சரித்திரம் படைத்த தமிழ் திரைப்படமான அவள் அப்படித்தான் படத்தின் கதையை எழுதியதோடு , படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா மற்றும் வண்ண நிலவனோடு சேர்ந்து திரைக்கதை வசனத்தையும் சோம சுந்தரேஸ்வர் என்ற தனது இயற்பெயரில் எழுதி புகழ் பெற்று ….
நவரச நாயகன் கார்த்திக் நடித்த இதயத் தாமரை , அமரன் ஆகிய படங்களை இயக்கி … அவற்றைத் தொடர்ந்து சீவலப்பேரி பாண்டி, கோவில் பட்டி வீரலட்சுமி உட்பட பல படங்களையும் இயக்கியவர் கே.ராஜேஷ்வர்.
இவற்றில் அவள் அப்படித்தான் உருவாக்கிய வரலாறு நாடறியும் .
அமரன் படம் ஜனவரி 15 1992 ஆண்டு வெளியாகி, ராஜேஷ்வரின் இயக்கம், கார்த்திக்கின் நடிப்பு, ஆண்டவப் பெருமாள் என்ற வில்லன் கதாபாத்திரத்தின் அட்டகாசமான உருவாக்கம் , பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு
இவற்றால் பெரிதும் பாராட்டப்பட்டது.
சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு அமரன் படத்தின் பார்ட் டூ உருவாகிறது . இயக்குனர் கே. ராஜேஷ்வர் தனது ஆர்லவ் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரித்து எழுதி இயக்க, படத்தில் ஹீரோவாக நடிப்பது முதல் பாகத்தில் நடித்த அதே…. நவரச நாயகன் கார்த்திக் !
வாவ் ! வாட் எ கம்பேக் !! ஹாங்…?
(ராஜேஸ்வரின் தந்தை அவன் அமரன் என்ற படத்தை தயாரித்தவர் . ஆகவே பெயரின்படி பார்த்தால் இந்தப் படம் மூன்றாவது அமரன் )
அமரன் பார்ட் டூ என்பதை சொல்ல பார்ட் ஒன் என்பதற்காக ரோமானிய எண் வடிவத்தை எழுதி , இடையில் கார்த்திக்கின் உருவத்தை பதித்தே அதை ரோமன் எண் இரண்டின் வடிவமாக மாற்றி ..
படத்தைப் பற்றிப் பேச பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் ராஜேஷ்வரும் கார்த்திக்கும்.
“ஒரு நண்பனாக சகோதரராக என் வாழ்வில் கலந்தவர் கார்த்திக் . ஒற்றை ரோஜாவாக இருந்த என்னை நந்தவனமாக மாற்ற நீர் வார்த்தவர் கார்த்திக் . ‘எல்லாமும் எல்லாரும் உன்னை விட்டுப் போகும்போது உனக்காக உள்ளே நுழைபவன் எவனோ அவனே உண்மையான நண்பன்’ என்ற ஆங்கில வாசகத்துக்கு என் வாழ்வில் அர்த்தம் சொன்னவர் கார்த்திக் ” என்று கார்த்திக்குக்கும் தனக்குமான நட்பை கவிதையாக சொன்ன ராஜேஷ்வர் ,
தொடர்ந்து “அமரன் முதல் பாகத்தில் பல கேரக்டர்கள் முடிவுக்கு வந்து விடும். அதனால அந்த கேரக்டர்களை மீண்டும் கொண்டு வர முடியாது . ஆனால் அமரன் கேரக்டர் முற்றிலும் புதிய பாணியில் புதிய களத்தில் பயணிக்கும். பல புதிய கேரக்டர்கள் வரும் . கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டாம் பாகம் செய்வதால் அதற்கு ஏன்ற மாதிரி நவீனமா இன்றைய ரசிகர்களை கவர்வது போல பல விஷயங்கள் படத்தில் இருக்கும் .
கதை லண்டன் , மாஸ்கோ, இத்தாலி, பூடான், கம்போடியா இப்படி பல ஊர்களில் நடக்கிறது . அங்கெல்லாம் ஷூட்டிங் நடக்குது . படத்துல மொத்தம் ரெண்டு ஹீரோயின். கதைப்படி ஒரு இந்தியப் பெண் . ஒரு வெள்ளைக்காரப் பெண் .நிச்சயமா இந்தத் தலைமுறை இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பையும் கவரும்படி படம் இருக்கும் “என்றார் ராஜேஷ்வர் .
அமரன் முதல் பாகத்தை நினைத்துப் பார்த்தால் ”ஆண்டவப் பெருமாள் இல்லாத அமரன் படமா ?” என்ற கேள்வி எழுந்தாலும், இயக்குனர் ராஜேஷ்வர் அதற்கு நியாயமான காரணம் சொல்வதால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அடுத்துப் பேசிய கார்த்திக் ” அப்பா இறந்து போன பிறகு அவர் மேல மரியாதை உள்ள பல சீனியர் நடிகர்கள் , அப்பாவுக்கு தெரிஞ்ச நடிகர்கள் எல்லாரும் ‘நல்ல பிள்ளையா நடந்துக்கணும். ஷூட்டிங்கு டைமுக்கு வரனும் . கெட்ட பழக்கம் எதுக்கும் ஆளாகக் கூடாது’ அப்படின்னு எல்லாம் அக்கறையா அறிவுரை சொல்வாங்க. ஆனா நான்… ?
இப்போ நினைச்சுப் பார்த்தா அவங்க சொன்னது எல்லாம் எவ்வளவு நல்ல விசயம்னு தோணுது. நான் நிறைய இழந்துட்டேன் . இந்த நிலையில் இதோ இப்ப ராஜேஸ்வர் அமரன் பார்ட் டூ ல என்னை மீண்டும் ஹீரோவா போட்டு எடுக்கறாரு. ஆரம்பத்துல அவர் என்னைப் பத்தி ஏதேதோ சொன்னாரே . அதெல்லாம் நான் உண்மையில் அவரைப் பத்தி சொல்ல வேண்டிய விஷயங்கள்.
அமரன் முதல் பாகத்தில் வெத்தல போட்ட ஷோக்குல பாட்டு பாடின மாதிரி இந்தப் படத்திலும் பாடுவேன் . இடையில் சில படங்களில் கேரக்டர் ரோல் , வில்லன் எல்லாம் பண்ணினேன் . அது எனக்கு திருப்தியா இல்ல இப்போ மறுபடியும் ஹீரோவா வந்து இருக்கேன். நான் ஃபிட் ஆகத்தான் இருக்கேன் . என்னுடைய இப்போதைய ஃபிட்நெஸ் லெவலுக்கு உரிய கதைகள்ல தொடர்ந்து ஹீரோவா நடிப்பேன் ” என்றார்
வாழ்த்துகள் ராஜேஷ்வர் , கார்த்திக் மற்றும் அமரன் – 2 டீம் !