bench talkies-the 1st bench@ விமர்சனம்

Stone Bench Press Show Stills (9)குறும்படம் எடுக்கும்  இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு  அடுத்த கட்ட அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கும்,

  அந்தக் குறும்படங்களை திரையரங்குகள், தொலைக்காட்சிகள், விமான பொழுது போக்கு ஊடகங்கள், மற்றும் டிஜிட்டல் அரங்குகளில்  வெளியிட வைத்து வருமானம் ஈட்டித் தருவதற்கும் ,

அதோடு ஆர்வமுள்ள புதிய படைப்பாளிகள் , தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்றும் நடிகர்களுக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்கும்,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது  ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம்.

இந்த ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம்,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி விஜய் சேதுபதி நடித்த நீர் என்ற குறும்படம் உட்பட மொத்தம் ஆறு திரைப்படங்களை தொகுத்து, 

பெஞ்ச் டாக்கீஸ் — தி ஃபர்ஸ்ட் பெஞ்ச் என்ற பெயரில் திரைப்படமாக வரும் மார்ச் ஆறாம் தேதி முதல் வெளியிடுகிறது. 

குறும்படங்கள் சுமார் 15 நிமிடம் முதல் 22 நிமிடம் வரை ஓடுகின்றன .

ஆறு படமும் சேர்ந்து மொத்தம் ஒரு மணி நேரம் 56 நிமிடம் என்ற கால அளவில் ஓடி முடிகின்றன .

முதல் படம் பாரடைஸ் லாஸ்ட்

 நீண்ட காலம் ஜெயிலில் இருந்து விட்டு விடுதலையாகி, சிறு வயதில் தன் தாயாரோடும் தங்கையோடும் மலைக் கிராமத்தில்  வாழ்ந்த வீட்டை            ( வாழ்க்கையை?) தேடிப் போகும் ஒரு பேச்சு மாற்றுத் திறனாளி மனிதனின் பயணமே இந்தப் படம் . வசனமே இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசை ஈர்க்கும்படி இருந்தது . லொக்கேஷன்கள்  ரம்மியம். நடித்தவரின் நடிப்பும் பாராட்டும்படி இருந்தது . பூங்கா காட்சியில் இயக்குனர் தன்னை நிரூபித்து இருந்தார் .

இரண்டாவது படம்  அக விழி .

சோம்பேறியான  ஓர் இளைஞன்… அவனது கோபக்கார அலுவலக பாஸ்…  அங்கே அவன் காதலிக்கும் ஒரு பெண் , அவளது சூழலில் இவனை விட அழகாக ஆண்கள் இவற்றை வைத்துக் கொண்டு  இவன் காதல் நிறைவேறியதா .. இல்லை அவளுக்கு கடைசி வரை நண்பனாக மட்டுமே இருக்க முடிந்ததா என்பதை கனவுகள் , கற்பனைகள்,  நிஜங்கள் இவற்றை வைத்து சொல்லி இருந்த படம் இது . படத்தின் டைட்டில் பக்கா தமிழில் இருந்தாலும்  வசனங்களில் ‘யக்கா’  இங்க்லீஷ் நிரம்பி வழிந்தது . டுவிஸ்டுகள் ரசிக்க வைத்தன .

”அவன் வடக்கத்திக்காரன் அதனால அழகா இருப்பான்” என்ற ரீதியில் ஒரு வசனம் . வடக்கத்திக்காரன்னா அழகா இருப்பான்னு எவன்ங்க சொன்னது? என்ன இது இப்படி ஒரு தற்குறித்தனம் !

மூன்றாவது படம் புழு .

யாருமற்ற மலைக் காட்டுப் பகுதியில் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு சாகும் தறுவாயில் இருக்கும் இரண்டு மனிதர்களின் தொடர்  வன்மமும் அடுத்தடுத்த  நிகழ்வுமே இந்தப் படம்.

அந்த நிலையில் மனிதன் புழு போலத்தான் நகர முடியும் என்பதையும் , மரண நொடியிலும் வன்மம் விலகாத மனிதர்கள் குணத்தளவில் அற்பப் புழுக்களைப் போன்றவர்கள் என்பதையும் புழு என்ற பெயரின் மூலம் உணர்த்தியது அருமை .

நான்காவது படம் ‘நல்லதோர் வீணை செய்தே’

பொதுவாக பாலியல் வன்கொடுமை என்பது பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் அவலம்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நன்கு படிக்கும் ஆசை இருந்தும்,  படிக்கும் இடத்தில் ஆசிரியரால் ஆண் ஓரினச் சேர்க்கை வன் கொடுமையில் சிக்கி சீரழிந்து படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு போகும் ஒரு மாணவனைப் பற்றிய இந்தப் படம் , ஆண் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஓர்  அவசிய அலாரம் .

பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைக்கு காது கொடுக்கவாவது சமூகம் தயாராக இருக்கிறது . ஆனால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு அது கூட ரொம்பக் கம்மி என்ற உணர்வை இயல்பாகப் புரியவைத்த விதம் பாராட்டுக்குரியது

Stone Bench Press Show Stills (15)

ஐந்தாவது  படம்  மது .

கார்த்திக் சுப்புராஜ் , பாலாஜி மோகன் இவர்கள் வரிசையில் குறும்படத்தை பாஸ்போர்ட்டாக்கி கோடம்பாக்க வெள்ளித்திரை சினிமாவுக்கு விசா வாங்கும் வாய்ப்புள்ள இயக்குனராகத் தெரிந்தார் இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமார்  .

உடன் படித்த மாணவியை ஆழமாக நேசித்த ஒருவன் அந்தக் காதலை சொல்லாமலே இருந்து விடுகிறான் . அவளுக்கு கல்யாணம் நிச்சயமான பிறகு மனம் தாங்க முடியாமல் பலமுறை தற்கொலைக்கு முயல்கிறான் . நண்பர்கள் மத்தியில் அந்த தற்கொலை முயற்சிகள் வெளியே நகைச்சுவையாக எதிர்கொள்ளப்பட்டாலும் , ஒரு நிலையில் பயந்து போன அந்த நண்பர்கள் அவனை உணர்கின்றனர்.

அவனுக்காக அவளிடம் பேசப் போனால் , ஜஸ்ட் ஒரு சக மாணவன் என்பதை மீறி அவனைப் பற்றி அவளுக்கு பெரிதாக ஞாபகங்கள் கூட இல்லை.   ‘ அவனை அவள் கன்னா பின்னா என்று அசிங்கமாகத் திட்டினால் அவன் அவளை வெறுத்து  விடுவான்’ என்று நண்பர்கள் கூற , அவளும் அப்படியே திட்டுகிறாள் . சற்றே வெறுத்துப் பதில் பேசும் அவன் , ஒரு நிலையில் அவளை நேசித்த ஆழத்தை சொல்ல , அவள் மனதுக்குள்  இனம் புரியாத உணர்வுகள் . தன்னை தனக்கே அவன் காட்டுகிறானோ என்ற எண்ணம் .

ஆனாலும் நிச்சயித்த மாப்பிள்ளையோடுதான் திருமணம் நடக்கிறது . அதன் பிறகு அவனை அவள் சந்திக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதே இந்தப் படம்.

என்னதான் காதல் கொண்டாலும் உதவிக்கு வரும் நல்ல மனசுடைய ஓர் அப்பாவிப் பெண்ணை ஆண் சமூகம் எப்படி பார்க்கிறது ; பயன்படுத்திக் கொள்கிறது ; அலட்சியம் செய்கிறது என்ற நோக்கில் அமைந்த அந்த கிளைமாக்ஸ்,  கிளாஸ் !  வெல்டன் ரத்னகுமார் !

ஆறாவது படம் நீர்

கார்த்தி க் சுப்புராஜ் இயக்கிய ஆரம்ப காலக் குறும்படங்களின் ஒன்று இது . குடும்பம் , அதில் பாசம் , பங்காளிச் சண்டை, பிடித்த பாட்டு , கோபத்திலும் அன்பு , அன்பிலும் ஆவேசம் என்று வாழும்  நமது மீனவர்களை , சிங்கள இன வெறிக் கடற்படை எப்படி சில துப்பாகிக் குண்டுகளில் நிர்மூலமாக்கி விட்டுப் போய் விடுகிறது என்பதை கனமாக சொன்னது இந்தப் படம் .

— இப்படியாக இந்த ஆறு படங்களையும் ஒரு திரைப்படமாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் .

Stone Bench Press Show Stills (10)

இதை ஒரு திரைப்படம் போல ஒன்று சேர்த்து திரையரங்குகளுக்கு கொண்டு வரும் நிலையில் படம் பார்க்கும்  வெகு ஜன  ரசிகனை அதற்கு தயார் படுத்த வேண்டும் . அதற்கான முன்னேற்பாடுகள் இல்லை .

என்ன செய்ய வேண்டும் ?

முதலில் ஒரு படத்துக்கு பெஞ்ச் டாக்கீஸ் — தி ஃபர்ஸ்ட் பெஞ்ச் என்று எல்லாம் பெயராக இருப்பது நம்மூருக்கு பொருந்தாது .  இதை ஒரு பிரான்ச்சைஸ் போலவோ அடிஷனல் டைட்டில் போலவோ வைத்துக் கொண்டு படத்துக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் . சிறுகதைத் தொகுப்பு அல்லது கவிதைத் தொகுப்பு  இவற்றுக்கு பொதுவாக ஒரு பெயரை வைப்பார்கள் அல்லவா? அது போல !

அது மட்டுமின்றி படம் துவங்கும் போது இது முழு நீள ஒற்றைப் படம் அல்ல என்பதையும் , ஆறு குறும்படங்களின் தொகுப்பு என்பதையும் கார்த்திக் சுப்புராஜோ அல்லது விஜய் சேதுபதியோ திரையில் தோன்றி சொல்லி ரசிகனை தயார்படுத்த வேண்டும் . சும்மா ஒரு பாரா எழுத்துப் போட்டு ஆரம்பிப்பது எல்லாம் பத்தாது. (நவராத்திரி , நவரத்தினம் போன்ற படங்களின் துவக்கத்தில் ஒரு முன்னுரை கொடுப்பார்கள் .. அது போல !)

இல்லாவிட்டால் ரசிகன் இருபது நிமிடத்துக்கு ஒரு முறை அடுத்தடுத்த கதை என்ற விசயத்தில் சலிப்பு அடையக் கூடும் . கவனம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →