ஸ்கை மூன் என்டர்டைன்மென்ட் மற்றும் E5 என்டர்டைன்மென்ட் சார்பில் எம் கணேஷ் மற்றும் ஜே தனுஷ் தயாரிக்க, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி , ஷாலின் ஜோயா, மயில் சாமி, யஷ்வந்த் கிஷோர், வெற்றி , ஆதேஷ் சுதாகர், நடிப்பில் தானும் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து யஷ்வந்த் கிஷோர் இயக்கி இருக்கும் படம்.
பொள்ளாச்சிப் பக்க கிராமத்தில் அதிரடி அம்மா (மவுனிகா), அமைதியான ஆக்கபூர்வ அப்பா ( மயில்சாமி), இருவருக்கும் மகளாகப் பிறந்த வெள்ளந்திப் பெண் (அம்மு அபிராமி) …. தன் தங்கையின் மகளை விட தன் மகளுக்கு பெரிய இடத்து சம்மந்தம் வேண்டும் என்று ஆசைப்படும் அம்மா, தேடி வரும் பொருத்தமான வரன்களை எல்லாம் தள்ளி விட, குடும்பத்தில் நடக்கும் பெரிய இழப்புக்கு பிறகு மாப்பிள்ளை யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று அவள் முடிவு செய்த நிலையில் அவளுக்கு திருமணம் நடப்பது ஒரு கதை
ஆண்மையில்லாத கணவனும் கணவனின் குடும்பத்தாரும் கேவலமாக நடந்து கொள்வதால் விவாகரத்துக் கோரும் ஒரு நல்ல பெண்ணுக்கு ( வித்யா பிரதீப்) ஒரு வக்கீல் உதவ , அவர்களுக்கு இடையில் விவாகரத்துக்குப் பிறகு காதல் வர , வக்கீலின் அம்மா , விவாகரத்தான பெண்ணை தன் மகன் திருமணம் செய்து கொண்டால், கல்யாணம் ஆகாத தன் மகளின் வாழ்வு பாதிக்கப்படும் என்று சொல்லி காதலைப் பிரிக்க, அந்தப் பெண் உடைந்து போவது ஒரு கதை.
விவாகரத்தான ஒரு பெண் (ஷாலின் ஜோயா) அதை மறைத்து நவநாகரீக வாழ்க்கைக்கு பழகி ஓர் இளைஞனோடு கல்யாணம் இல்லாமல் சேர்ந்து வாழ , ஒரு நிலையில் அவன் கல்யாணத்துக்கு வற்புறுத்த, அவள் மறுக்க, அவனின் சந்தேகம் காரணமாக அவள் விலகி ,தனிமரமாகி பலரோடு செக்ஸ் உறவு கொண்டு விரக்தி நிலைக்குப் போவது ஒரு கதை
எந்த உறவும் இல்லாத ஒரு பெண் திரைப்பட உதவி இயக்குனர் ஒருவரோடு பழகி, கல்யாணம் இல்லாமல் உறவு கொண்டு கர்ப்பம் ஆக, அந்த கர்ப்பத்தை கலைக்க இருவரும் முயல, கரு வளர்ந்து விட்ட நிலையில் கலைப்பது முடியாது; பாவம் என்று நியாயமான டாக்டர்கள் சொல்ல ., ஐந்து மாதக் கருவை ஒரு கேரளா டாக்டர் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு கலைப்பது ஒரு கதை .
ஜடை பின்னுவது போல கதைக்கு ஒரு காட்சி என்று அடுத்தடுத்து சொல்லப்படும் கதையில், முடிவு என்ன ? இந்த நான்கு கதைகளுக்கும் இடையேயான தொடர்பு என்ன ? அதன் விளைவு என்ன என்பதே படம்
நான்கு கதைகளையும் எழுத அந்தாதி பாணியில் நான் பயன்படுத்தி இருக்கும் வார்ததைகளை ஊன்றிக் கவனித்தாலே கதைகளுக்கு இடையேயான தொடர்பை உணர முடியும் ( வாழ்த்துகள்)
பெண்களின் உணர்வுகள் , சிந்தனைகள் , பார்வைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட படம் என்பது படத்தின் சிறப்பும் பலமும்.
அதற்கேற்ப படம் முழுக்க நடிகைகள் புகுந்து விளையாடி இருக்க, அந்த கும்பலில் அனாயாசமாக ஸ்கோர் செய்கிறார் மறைந்த மயில்சாமி
நடிப்பில் வித்யா பிரதீப் முதலிடம் பிடிக்க, அம்மு அபிராமி கீர்த்தி பாண்டியன் அடுத்தடுத்த இடத்தைப் பிடிக்கிறார்கள் .
ஷாலின் ஜோயா நடித்த கதாபாத்திரம் அபாரமானது . அவரது பெரிய கண்கள் பெரும் பலம் . அவர் மட்டும் இயல்பாக நடித்து இருந்தால் அந்த கேரக்டர் அசத்தி இருக்கும் . ஆனால் ஓவர் ஆக்டிங்கில் டிராமா ஆக்கி விட்டார்.
அதே போல மவுனிகாவின் குரல் நடிப்பும் நுண்ணிய உணர்வுகளும் சிறப்பு என்றாலும் ஓவர் ஆக்டிங்கில் அவர் உச்சம் தொட்டு வீழ்கிறார் .
இந்த இரண்டு போரையும் விட , அம்மு அபிராமியின் சகோதரிகளாக வரும் பெண்கள் அசத்துகிறார்கள்
ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஷான் ரஹ்மான் இசை , சரத்குமாரின் படத் தொகுப்பு இவையும் படத்துக்கு பலமே .
கதாபாத்திர வடிவமைப்பு, காலம் , வயது , உடலமைப்பு ,சூழலுக்கு பொருந்துதல் போன்ற விசயங்களில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நாலு கதைகளுக்கும் போடப்படும் அந்த முடிச்சு, ;அட …’என்று ஆச்சர்யப்பட வைக்கிறது .
தேவைக்கு மேல் நீளும் காட்சிகள் , அவ்வபோது திரைகதையின் போக்குக்கு வெளியே போய் சுற்றி விட்டு வரும் காட்சிகள் யாவும் பொறுமையை சோதிக்கிறது
காட்சி அமைப்புகளில் பக்குவமும் நேர்த்தியும் இல்லாதது பெரிய பலவீனம். கண்மூடித்தமான பரபரப்புக்காக கண்ணகி என்று தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பெயர் வைத்திருப்பதும் அப்படி ஒரு அபத்தமே
எனினும் பெண்ணின் பார்வையில் வரும் காட்சிகள் உள்ளம் கவர்கின்றன .
ஒரு பக்கம் கல்யாணம் என்பதே பெரிய விசயமாக இருப்பது .. இன்னொரு பக்கம் கல்யாணமே இல்லாத உறவில் ஜஸ்ட் லைக் தட் கொட்டம் அடிப்பது…
கல்யாணம்தான் பெண்ணுக்கு பாதுகாப்பு என்று பெண்கள் நம்பும் ஒரு சூழல்.. கல்யாணம் பெண்ணுக்கு சிறை என்று பெண்கள் நம்பும் இன்னொரு சூழல் …
இப்படி கூர்ந்து பார்த்து ரசிக்கப் பல விஷயங்கள் உண்டு
கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு , பெண்ணை மடியில் போட்டுக் கொண்டு அம்மா பேசும் வசனங்கள் பெண் பிள்ளைகள் உள்ள யாரையும் கலக்கி விடும் .
அதே போல கர்ப்ப வயிற்றில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட நான்கு மாத சிசுவின் உடல் அடங்கிய பிளாஸ்டிக் பையை நாய் தூக்கி வந்து ரோட்டில் போட , மழை நீரில் சிசு இருக்கும் அந்த பிளாஸ்டிக் பை நிரம்புவது, கர்ப்பப்பையின் பனிக் குடத்தை நினைவு படுத்துவது பிரம்மிப்பு
இப்படி சில விசயங்களால் சற்றே கவனம் பெறுகிறது இந்தப் படம்