செய்திக் கட்டுரை புகைப்பட கேலரிக்குக் கீழே ….
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா, கேதரின் தெரசா, இயக்குனர் பாக்யராஜ் , தருண் அரோரா ஆகியோர் நடிக்க ,
ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராகப் பணியாற்றிய டி என் சந்தோஷ் இயக்கியுள்ள படம் கணிதன் .
இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பெற்றுக் கொண்டார் .
டிரம்ஸ் மன்னன் சிவமணி இசை அமைத்து இருக்கும் இந்தப் படத்தில் ”சேகுவாரா…” என்று துவங்கும் ஒரு பாடலை புலவர் புலமைப் பித்தனும் இரண்டு பாடல்களை மதன் கார்க்கியும் ,
ஒரு பாடலை நவீன் என்பவரும் எழுதி இருக்கின்றனர் .
விழாவின் துவக்கத்தில் டிரம்ஸ் சிவமணி , மாண்டலின் ராஜேஷ் ஆகியோர் நடத்திய டிரம்ஸ் மாண்டலின் இணைப்பிசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது . சிவமணியுடன் அவரது மனைவியும் பாடினார் . டிரம்ஸ் இசைத்தார் .
டிரம்ஸ் சிவமணியின் குருநாதர்களான காரைக்குடி மணி , கடம் விக்கு விநாயக் , சிவமணியின் சினிமா இசை வாழ்க்கைக்கு பேருதவி செய்த எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு ,
சிவமணியை வாழ்த்தினார்கள் . படத்தில் எஸ் பி பி ஒரு பாடல் பாடி இருக்கிறார் .
கலைப்புலி எஸ் தாணு, தான் தயாரிக்கும் படங்களில் சிறப்பாக வேலை செய்யும் உதவி இயக்குனர்களை இனம் கண்டு ,
அவர்களை தானே அழைத்து கதை சொல்லச் சொல்லி,
படம் தரும் நல்ல பண்பை பலரும் பாராட்டினார்கள்.
“எனது இயக்கத்தில் அவர் தயாரிக்கும் தெறி படத்தில் பணியாற்றும் எனது உதவியாளர் இருவருக்கு இப்போதே அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ” என்று கூறி அரங்கை அலற வைத்தார் இயக்குனர் அட்லி
“ஒரே நேரத்தில் கபாலி , தெறி என்று இரண்டு சூப்பர் ஸ்டாரின் படங்களைத் தயாரித்தாலும், அதே நேரம் அதர்வாவை வைத்து கணிதன் படத்தையும் தயாரிக்கும் தாணு சார்,
அந்த பெரிய படங்களை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு இந்த படத்தையும் நேசிப்பார்” என்று பாராட்டினார் ஏ ஆர் முருகதாஸ் .
“டிரம்ஸ் சிவமணியின் அன்புக்காக இந்த விழாவுக்கு வந்தேன் ” இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்
“எஸ் தாணு சார் மாதிரி ஒரு தயாரிப்பாளரிடம் முதல் படம் பண்ண வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது பாக்கியம்” என்று சொன்ன இயக்குனர் டி என் சந்தோஷ்
“அதற்குக் காரணம் எனது குருநாதர் முருகதாஸ் சார்தான் . அவரிடம் பணியாற்றி வெளியே வந்தால் சினிமாவின் சகல விசயங்களையும் தெரிந்து கொள்ளலாம் ” என்றார்.
எஸ் தாணு பேசும்போது
” துப்பாக்கி படத்தில் சந்தோஷ் ஒரு உதவி யக்குனராக மிக சிறப்பாக பணியாற்றியதைப் பார்த்து கவரப்பட்டேன் . கதை சொல்லச் சொன்னேன் . சொன்னார் . பிரம்மாதமாக இருந்தது .
படத்தை ஆரம்பித்தேன் . படம் முடிந்து படத்தைப் பார்த்த போது வியந்து போய் விட்டேன் .
படம் அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது . இப்போது அந்தத் தம்பி மீது கூடுதல் மரியாதை வருகிறது . பத்திரிகையாளர்களின் சக்தியை சொல்லும் படம் இது ” என்றார் .
நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை, தவறானவர்கள் தங்களுடையது போல மாற்றிக் கொண்டு, ஏமாற்றி வேலைக்குப் போய் விட்டு ,
உண்மையான திறமைசாலிகளை வேலை கிடைக்காமல் தவிக்க வைக்கும், ஒரு குற்றம் பற்றிய படம் இது என்பது, முன்னோட்டத்தில் தெரிகிறது .
பாடல்களில் அதர்வா உற்சாகமாகவும் கேதரின் தெரசா படு கிளாமராகவும் இருக்கிறது . சிவமணியின் இசை அதிர அடிக்கிறது
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு… சும்மா அசத்தோ அசத்து என்று அசத்துகிறது .