சன் லைஃப்கிரியேஷன்ஸ் சார்பில் எம்.செல்வராஜ் தயாரிக்க, அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிருஷ், ராம் பரதன் நடிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கி இருக்கும் படம்.
தருமபுரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பகுதி மலை உச்சியில் உள்ள – ஒரு சில மனிதர்கள் மட்டுமே வாழ்கிற – கைவிடப்பட்ட பல வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தில் உள்ள தாய்மாமனைத் தேடி ஓர் இளம்பெண்ணும் (அஷ்வினி சந்திரசேகர்) , ஒரு சிற்றிளம் பெண்ணும் ஒரு சிறுமியும் வருகின்றனர் .
இந்த இரவில் எப்படி வந்தாய் என்று எல்லோரும் கேட்க , ஓர்ஆளின் அடையாளம் சொல்லி அவர் வழி காட்டியதாக சொல்கிறாள் இளம்பெண்.

அவள் சொல்லும் நபர் இறந்து பல மாசம் ஆச்சு என்கிறார் தாய்மாமன் .
ஒரு நிலையில் அவளைத் தேடிப் பிடித்துக் கொல்ல, ஒரு கொடூரக் கூட்டம் வருகிறது .
தனது ஊரில் அம்மா, அண்ணன்(மணிமாறன்) , பாசமான அண்ணி (தாரா கிருஷ்) அவர்களது பிள்ளைகளான (மேலே சொன்ன) சிற்றிளம் பெண் , சிறுமி ஆகியோரோடு சந்தோஷமாக வாழ்ந்தவள் அந்த இளம்பெண்.
அவளது அம்மா பாரம்பரிய சிகிச்சை முறையில் பேர் போனவர் .
மலை மேல் இடம் வாங்க வந்த ஒரு அல்லோபதி டாக்டரின் தீர்க்க முடியாத நோயை அந்த அம்மா தீர்க்க, அவர் நோய் குணமானதை அறிந்து மற்ற டாக்டர்கள் அதிசயிக்க, அந்த டாக்டர் மலைநாட்டு பெண்மணி தந்த சிகிச்சை பற்றி சொல்ல, அந்த சிகிச்சை முறையை அறிந்து அதை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்க ஒரு மெடிக்கல் மாஃபியா திட்டமிடுகிறது .

ஆனால், வெற்றிலை மேல் நோயாளிகள் வைக்கும் அவர்களால் முடிந்த காணிக்கை தவிர வேறு எதுவும் வாங்கக் கூடாது என்ற கொள்கை உடைய அந்த மலைவாழ் மருத்துவர் அம்மா , அதை விற்க மறுக்க,
அவரையும், அண்ணன் அண்ணியையும் கொலை செய்கிறது அந்தக் கூட்டம்
அந்த சிகிச்சை முறை குறிப்புகளோடு இளம்பெண் தனது அண்ணன் மகள்களோடு தாய்மாமன் ஊருக்கு தப்பி வந்து விட்டார் என்ற முன்கதை சொல்லப் படுகிறது .
இப்போது அவளையும் கொலை செய்ய அந்தக் கூட்டம் முயல நடந்தது என்ன என்பதே படம் .

மலை உச்சி , சுற்றிலும் அடர்காடு , பாழடைந்த வீடுகள், அங்கே வாழும் சில மனிதர்கள் என்று அந்த லொக்கேஷன் மிரட்டி அசத்தி அசரடிக்கிறது . அற்புதம் அபாரம் .
அஸ்வினி சந்திரசேகரை மலைவாழ் பெண்ணாகவே மாற்றி இருக்கிறார்கள். அவரது கெட்டப் அணிகலன்கள் நடை உடை பாவனை யாவும் அருமை. டப்பிங் கொடுத்தவர் சிறப்பாக செய்து இருக்கிறார் . பாராட்டுகள்
அதே போலவே தாரா கிருஷ் , மலைக்காட்டு மருத்துவர் பெண் மணி ஆகியோரின் தோற்றமும்.
அண்ணன் மகளாக வரும் சிற்றிளம் பெண்ணின் முகம், ஒரு கவிதை .

தங்கைக்கும் அண்ணன் மனைவிக்கும் இருக்கும் உறவை பாசத்தை ஒரு காவியம் போலச் சொல்லி இருக்கிறார்கள். உச்சி முகரத் தோன்றும் பாத்திரப் படைப்பு.
தாரா கிருஷ் சிறப்பாக நடித்துள்ளார் . மணிமாறனும் அருமையாக நடித்துள்ளார்
ராஜ் குமாரின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் கோட்டை விட்டு இருக்கிறார்கள் . சும்மா மாண்டேஜ்களாக மட்டும் நகரும் முதல் பாதி … மற்ற பலரின் ஓவரான மற்றும் செயற்கையான நடிப்பு , காட்சிகளுக்கு ஏற்ற வசனம் இல்லாமை எல்லாம் சேர்ந்து இதை ஒரு சராசரி படமாக்கி விட்டது .
எனினும் படக் குழுவின் முயற்சி பாராட்டுக்குரியது .
மொத்தத்தில் கன்னி .. வனப்பு இருந்தும் பருவத்துக்கு வரவில்லை