ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி, நயன்தாரா, விவேக், ஸ்ரீ திவ்யா நடிப்பில்
கோகுல் இயக்கி இருக்கும் படம் காஷ்மோரா . படம் ஒன்ஸ் மோரா இல்லை நோ மோரா ? பாரக்கலாம் .
தனது சமயோசிதம் மற்றும் திறமையால் சக்தி வாய்ந்ததொரு பேய் ஓட்டுபவனாக பெயர் வாங்கி சம்பாதித்துக் கொண்டு இருப்பவன் காஷ்மோரா (கார்த்தி) .
அவனது தந்தை (விவேக்) தாய் , பாட்டி மற்றும் தங்கை (மதுமிதா ) என்று குடும்பமே சேர்ந்து செய்யும் தொழில் . (அதே நேரம் அவனுக்கு நிஜமாகவே சில சக்திகள் உண்டு என்பது போலவும் ஒரு தொனி படத்தில் இருக்கிறது)
பேய்கள் பற்றி ஆராயும் கல்லூரி மாணவி ஒருத்தி ( ஸ்ரீதிவ்யா) காஷ்மோராவோடு சேர்ந்து ஆவிகளை பற்றிக் கற்றுக் கொள்ள முயல்கிறேன் என்ற பெயரில் அவனை ஃபிராடு என்று நிரூபிக்க முயல்கிறாள்
இந்நிலையில் அவனை நம்பும் ஒரு அரசியல்வாதி (சரத் லோகித்) தன் வீட்டில் ரெய்டு வரும் நிலையில் ஐநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் , நகை
மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துப் பத்திரங்களை காஷ்மோரா வீட்டில் கொடுத்து வைக்க, அதை குடும்பத்தோடு லவட்டிக் கொண்டு ஓடுகிறது கஷ்மோரா குடும்பம் .
வழியில் பழமையான அரண்மனைக்குள் சிக்குகின்றனர் . அங்கு சில கொடிய ஆவிகள் இருக்கின்றன .
அதன் பின்னணியில் ஒரு வரலாற்று பிளாஷ் பேக் .
ராஜ நாயக் என்ற கொடூரமான சேனாதிபதி ( இன்னொரு கார்த்தி) இளவரசி ரத்னமகாதேவி (நயன்தாரா) மீது ஆசைப்பட்டு அவள் ஜோடியைக் கொன்று விட்டு அவளை அடைய முயல்கிறான் .
ரத்னா ராஜ் நாயக்கை கொல்கிறாள்.
கொடூர பேயாக இருக்கும் ராஜ் நாயக் ஒரு முக்கிய தினத்தில் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்த சிலரை கொண்டு மீண்டும் உயிர் பெற்று மீண்டும் பிறந்து சிறுமியாக இருக்கும் ரத்னாவை கொலை செய்ய காத்திருக்கிறான் .
காஷ்மோரா மற்றும் அவன் குடும்பத்தினர் அனைவரும் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் . அந்த குறிப்பிட்ட முக்கிய தினமும் வர, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
கஷ்மோரா வேடத்தில் இயல்பாக சிறப்பாக நடித்து இருக்கும் கார்த்தி ராஜ் நாயக் ஆக பிரம்மிக்க வைத்து இருக்கிறார் . குரல் , நடை உடை பாவனை எல்லாம் அபாரம் . கிளாஸ் கார்த்தி .
அதுவும் ராஜ் நாயக் ஆக நடக்கும் ஆணவ நடை அருமை .
இளவரசி ரத்னாவாக அசத்தி இருக்கிறார் நயன்தாரா . அழகும் நடிப்பும் அபாரம . ஸ்ரீதிவ்யா ஒகே .
காஷ்மோராவின் அப்பாவாக விவேக் காமெடியில் கை கொடுக்கிறார் . மதுமிதா ஒவ்வொரு ஷாட்டிலும் ரசிக்கும்படி நடிக்கிறார் பாட்டியாக நடிப்பவரும் சிறப்பு .
படத்தின் மிகப் பெரிய பலம் ராஜீவனின் கலை இயக்கமும் நிஹார் தவான் , அனு வரதன், பெருமாள் செல்வம் ஆகியோரின் உடை தேர்வும் , மாரியப்பனின் மேக்கப்பும்தான்.
அதே போல சிறு சிறு நேர்த்திக் குறைவு தென்பட்டாலும் ஐஜின் ஸ்டாலின் சரவணன் குழுவின் விஷுவல் எஃபெக்ட்டும் விழிகளை விரிய வைக்கிறது .
ஓம பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை
பாடல்கள் சுமார்தான் என்றாலும் பின்னணி இசையில் பின்னிப் பெடல் எடுக்கிறார் சந்தோஷ் நாராயணன் .
பேய் பயம் , காமெடி , பிரம்மாண்டம் , தேர்ந்த நடிகர்கள் என்று ஒரு பாதுகாப்பான ரூட் பிடித்துப் போயிருக்கிறார் இயக்குனர் கோகுல் .
ஆனால் கதை திரைக்கதையில் இன்னும் நேர்த்தியும் ஒழுங்கும் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
மொத்தத்தில் காஷ்மோரா … விஷுவல் ஜீரா .