ரியோட்டா மீடியா தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா , யோகி பாபு, அதிதி பாலன், சாரல், கவுதம் வாசுதேவ் மேனன், எஸ் ஏ சந்திரசேகரன், டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன் , மகானா சஞ்சீவ், நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கி இருக்கும் படம் .
கடைசிவரை நேர்மையாக இருந்து ஓய்வு பெற்ற ஜட்ஜ் ராமநாதனுக்கு ( பாரதிராஜா) மூன்று பிள்ளைகள் . ஒரு பையன் நியூயார்க்கில். ஒரு பெண் அமெரிக்காவில். மூன்றாவது பையன் (கௌதம் வாசுதேவன்) சென்னையில் . வக்கீலான மூன்றாவது மகன் நேர்மையைக் கை விட்டுக் குற்றவாளிகளுக்குத் துணை போய் சம்பாதிப்பதால் , ஒரே வீட்டில் இருந்தும் அப்பாவும் மகனும் பத்து வருடமாகப் பேசிக் கொள்வதில்லை .
இந்த நிலையில் அப்பாவின் பிறந்த நாளைக் கொண்டாட பிள்ளைகள் முடிவு செய்கின்றனர். அயல்நாடு வாழ் பிள்ளைகள் காணொளி வழியே பார்க்கவும் இங்கே உள்ளே மகன் அப்பாவுடனிருந்து கொண்டாடவும் திட்டம் . மகனும் அப்பாவும் பேசிக் கொள்ளும் சுமூக சூழல் உருவாகும் வாய்ப்புக் கனிகிறது .
ஆனால் எந்த மோசமான அரசியல்வாதியை குற்றவாளி என்று ராமநாதன் தீர்ப்புச் சொன்னாரோ அவரைக் காப்பாற்ற அடுத்த கட்ட முறையீட்டில் மகனே ஈடுபடுகிறான் . அதுவும் ராமநாதன் பிறந்த நாள் அன்று அதற்காக அவன் கிளம்பிப் போக , அவர் மனம் உடைகிறார்
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/karu-1.jpg)
பல வருடங்களுக்கு முன்பே அவருக்கு வந்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான கடிதம் அன்றுதான் அவரது கைக்கு கிடைக்கிறது. அவரை நம்பிய ஒரு நபரை அவர் நட்டாற்றில் விட்டு விட , தவிக்கும் போது அந்த நபர் எழுதிய கடிதம் அது .
அந்த நபரைத் தேடி அவர் கிளம்பி விட, அப்பா தொலைந்து போனதாக எண்ணி அவரைப் பிள்ளைகள் தேடுகிறார்கள் .
வழியில் அவர் சந்திக்கும் ஒரு பரோட்டா மாஸ்டருக்கும் (யோகிபாபு) ஒரு சிறுமிக்கும் (சாரல்) உள்ள பாசம் சொல்லப்படுகிறது . புரோட்டா மாஸ்டரான அப்பாவைப் பிரிய முடியாமல் ஹாஸ்டலில் இருக்கும் மகள் தவிக்க , ஹாஸ்டல் அருகில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அம்மாவோ பிள்ளையைப் பார்க்கப் போகும் அவனிடம் ”இங்க எதுக்கு வந்தீங்க ?” என்கிறாள் .சிறுமியின் அப்பன் என்று சொல்லிக் கொள்ளும் வேறு ஒருவனும் அவன் நண்பனும் வந்து பரோட்டா மாஸ்டரை அடிக்கின்றனர்.
நீதிபதி, பரோட்டா மாஸ்டர் இருவருக்கும் சிறுமி படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு அலுவலகங்களின் கதவைத் தட்டும் ஒரு பெண்ணின் ( அதிதி ) உதவி தேவைப்படுகிறது.
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/karu-33.png)
எல்லோரும் சந்திக்கும் போது நடந்தது என்ன என்பதே படம்.
பொதுவாக உலகப் படங்கள் என்று சொல்லப் படும் படங்கள் பலவற்றுக்கும் இன்னும் ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று இருக்கும்போது படம் முடியும் உத்தி இருக்கும் . அப்போது டிங் என்று ஒரு சத்தத்தோடு ரோல்லிங் டைட்டில் வரும் . அதே போல கதாபாத்திரங்களை முன்பே அறிமுகபடுத்தி மூஞ்சில் அடித்த மாதிரி சட் சட் என்று கட் செய்து அடுக்கி ஒரு நிலையில் அவர்களுக்கும் இருக்கும் இணைப்பைச் சொல்வார்கள் .அவை இந்தப் படத்திலும் உண்டு.
படத்தில் முதலில் கவர்வது மலை முகடுகளிலும் கடல் புறத்திலும் ஜொலிக்கும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு . படம் முழுக்கவே அவரது சிறப்பான பணி தொடர்கிறது
அடுத்து ஜி வி பிரகாசின் இசை . ஏகாம்பரத்துக்கு சில நொடிகள் கழித்து கவனம் கவரத் துவங்கும ஜி வி பிரகாஷ் படம் முழுக்கவே அசத்தி இருக்கிறார் . வைரமுத்துவின் வைர வரிகளில் அற்புதமான பாடல்களைக் கொடுத்ததோடு பின்னணி இசையிலும் நெகிழ்வுக் குமிழ்களைக் குமிழிட வைக்கிறார் ஜி வி பிரகாஷ்
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/karu-66.png)
உழவர் நலம், அவர்களது பிரச்னை, தமிழ் உணர்வு, அந்நியக் கலாச்சார மோகம் , கிராமிய உணர்வுகள் , ஏழை எளிய பாமர மக்கள் காட்டும் நிஜமான அன்பு , அவர்களின் கண்ணியம், மற்றோரை மதிக்கும் பாங்கு…. இவற்றை மெலிதாக பின்னணியில் பேசிக் கொண்டும் காட்டிக் கொண்டும் வரும் வகையில் ஜொலிக்கிறார் தங்கர் பச்சன். இவர் சொல்லி இருக்கும் கதை திரைகதையை விட இதுதான் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
ஒரு சில கோணங்கள் , ஒரு சில இடங்களில் வசன உச்சரிப்பு கொஞ்சம் சறுக்கினாலும் (அது அவரது குற்றம் அல்ல) நுண்ணிய உணர்வுகளோடு கூடிய .. அவரது பாணியிலேயே சொல்வது என்றால் அற்பு(b)தமான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா .
ஒரு சில இடங்களில் வழக்கம் போல , நகைச்சுவை இல்லாத வசனங்களை நகைச்சுவை என்று எண்ணி பேசி இருந்தாலும் சீரியஸ் காட்சிகளில் கனம் சேர்க்கிறார் யோகிபாபு . சிறப்பு
பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் இன்றைய உலகில் யோகிபாபுவின் கதாபாத்திரம் சொல்லப்பட வேண்டிய ஒன்று. சபாஷ் தங்கர் பச்சான். ஆனால் மனைவியின் கதாபாத்திரம் சொல்ல வேண்டிய முறையில் சொல்லப்படவில்லை. மற்றவர்கள் யோகிபாபுவை அடிக்கும்போது எல்லாம் அவரது எதிர்வினை யோகிபாபு கதாபாத்திரத்தை அடி முட்டாள் என்று உணர வேண்டிய நிலையை உருவாக்குகிறது.
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/karu-77.png)
ஒரே நேரத்தில் தேவதையாகவும் ராட்சசியாகவும் உணரத் தக்க வகையில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் அதிதி
மனமேனி மீது தேன் தூறலாகப் பொழிகிறாள் சாரல். தோற்றம் , மாறாத கிராமியத்தன்மை , பேச்சு, உடல் மொழிகள் யாவும் மனசுக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. வாழ்த்துகள் மகளே
எஸ் ஏ சந்திரசேகர் கவனம் கவர்கிறார் . அதே போல செம்மலர் அன்னமும்
மற்றவர்கள் எல்லாம் வருகிறார்கள். நிற்கிறார்கள் . பேசுகிறார்கள் திரும்புகிறார்கள் . போகிறார்கள் . அதிலும் சிலர் என்ன பேசுகிறர்கள் என்பது புரியவே இல்லை.
அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கும் முன்னாள் நீதிபதி , தன் மகனை நினைத்து பொங்குவதும் , தமிழ் மரபு பேசுவதும் அபத்தம் . அப்போதே படம் அந்நியமாகி விடுகிறது . எஸ் ஏ சந்திரசேகர் கதாபாத்திரத்தை வைத்து சப்பைக்கட்டு கட்டுவது பம்மாத்து. நீதிபதி கதாபாத்திரத்தை கடைசிவரை குறைகளற்ற நபராகவே காட்டி , பணத்துக்காக ஓடும் பிள்ளைகள் , அதில் அவர்களுக்கு வரும் பிரச்னைகள் , அதில் இருந்து அவர்கள் மீள ஒய்வு பெற்ற நீதிபதி என்ன செய்தார் ? அல்லது குடும்ப உறவுகளுக்கு அவர்களின் தன்மைக்கு ஏற்ப என்ன நீதி வழங்கினார் .. அதில் அவர் வென்றாரா ? தோற்றாரா? என்பது அல்லவா சொல்லப் பட வேண்டிய கதை- திரைக்கதை?
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/karu-2.png)
சரி , தங்கர் பச்சான் கதையை நாம் ஏன் மாத்தணும் என்று நினைத்தாலும் கூட, தான் செய்த நீதிபதியே சரி செய்யும் சூழல் திரைக்கதையில் வரும் என்று பார்த்தால் காலில் விழுந்து கதறி விட்டு , கையில் பையோடு அவர் பாட்டுக்கு நடந்து கொண்டே இருந்து விட்டு… .
நல்ல விஷயம் சொல்வதாலேயே ஒரு படம் ஓடும் என்று சொல்லி விட முடியாது . அப்படி என்றால் எதற்கு இவ்வளவு கஷ்டம்? 1330 திருக்குறளைத் திரையில் ஓட விட்டு பின்னணியில் விளக்கம் சொன்னால் போதுமே. அதை விட நல்ல படம் உலகில் எது இருக்க முடியும்?
இன்னொரு பக்கம் பாய்வே இல்லாமல் திரைக்கதை ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. சுமார் இரண்டேகால் மணி நேரப் படம் நான்கு மணி நேரப் படம் பார்த்த உணர்வைத் தருகிறது . யாராவது எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . சில காட்சிகள் வெகு நாடகத்தனம்.
சிட்னி வாழ் மகள் பக்கத்தில் பல காட்சிகளில் ஒரு உயரமான வெள்ளைக்கார ஆள் சும்மா நின்றபடியே இருக்கிறான். யாரா இருக்கும் என்று யோசித்துப் புரிந்து கொள்ளும்போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது . அவ்வளவு அலட்சியமான கதாபாத்திர அமைப்பு
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/karu-55.png)
நான்கு பேர் நிற்கும் ஒரு ஷாட்டில் ஒரு வார்த்தை கூடப் பேச வாய் திறக்காமல் இருக்கும் ஒரு சிறுமியின் முகத்தின் மீது நீண்ட ஒரு வசனத்தை பின்னணிக் குரல் சேர்ப்பில் போடுவது இன்று வெகுஜன ரசிகர்களுக்கே புரிந்து கிண்டல் செய்ய வாய்ப்புத் தரும்
திரை முழுக்கத் தெரியும் அதிதியின் குளோசப்பில் பாவம் என்று அவர் சொல்லி இருப்பதை பின்னணிக் குரல் சேர்ப்பில் துரோகம் என்று மாற்றி இருப்பதும் அப்படித்தான்
ஐந்தரை மணி நேரப் படத்தை இரண்டரை மணி நேரமாகச் சுருக்கிக் கொடுத்தேன் என்றார் எடிட்டர் லெனின் . அதுவே அவரது சாதனைதான் .
இந்தப் படத்துக்குள் ஒரு தரமான – நல்ல – கண்ணியமான – அதே நேரம் ஒரு மாபெரும் வெற்றிப் படத்துக்குமான திரைக்கதைக்கான வாய்ப்பு இருக்கிறது . ஆனால் அது எழுதப்படவே இல்லை
அப்புறம் எப்படி கருமேகங்கள் கலையாமல் இருக்கும்?