ஏஎம் ரத்னம் ,ஐஸ்வர்யா தயாரிப்பில் விஜய் சேதுபதி, தன்யா, பசுபதி, பாபி சிம்ஹா , சிங்கம் புலி நடிப்பில்,
ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கி இருக்கும் படம் கருப்பன் . பார்க்க எப்படி இருப்பான் ? பேசுவோம் .
யாராலும் ஜெயிக்க முடியாத ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்க்கும் மாயிக்கு (பசுபதி) அன்புள்ள மனைவி முத்து (காவேரி) . பாசமுள்ள தங்கை அன்புச் செல்வி (தன்யா) .
அண்ணன் தங்கைக்குள் அதீத பாசம் . முத்துவின் தம்பி கதிருக்கு அன்புச் செல்வி மேல் ரகசியமாய் தீவிரக் காதல்.
கல்யாணம் செய்து கொள்ளும் நாளை எண்ணி காத்திருக்கிறான் .ஜல்லிக்கட்டில் மாயியின் காளை இறங்க ,எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் . 
பக்கத்து ஊரில், குடித்து விட்டு ஊர் சுற்றிக் கொண்டு…… பார்ட் டைம்ந வேலையாக அநியாயத்தைத் தட்டிக் கேட்ட படி,
சித்தப் பிரம்மை பிடித்த அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் கருப்பனும் (விஜய் சேதுபதி ) களத்தில் .
‘எங்க மாட்டை யாரும் அடக்க முடியாது’ என்று மாயி சவால் விட , ;அடக்கினா உன் தங்கச்சிய கட்டி வைப்பியா?’ என்று ,
கருப்பனின் நண்பர்கள் கேட்க, மாயி அலட்சியமாய் சம்மதிக்க , காளையை கருப்பன் அடக்குகிறான் .
வாக்கு மாறும் பழக்கம் இல்லாத மாயி, சொன்னபடியே கட்டி வைக்கிறான் . கதிர் உள்ளுக்குள் தீப்பிடிகிறான் .
புத்தம் புது தம்பதி புரிதலோடு சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறது . இரட்டைக் குழந்தை கர்ப்பம் தரிக்கிறாள் அன்புச் செல்வி .
எனினும் எப்படியாவது மாயிக்கும் கருப்பனுக்கும் சண்டை மூட்டி பகையை பெரிதாக்கி தம்பதிகளை பிரித்து அறுத்துக் கட்டி ,
அன்புச் செல்வியை தான் திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறான் கதிர் .
பூசாரியும் சாதி சனத்தில் முக்கிய நபருமான பூசாரி (தவசி) அதற்கு உடந்தையாக இருக்கிறான் . .
மாயியும் கருப்பனும் முட்டிக் கொண்டு பகை பெரிதாகி அடிதடி வெட்டுக் குத்து என்று வளர்ந்து ,
அன்புச் செல்வி கணவனைப் பிரிந்து அண்ணன் வீட்டுக்குப் போய் , தற்கொலைக்கு முயன்று கர்ப்பம் கலைந்து… 
ஒரு நிலையில் கருப்பனைக் கொலை செய்யவே மாயி சம்மதம் சொல்ல , கதிர் காத்திருந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் களம் இறங்க ,
அப்புறம் என்ன நடந்தது என்பதே கருப்பன் .
இப்படியாக நாம் ஆயிரத்தெட்டு முறை பார்த்து சலித்து பழகிய கதை திரைக்கதையை கொடுத்துள்ளார்கள் .
கொஞ்சம் மாற்றினாலும் குல தெய்வக் குத்தம் ஆகி விடும் என்று நினைத்திருப்பார்களோ ? இருக்கலாம் … இருக்கலாம் !
வாடி வாசலில் இருந்து பாய்ந்து வராமல் காற்றில் குதித்து வரும் காளை , இடப் புறமாக வந்து திமிலைப் பிடிப்பவனின் இடது தோள்பட்டையில்,
இடது கொம்பால் பக்கவாட்டில் இடிக்கும் புத்திசாலிக் காளை என்று அந்த ஆரம்ப ஜல்லிக்காட்டுக் காட்சியில் விவரணைகள் அபாரம் .
கணிப்பொறி வரைகலை சொதப்பினாலும் படமாக்கல் சிறப்பாக பன்னீர் செல்வத்தின் பேர் சொல்கிறது .
அடக்கிய காளையை கீழே தள்ளாமல் தட்டிக் கொடுத்து ஓட விடுவது …. குத்திக் கொல்லும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட இருப்பது தெரியாமல் ,
அந்தக் காளைக்கு வைத்தியம் பார்க்கும் ஹீரோ பாத்திரம்… போன்ற காட்சிகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஜல்லி அடிக்கும் ,
பீட்டா உள்ளிட்ட பல அரைவேக்காடு அபிஷ்டுகளை மானசீகமாக செருப்பால் அடிக்கிறது . சபாஷ் இயக்குனரே .
தைரியமான யதார்த்தமான கதாநாயகி பாத்திரப் படைப்பும், பெண்மையின் கம்பீரம் தெரியும் முதலிரவுக் காட்சியும் ,
மனைவியை கருப்பன் மிஸ்டர் அன்பு என்று அழைப்பதும் அழகு .
அன்பு போன பிறகு பிரிவு தாங்காமல் சாப்பிடாமல் இருக்கும் ஆடு கோழிகளை அன்புவிடமே விட்டு விட்டு வருவது ..
வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது முற்றத்தில் பறவைகளுக்காக தானியத்தை இறைத்து விட்டு வருவது ….
இது போன்ற மண் சார்ந்த தமிழ்க் கலாச்சாரத்தின் மாண்புகளை சொல்லும் விசயங்களும் அருமை .
இப்படி கருத்து ரீதியாக அசத்தும்போது கதை திரைக்கதை ரீதியாகவும் பலமாக இருக்க வேண்டுமா ?
பாசமலர், மண்வாசனை, விருமாண்டி மற்றும் பல , பல பல , பலப்பல படங்களின் மிச்ச மீதிகளை சேகரித்து ஒன்றாக்கி உருட்டிக் கொடுத்த மாதிரி இருக்கிறது திரைக்கதை .
வழக்கமான காட்சிகள் என்றாலும் அதை விஜய் சேதுபதி கையாளும் விதமும் , தன்யாவின் கதாபாத்திரப் பொருத்தமும்,
கொஞ்ச நேரம் நம்மைக் கட்டிப் போடுவது உண்மை . ஆனால் ஒரு நிலைக்கு மேல் அதுவும கட்டு விட்டுப் போகிறது .
ஆட்டக்காரி மீது கருப்பன் காட்டும் மனிதாபிமானம் ஆரம்பத்தில் ஈர்க்க , அதை வைத்து எதாவது சிறப்பாக காட்சி வரும் என்று நினைத்தால்,
வழக்கமான குத்தாட்டத்தோடு குவளையைக் கவிழ்த்து விடுகிறார்கள் .
மாடு வியாபாரம் செய்யப் போகும் நாயகனை , விவசாயம் செய்ய நாயகி அழைக்க , அப்படியே அவனும் செய்ய, 
எதாவது ஈர்ப்பாக சொல்வார்கள் என்று பார்த்தால் , விளைந்த வயலை வில்லன் எரிக்கிறான் என்று வழக்கமான எரிச்சல் !
”அவனை டென்ஷன் பண்ண ஆயிரம் வழி இருக்கு . அதுக்காக வெளைஞ்ச வயலை நான் எரிக்க விரும்பல ” என்று ,
வில்லனும் கூட சொன்னால்தானே அது விவசாயத்தின் பெருமை சொல்லும் படமாக , நிஜமாக அமையும் ?
சக்திவேலின் ஒளிப்பதிவு ஒகே . செம ஓ பி அடித்து இருக்கிறார் இமான் . பாடல் , பின்னணி இசை என்று எதுவுமே ஈர்க்கவில்லை .
கருப்பன் என்று பெயர் வைத்த காரணத்துக்காக கருப்பா கருப்பா என்று முதல் வரியை ஆரம்பிக்கும் கொடுமையை எல்லாம் நிறுத்துங்க யுகபாரதி .
தங்கை மேல் அவ்வவ்வ்வ்வ்வளவு பாசம் உள்ள மாயிக்கு, மான அவமானம் காரணமாக கருப்பன் மீது கோபம் வரலாம்.
அவனை உதைக்கணும் என்று கூட தோன்றலாம் . தப்பில்லை ஆனா அதுக்கு ஒரு அளவு வேணாமா ஆபீசர்ஸ் ?
கருப்பன் முன்னால் மாயி அன்புச் செல்வியை அடிக்க அது பொறுக்காமல் கருப்பன் மாயியை உதைக்க ,
அந்த உதை தன் விழும்போது பாசம் உள்ள அண்ணனுக்கு சந்தோசம் அல்லவா வர வேண்டும் ?
நம் தங்கையை கருப்பன் எவ்வளவு பாசமாக பார்த்துக் கொள்கிறான் என்று தெரிந்தும் , 
அவனை பூசாரி எப்போதும் கேவலமாகப் பேசும்போதும் வேடிக்கை பார்க்கிறான் . கருப்பனை பல பேர் சூழந்து வெட்டிக் கொல்ல முயலும்போதும்,
பக்கவாதம் வந்தவன் போல சும்மா நிற்கிறான் …
ஆனால் தன்னைக் கொல்ல வந்தவர்களை கருப்பன் அடித்தால் மட்டும் போய் கருப்பனை அடிக்கிறான் .
கருமம், எழவு, கண்றாவி .. என்ன மாதிரியான டிசைன்யா இது ? கதாபாத்திரச் சீர்குலைப்பு. !
விளைவு ? முதல் பாதியில் பசுபதியின் அட்டகாசமான நடிப்பு நம்மைக் கவர்ந்தாலும் ஒரு நிலைக்கு மேல் அவர் காட்சியில் வந்தாலே, நமக்கு உச்சா வருகிறது .
இது கூட ஒகே …
ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் வரை அந்த ஊர்ல செல்போன் டவரே இல்லியா ? இல்ல சிக்னலே கிடைக்காதா ? அட போங்கப்பா … !
கிளைமாக்ஸ் காட்சியில் கிடைக்கிற முக்கியத்துவதுக்காக கதிர் கேரக்டரில் பாபி சிம்ஹா நடிக்க உற்சாகமாக ஒத்துக் கொண்டிருக்கக் கூடும் . இருக்கட்டும்
ஆனால் அந்த கடைசி நிமிடம் அன்புச் செல்வியை பார்த்து அவள் புருஷன் கருப்பன் முன்னாலேயே கண்ணடிப்பதும், ஐ லவ் யூ சொல்வதும் ..
இது போன்ற மண்சார்ந்த படத்தில் ரசிக்கிற மாதிரி இல்லை .முகம் சுளிக்கவே வைக்கிறது.
கருப்பன் .. வெளுத்துப் போனவன் .