரு ஷூட்டிங்குக்கு அவுட்டோர் போறோம்னா யூனிட்டில் உள்ள எல்லாரையும் சென்னைல இருந்து அழைச்சுட்டு போறோம் . தங்க வைக்கிறோம் . அங்கேயே பேட்டா முதலிய எல்லாவறையும் தருகிறோம் . படப்பிடிப்பு முடிஞ்சு சென்னை வரும் வரை எல்லாம் ஒண்ணாதான் இருக்கிறோம் .
அப்படி இருந்தும் கங்காரு பட ஷூட்டிங்ல ஒரே ஒரு நாள் நாங்க பேட்டா தர லேட் ஆனது. இன்னும் சில மணி நேரத்தில் பணம் கைக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை . அதை சொல்லியும் கேட்காமல் லைட்மேன் சங்கத் தலைவர் ராஜாராம் என்பவர் சென்னையில் உட்கார்ந்து கொண்டு ஒரு போன் மூலம் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார் . அதுவும் லொக்கேஷன போய் வேலைகளை எல்லாம் ஆரம்பித்த பிறகு அப்படி நிறுத்தி விட்டார் .
அதுவும் அன்று மாலை வரை வேலை செய்து விட்டு பணம் வராவிட்டால் மறுநாள் படப்பிடிபுக்கு ஒத்துழைப்பு கிடையாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை . ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை ஆரம்பித்த பிறகு நிறுத்துகிறார் . அப்புறம் எப்படி இங்கே தயாரிப்பாளர்கள் நம்பிக்கையாக செயல்பட முடியும் ? நான் இந்த விஷயத்தை சும்மா விடப் போவது இல்லை . எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இதற்காக இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமனிடமும் செயலாளர் ஆர்.கே. செல்வமணியிடமும் போராடிக் கொண்டே இருப்பேன்” என்றார் .
நிகழ்ச்சியில் அந்த அசத்தலான முன்னோட்டம் மட்டுமின்றி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கும் பாடகர் சீனிவாஸின் இசையில் மூன்று பாடல்களை திரையிட்டுக் காட்டினார்கள்.
ஆழாக்கு உழக்கு என்பவை சிறு அளவிலான அளவீட்டுக் கலன்கள் . கிராமங்களில் குறும்புக்கார சிறு குழந்தைகளை பெரியவர்கள் ” உழக்கு மாதிரி இருந்துகிட்டு என்ன பாடு படுத்துது …” என்று சந்தோஷமாக வியப்பார்கள். அதை குறிப்பிடும்படியாக சிறு குழந்தை பற்றிய ஒரு பாடலை ”உழக்கு நிலவே ஆராரோ…” என்று ஆரம்பித்து இருந்தார் வைரமுத்து .
“பேஞ்சாக்க மழைத்துளியும் ….” என்ற பாடலில் “என் ஏத்ததுக்கும் எறக்கத்துக்கும் ஏன்னா கொற?” என்ற வைரமுத்துவின் வரிக்காக , வர்ஷா அஸ்வதியை ஊற வச்சு ஊற வச்சு…… ஸ்ஸ்ஸ்ஸ்…. படமாக்கி இருந்தார்கள் .(பின்னே…. ஒரேயடியா சாமி அப்படியெல்லாம் நம்மள கைவிடுமா என்ன?)
தம்பி ராமையாவின் நடிப்பில் விரிந்த பாடலான ”தாயும் கொஞ்ச காலம்” என்ற பாடல் தத்துவ முத்துக்களை கொட்டிக் கொடுத்தது ” இப்போது வைரமுத்துவுக்கு மிக நெருக்கமான மூன்று பாடல்களில் ஒன்றாக கூறப்படும் இந்தப் பாடலில் நான் நடித்தது பெருமை ” என்றார் தம்பி ராமையா .
வித விதமான கோணங்கள் மற்றும் கேமரா ஷட்டர் ஸ்பீட் மாற்றங்களைக் கொண்டு அருவி நீரை அழகழகாக அற்புதமாக காட்டி ரசவாதம் இருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜ ரத்னம் “அண்ணன் தங்கை பாசத்தை அற்புதமாக சொல்லி இருப்பது மட்டும் அல்ல. படத்தின் கிளைமாக்சில் ஒரு பிரம்மாதமான விஷயம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாமி ” என்றார் .
அறிமுக படத்தொகுப்பாளர் மணியையும் எல்லாரும் பாராட்ட, சுரேஷ் காமாட்சி ஒரு படி மேலே போய் “அவரை படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம்” என்றார்.
கோடம்பாக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் நடிகருமான ஜெகன் இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் . நிகழ்ச்சியில் அவர் பேச்சு அடேங்கப்பா ரகம் !
” என்னை நடிக்க கூப்பிட்டா சும்மா கூட நடிப்பேன் . ஆனா டைரக்ஷன டீம்க்கு கூப்பிட்டா நல்ல சம்பளம் கேப்பேன் …” என்றது நியாயம் .
ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய் ” அது மட்டும் இல்ல.. ஹீரோயின் அழகா இருக்கணும் . அப்போதான் வேலை பார்ப்பேன் . மொக்கை ஃபிகருக்காக எல்லாம் வேலை பாக்க முடியாது. இந்தப் படத்து ஹீரோயின் பிரியங்கா ரொம்ப அழகு . அதான் கங்காரு படத்துல வேலை பார்த்தேன் ” என்றது …… ரொம்ப நியாயம் !
நீங்கள்லாம் ரொம்ப நல்லா வருவீங்க ஜெகன்.