ஆர் ஜே கம்பைன்ஸ் சார்பில் அனந்து மற்றும் ராமலிங்கய்யா இருவரும் தயாரிக்க, கணேஷ், வஷிஷ்ட் , நிகிஷா பட்டீல், சிம்ரன் , இனியா ஆகியோர் நடிப்பில் ஜே.கே.எஸ் இயக்கும் திரில் படம் .
படத்தை வெளிக்கொண்டு வருவதில் களம் இறங்கு இருக்கிறது தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் .
ஒரு கடற்கரையோர பெரிய பங்களாவில் தங்கும் ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் ஆபத்தான விபரீத அனுபவங்களைச் சொல்லும் படமாம் இது .
படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார் . சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு வேடத்தில் இனியா .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள்.
”சந்தோஷமாக இருக்கணும்னா தனியா இரு; தனியாக இருப்பதற்கு சந்தோஷப்படு” மற்றும் ” உன்னுடைய மிகப்பெரிய எதிரியே நீதான் என்றால் நீ என்ன செய்வாய் ?” ஆகிய பொருளிலான ஆங்கில வாசகங்களுடன் அமைந்த முன்னோட்டம், திரில்லாக இருந்தது .
இரண்டு பாடல்களில் ஏராள கிளாமர் காட்டி .. ம்ஹும், கொட்டி இருந்தார் நிகிஷா பட்டீல். படத்தின் மிகப் பெரிய பலமாக ஒளிப்பதிவு இருக்கும் என்பது பாடல்களைப் பார்த்தபோதே தெரிந்தது.
ஒரு பாடலில் ஊதா, நீலம் , வெள்ளை கலந்த ஒரு அரங்கும் , ஈரப்பசை , மெரூன், பொன்னிறம் கலந்த ஓர் அரங்கு மற்றும் ஆடைகளும் மிக சிறப்பாக இருந்தன .
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஜெ.கே.எஸ், “பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இது இருக்கும். இந்த படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப குழுவை கொண்டு உருவாக்கியுள்ளோம்.
இந்த கரையோரம் படம் சிம்ரன் அவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அவருக்கு இது ஒரு “கம் பேக் “ படமாக இருக்கும் என்று கூட சொல்லலாம்.
இந்த படத்தை நாங்கள் மும்மொழிகளில் உருவாக்கியுள்ளோம். அதே போல் இந்த படம் நாயகி நிகிஷா பட்டேலுக்கு அவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமையும்.
கவர்ச்சிக் கன்னியாக வலம் வரும் நிகிஷாவிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை இந்த படத்துக்காக வெளிக்கொண்டு வந்துள்ளேன்.
இனியா அவர்களின் நடிப்பு இந்த படத்தில் நிச்சயம் பேசப்படும் . படத்தின் இடைவேளை பகுதி நிச்சயம் எல்லோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதற்குக் காரணம் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை நாங்கள் படத்தில் கையாண்டுள்ளோம்” என்றார் .
ஸ்டுடியோ 9 சுரேஷ் பேசும்போது
” இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கணேஷ் எனது ஸ்டுடியோ 9 நிறுவனத்தில் பார்ட்னராக இருப்பவர். இந்தப் படத்தில் நடிக்கும்போதே அவர் இதைப் பற்றி மிகவும் உற்சாகமாக அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பார். படம் முடிந்த பிறகு ‘மிக நன்றாக வந்துள்ளது’ என்றார் நானும் ஓடம் பார்த்தேன் . ரொம்ப நன்றாக இருந்தது . எனவே படத்தின் வெளியீட்டில் களம் இறங்கி இருக்கிறோம் ” என்றார் .
வரும் 27 ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருகிறார் ஸ்டுடியோ 9 சுரேஷ்