கரையை அடையுமா ? பார்க்கலாம்.
கிராமத்து மாணவனான வாசுவுக்கு (வைபவ்) சிறுவயது முதலே நெருக்கமான நண்பர்கள் (கருணாகரன், அர்ஜுனன், வெங்கட் சுந்தர், கார்த்திக்). நான்குபேர் . கல்யாணம் செய்து கொண்டால் நட்பு பிரிந்து விடும் என்று நடுநிலைப்பள்ளி வயதிலேயே முடிவெடுத்து சத்தியம் செய்து கொள்கிறார்கள் .
கல்லூரி வயதில் வாசுவுக்கு காதலின் அவசியத்தை மனசும் உடம்பும் உணர்த்துகின்றன . எனவே வேலை தேடப் போவதாக பொய் சொல்லி சென்னை வந்து தெரிந்த மனிதரான நெல்சன் (விடிவி கணேஷ்) அறையில் தங்கி… காதலி தேடுகிறார்.
தேடியபடியே அவருக்கு ஒரு பெரும் பணக்காரரின் ஒரே மகளான தீபிகாவின் (சோனம் பஜ்வா) காதல் கிடைக்கிறது . தீபிகாவின் தந்தையின் நண்பர் தனது மகனுக்கு அபய்க்கு (ஸ்டீவ்) தீபிகாவை திருமணம் செய்து வைக்க போராடுகிறார் .
ஊரில் இருந்த நான்கு நண்பர்களில் ஒருவன் மற்ற மூவரின் கட்டுப்பாட்டையும் மீறி கல்யாணம் செய்து கொள்ள , வாசுவையும் விட்டு விடக் கூடாது என்று மற்ற மூன்று நண்பர்களும் சென்னை வந்தால் இங்கே வாசுவின் தீவிர காதலை பார்த்து அதிர்கிறார்கள் .
உடன் இருந்து திட்டமிட்டு வாசுவின் காதலை பிரிக்கிறார்கள்.
தீபிகாவுக்கும் அபய்க்கும் கல்யாணம் முடிவாகிறது .
ஒரு நிலையில் வாசுவின் உண்மையான காதலையும் அவளின்றி அவன் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும் உணர்ந்த நண்பர்கள் வாசுவை தீபிகாவோடு சேர்த்து வைக்க முயல , அது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படம் . (மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் என்று கவிஞர் வாலியின் பாடல் வரி இருக்கிறது அல்லவா? அந்த குறியீட்டுப் பொருளின் காரணமாக படத்துக்கு கப்பல் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் )
கேட்பதற்கு எவ்வளவு சீரியசான கதை !
ஆனால் இதை எடுத்துக் கொண்டு ஒரு காமெடி கதகளியே நடத்தி படம் முழுக்க சிரிக்க வைக்கிறார் எழுதி இயக்கியுள்ள கார்த்திக் ஜி கிரிஷ் .
வசன நகைச்சுவை, எக்ஸ்பிரஷன் நகைச்சுவை, சூழல் நகைச்சுவை, அறிவார்ந்த நகைச்சுவை என்று நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. அதே நேரம் நகைச்சுவை என்ற சாக்கில் விதம் விதமான கெட்ட வார்தைகளை படம் முழுக்க உலவ விட்டு இருக்கிறார். (பாய்ஸ் படத்தில் அசிஸ்டண்டா சேர்ந்தீங்களா கார்த்திக்?)
காட்சிகளில் சின்னச் சின்ன விஷயங்களையும் விவரிப்பதோடு அதை காமெடியாக திருப்புவதிலும் அசத்துகிறார் இயக்குனர். காமெடியோடு கவர்ச்சியை புத்திசாலித்தனமாக கலக்கிறார். படம் முழுக்கவே ஒரு டீலக்ஸ்தனம் இருப்பது பாராட்டுக்குரியது.
சின்னச் சின்ன விசயங்களையும் முடிந்தவரை செதுக்கி அழகுபடுத்துகிறார்.
உதாரணமாக வாசு காதலிப்பது குற்றம் என்ற எண்ணத்தில் நண்பர்கள் சில ரகசிய திட்டங்கள் வகுக்க, அது குறித்து நெல்சன் பயத்தோடு காணும் கனவில் கைதியாக வரும் வைப்வ்வின் கைதி எண் 143 ( புரிகிறதா?)
வைபவ் இதுவரை நடித்த படங்களிலேயே சிறப்பாக நடித்து இருப்பது இந்த படத்தில்தான். விடிவி கணேஷ் கலக்கல். சோனம் பாஜ்வா நேந்திரம்பழ பஜ்ஜி மாதிரி இருக்கிறார்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது. பின்னணி இசையில் கவனம் கவர்கிறார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன்.
அந்த காதல் கசட்டா பாடல் காட்சியை கேண்டி மிட்டாய்கள் செட்டில் படம் ஆக்கி இருக்கும் விதம் அருமை , குறிப்பாக கலை இயக்கம் மற்றும் உடைகள் . ஆனால் இன்னும் அதை சிறப்பாக படமாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
சிரிப்புக்கு பஞ்சம் இல்லை என்றாலும் நீளம் கொஞ்சம் அதிகம் .
கப்பல் …. கவிழாத பயணம் !
மகுடம் சூடும் கலைஞர்
————————————-
கார்த்திக் ஜி கிரிஷ்