ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில், விஜய் கிரகந்தூர் தயாரிக்க, சப்தமி கவுடா , கிஷோர், அச்யுத் குமார் உடன் நடிப்பில் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்து இருக்கும் படம் காந்தாரா.
நிம்மதியும் ஆனந்தமும் இல்லாத அரசன் ஒருவனுக்கு வனக் கடவுள் ஒன்று நிம்மதியும் ஆனந்தமும் கொடுக்க, அந்த தெய்வம் கேட்டுக் கொண்டதன் பெயரில் தனக்கு சொந்தமான ஆயிரக்ககணக்கான ஏக்கர் நிலப்பரப்பை அந்த வனதெய்வத்தை குலதெய்வமாக வழங்கும் மக்களுக்கு வழங்குகிறான் அரசன்.
காலப் போக்கில் நவீன யுகத்தில் அந்த அரசன் வழி வந்த இன்றைய பணக்கார குடும்பத்தினர் அந்த நிலத்தை மக்களிடம் இருந்து மீண்டும் பெற நினைக்கிறார்கள் . அந்த குடும்பத்தைச் சேர்ந்த மிராஸ்தார் தேவேந்திர சுட்டூரு (அச்யுத் குமார்) அந்த மக்களிடம் உறவாடியபடியே அவர்களின் உழைப்பையும் அனுபவித்துக் கொண்டு நிலங்களை வஞ்சகமாகப் பெற முயல்கிறார்.
தவிர அவர்கள் தாழ்ந்த சாதி என்ற எண்ணமும் அவருக்கு உண்டு .
இன்னொரு பக்கம் வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) வனத்தைக் காப்பதாகச் சொல்லி , வனத்தின் வாழ்வாதாரங்களை அந்த மக்கள் அனுபவிக்கும் காலகால பாத்தியதை உரிமைக்குத் தடையாக நடந்து கொள்கிறார்
அந்த வனப் பழங்குடி மக்கள் இனத்தின் இளைஞனும் நாயகனுமான காடுபெட்டு சிவா (ரிஷப் ஷெட்டி) மிராஸ்தாரின் விசுவாச வேலைக்கா
ரனாக இருந்தபடி வன அதிகாரியோடு மோதுகிறான் .
நண்பர்களோடு சேர்ந்து கள்ளுக் குடித்து பன்றி வேட்டையாடி அம்மாவிடம் நாயடி பேயடி வாங்குகிறான் . கம்பாலா என்னும் எருமைகள் பந்தயத்தில் வெல்கிறான் .
தம் சமூகத்தில் இருந்து படித்து வன அலுவலகலத்தில் வேலைக்குப் போன லீலாவை (சப்தமி கவுடா) காதலிக்கிறான்
மிராஸ்தார் நடத்தும் வஞ்சக கண்ணா மூச்சி ஆட்டத்தில் கட்டப்பட்டிருந்த நாயகனின் கண்கள் அவிழும் நிலையில் நடந்தது என்ன என்பதே படம்.
படத்தின் முதல் பலம் லொக்கேஷன் மற்றும் பாரம்பரியத் திருவிழா முறைகள் .
படத்தின் துவக்கத்தில் வரும் முன்கதை அபாரம் . எடுக்கப்பட்ட விதமும் அப்படியே.
வன தேவாதியைப் பார்தததும் நிம்மதியும் ஆனந்தமும் வந்தது என்று வசனத்தில் கடந்து விடுகிறார்கள் . எப்படி வந்தது என்பதை சொல்லவில்லை.
கம்பாலா ஓட்டப் பந்தயத்தில் அறிமுகம் ஆகும் காட்சியிலேயே கவர்ந்து விடுகிறார் ரிஷப் ஷெட்டி .
யார் அந்த டென்ஷன் வக்கீல் . அவரது படபடப்புப் பேச்சும் போதையில் மட்டும் இலகுவாகப் பேசுவதும் கலகல.
அம்மாவகா நடித்து இருப்பவரும் இயல்பு .

நாயகனின் முதலாளி விசுவாசம், ஆரம்பத்தில் வில்லன் போல சித்தரிக்கப்படும் வன அதிகாரியின் மாற்றம் எல்லாம் பலப்பல படங்களில் பார்த்ததுதான் .
நாயகனை வெறுக்கும் நாயகி அவன் வேலை பெற உதவி செய்த உடன் பல் இளிப்பதும் உடனே காதலிப்பதும் நல்லா இல்லை .
இன்று காடுகள் அழிப்பிலும் காலகாலமாக வனங்களில் வாழும் மக்களை வெளியே துரத்துவதிலும் கார்ப்பரேட் நிர்வாகங்களும் அவரது கையாலகச் செயல்படும் அரசு நிறுவனங்களுமே முக்கியப் பிரச்னைகள். ஆனால் அதை மாற்றி அவர்கள் எல்லாம் நல்லவர்கள் . மிராஸ்தார்தான் மக்களின் எதிரி என்று சொல்வது போங்கு ஆட்டம் .
ஆனாலும் படத்தில் கொண்டாட பல விஷயங்கள் உண்டு.
அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு நம்மையும் காட்டுக்குள் இழுத்துப் போகிறது . அஜனீஷ் லோகநாத்தின் இசை நம்மையும் கதைக்குள் இழுத்துப் போகிறது
பொதுவாக வாழ்விலும் சினிமாவிலும் கேவலமாக அருவருப்பின் சின்னமாக காட்டப்படும் எருமை பன்றி இவற்றுக்கு படத்தில் பாரம்பர்ய அடிப்படையில் கொடுக்கப்பட்டு இருக்கும் நட்பும் தெய்வீகத்தன்மையும் கொண்டாடத் தக்கது

அதைவிடும் நாயகன் ரிஷப் ஷெட்டி படத்தின் இறுதிக் காட்சிகளில் வன தேவாதியாக மாறிப் போடும் சண்டையும் சாமி ஆட்டமும் அட்டகாசமான நடிப்பும் , நாம் பார்ப்பது சினிமா இல்லை . அதற்கும் மேலே என்ற உணர்வை ஏற்படுத்தி அசர அடிக்கிறார்.
அங்கே நிற்கிறது காந்தாரா
இன்னொரு முக்கியமான விஷயம் நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது . நடிகர் ராஜ்குமாரை கடத்தியதால் ஒட்டு மொத்த கன்னட மக்களாலும் வெறுக்கப்பட்டவர் சந்தன வீரப்பன்.
ஆனால் இந்தப் படத்தின் நாயகனே அடிப்படையில் வீரப்பனின் பிம்பம்தான் . ஆனால் இந்தப் படத்தை கர்நாடக மக்கள் கொண்டாடுகிறார்கள் .
அங்கே படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார் ரிஷப் ஷெட்டி .