கப்பல் படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
“இப்படி ஒரு நல்ல படத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் கார்த்திக்கிற்கும் தயாரிப்பாளர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குனர் ஷங்கருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவு அளித்த மீடியாவுக்கும் நன்றி ” என்றார் நாயகன் வைபவ்
மேலே இருக்கும் வாக்கியத்தில் தனது பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைவருக்கும் நன்றி சொன்னார் இயக்குனர் கார்த்திக் கிரிஷ் .
கதாநாயகி சோனம் பஜ்வா உட்பட இப்படியே எல்லோரும் தொடர்ந்த நிலையில் தயாரிப்பாளர் பேசும்போது ” நாங்க புது டீம் . படம் எடுக்க ஆரம்பிக்கும்போது சினிமா எடுப்பது பற்றி எதுவுமே தெரியாது . இயக்குனர்தான் வழி காட்டினார் . எங்களுக்கு கிடைத்தது போன்ற ஆதரவு கிடைத்தால் நிறைய தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவார்கள்”என்றார்.
படத்தில் காமெடி வில்லனாக மூக்கில் பூட்டு எல்லாம் மாட்டிக் கொண்டு சிரமப்பட்டு நடித்த ஸ்டீவ் (நிஜப் பூட்டை கட் செய்து மூக்கில் மாட்டினார்களாம். நடித்து முடித்த பின் ஒரு வாரம் மூக்குள் புண்ணால் கஷ்டப்பட்டாராம் ) பேசும்போது ” இந்தப் படத்தில் எனக்கு கொஞ்சம் விவகாரமான கேரக்டர் . ஜட்டியோடு எல்லாம் ஓட வேண்டி இருந்தது . தமிழ் ரசிகர்கள் வித்தியாசமானவர்கள் . கொஞ்சம் அசந்தாலும் அவர்ஷனாக எடுத்துக் கொண்டு முகம் சுளித்து விடுவார்கள். நடிக்கும்போது எனக்கு அந்த பயம் இருந்தது. ஆனால் அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக வரும் படி இயக்குனர் கார்த்திக் அமைத்துக் கொடுத்தார் ” என்றார் . வளந்த தம்பி வெவரமாத்தான் பேசுது .
நாம் கூட நமது கப்பல் விமர்சனத்தில் “நகைச்சுவை என்ற சாக்கில் விதம் விதமான கெட்ட வார்த்தைகளை படம் முழுக்க உலவ விட்டு இருக்கிறார் . ஷங்கர் கிட்ட பாய்ஸ் படத்தில் அசிஸ்டண்டா சேர்ந்தீங்களா கார்த்திக் ? என்று எழுதி இருந்தோம் .
இதன் அடிப்படையில் “ஷங்கர் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்த படம் பாய்ஸ் படமா? என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்க ” இந்தியன்தான் எனக்கு பிடித்த படம் ” என்றார் கார்த்திக் கிரிஷ்.
அடுத்து ஒரு சோஷியல் காமெடி படம் எடுக்க இருப்பதாகவும் அதில் எல்லாம் தவறுகளையும் திருத்திக் கொள்வேன் என்றும் கூறினார் கார்த்திக்…. திக்.. திக்… திக்….!
நம்பறோம் பாஸ்.