
கடலூர் மீனவர் சங்கத்தின் தலைவராகவும் மிகப் பெரிய ரவுடியாகவும் இருப்பவன் தம்பா (மது சூதன்). தம்பாவின் சங்கு வேலைப்பாடு தொழிற்சாலையில் பணியாற்றும் ஞானவேல் என்பவன் (மைம் கோபி) , பிரிந்து போய் தனியாக தொழில் செய்ய ,
அவனது கடையை அடித்து துவம்சம் செய்கிறான் தம்பா . தட்டிக் கேட்கும் அவனது தம்பி அமுதவாணனையும் (விஷால்) ஜெயிலில் தள்ளுகிறான் .
ஜெயிலில் இருந்து வரும் அமுதவாணன், பண பலம் இல்லாத நிலையில் ஒரு மாற்றம் விரும்பி வெளிநாடு போய் சம்பாதித்துக் கொண்டு பல வருடங்களுக்கு பிறகு வருகிறான் . தான் காதலிக்கும் மீனுக் குட்டியுடன் (கேத்தரின் தெரசா ) திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான் .
அந்த நிலையில் தம்பா கொல்லப் படுகிறான் . ‘என் கணவனின் கொலைக்கு நீதி கிடைக்காமல் பிணத்தை வங்க மாட்டேன்’ என்று தம்பாவின் மனைவி (லக்ஷ்மி ராமகிருஷ்ணன்) சபதம் போடுகிறாள்.
யாரவது ஒருவரைக் குற்றவாளி என்று சொல்லி அரெஸ்ட் செய்துவிட்டு கேசை முடித்து பிணத்தை டிஸ்போஸ் செய்ய முடிவு செய்யும் ஓர் அயோக்கிய போலீஸ் அதிகாரி , சந்தேகத்துக்கு உரியவர்களில் யார் உடனடியாக சிக்குவார் என்று வலை விரிக்கிறான் .
அமுதவாணனின் நண்பர்களில் தம்பாவின் தீவிர விசுவாசி ஒருவனும் உண்டு . சில வருடங்களுக்கு முன்பு அமுதவாணன் தான் தம்பாவால் பாதிக்கப்பட்டபோது ‘பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து தம்பாவைக் கொலை செய்வேன்’ என்று கோபமாகச் சொன்னதை நினைவு படுத்தி, அமுதவாணன் மீது போலீசில் புகார் கொடுக்கிறான் அந்த நண்பன் .
அமுதவாணன் , அவனது அண்ணன், அண்ணி , அவர்களது பிள்ளை , தம்பாவால் முன்பு காலை இழந்த அப்பா , அப்பத்தா , மீனுக் குட்டி இவர்களில் யார் கிடைத்தாலும் இழுத்து சிக்க வைத்து அமுதவாணனை அமுக்கி உள்ளே தள்ள போலீஸ் துடியாய் இறங்க , இன்னும் மூன்று நாளில் திருமணம் உள்ள நிலையில் அமுதவாணன் என்ன செய்தான் என்பதே கதகளி .
விஷால் வழக்கம் போல . ஃபாரின் ரிட்டர்ன் பந்தா மட்டும் எக்ஸ்ட்ரா சுவராஸ்யம் . சபாஷ் .
முதல் நாள் அடித்த காக்டெயில் போதை முழுசாக இறங்காத பெண்ணின் காலை நேர ஹேங் ஓவர் போல ஆரம்பத்தில் சில காட்சிகளில் கேதரின் எக்ஸ்பிரஷன் கொடுக்கிறாரே .. ஏ ஏ ஏ ஏ ஏ ன்னன்ன்ன்ன்? ஆனாலும் போகப் போக கவர்கிறார் .
பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவு கதை சூழலின் திகிலோடு காட்சி சூழலை பொருத்துவதில் மகத்தான வெற்றி பெறுகிறது . ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசையும் மிக சிறப்பாக வந்துள்ளது
ஒரு பிரச்னையில் சந்தேகம் உள்ள நபர்களின் மீது எல்லாம் கதையை ஓட்டி , இவர்தான் கொலை செய்திருப்பாரோ என்று படிப்பவர் நம்பும்படியாக சில சம்பவங்களை சில கதாபாத்திரங்கள் மீது அமைத்து… பின் அவர்(கள்) இல்லை என்று சொல்லி,
கடைசியில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நபரையே குற்றவாளியாகக் காட்டுகிற — அட்டகாசமான பழைய தமிழ் துப்பறியும் நாவல்களின் (குறிப்பாக தமிழ்வாணன் ) — உத்தியை பயன்படுத்தி இருக்கிறார் பாண்டிராஜ் . நல்ல விஷயம்
ஆனால் இது விஷால் நடிக்கும் படத்துக்குப் பொருந்துமா ?
என்னதான் பாண்டிராஜ் அருமையாக பில்டப் கொடுத்தாலும் ‘விஷால் இருக்க பயமேன் ? கடைசில அவர்தான் ஜெயிப்பாரு’ என்று ரிலாக்ஸ் ஆகி படம் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம் . அந்த அலட்சியத்தின் பிடரியில் பொளேர் என்று போடும்படி படத்தில் எதுவும் நடக்கவில்லை என்பதும் வருந்தத்தக்கதே .
இந்தப் படத்தில் விஷால் போன்ற ஆக்ஷன் ஹீரோ இல்லாமல் ஒரு சாமானிய — அல்லது புது நடிகர் இந்தக் கதையில் நடித்து ஒருவேளை என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் சீட்டு நுனியில் ரசிகன் ஒருவேளை உட்கார்ந்து இருப்பான் . படம் இன்னும் நன்றாக போய் இருக்கும் .
படத்தில் வரும் அந்த ராங் நம்பர் காதல் எபிசோடை வெட்டி எறிந்து விட்டு , எடுத்த உடன் தம்பா கொலை .. அப்புறம் தம்பா யார் என்ற விவரம் அடுத்து அவனது எதிரிகள் அவர்களது பின்புலம் , அதில் முக்கியமாக அமுதவாணன் மற்றும் அவனது காதல் கல்யாண பிரச்னை , ஒவ்வொருவர் மீதும் வரும் சந்தேகம் , அப்புறம் சந்தேக விலக்கம்…..
இப்போது படத்தில் வருவது போல ரொம்பவும் நொந்து நூடுல்ஸ் எல்லாம் ஆகாமல் இயல்பாக நடந்து கொள்ளும்படியாக விஷால் காதாபாத்திரம் , ஹீரோயின், இந்த கதைப்போக்கு அனுமதிக்கும் அளவுக்கு அளவுக்கு காதல், காமர்ஷியல் என்று போய் …
அதன் பிறகு இப்போது படத்தில் வரும் கிளைமாக்ஸ் என்று வந்திருந்தால் படம் பிரம்மாதமாக வந்திருக்கும் வாய்ப்பு உண்டு .படத்தில் இப்போது விஷால் கேரக்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் அந்த கிளைமாக்சுக்கு பொருந்தவில்லை.
ஒரு படைப்பாளி, திரைக்கதை டுவிஸ்டுகளில் ரசிகனை ஏமாற்றுவது என்பது, முறைமாமன் செய்யும் கிண்டலை ரசிக்கிற அத்தை மகள் மாதிரி , ரசிகனே ரசிக்கும்படியாக இருக்க வேண்டுமே தவிர , ரோட்டில் போற பொறுக்கி கிண்டல் செய்யும் விதமாக இருக்கக் கூடாது .
எனினும் …. தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஓர் அயோக்கியனின் மிரட்டலுக்கு பயந்து ஒரு பாட்டி, கால் இழந்த அப்பா , மகன் , மகனின் மனைவி , கைக்குழந்தை…. என்று ஒரு நடுத்தரக் குடும்பம்,
எங்கும் தங்க முடியாமல் எங்கு போவதெனவும் தெரியாமல் காரிலேயே சுற்றிக் கொண்டிருப்பதன் பதட்டத்தை , அவலத்தை ,வலியை பதட்டத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்த வகையில் சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ் .
கதகளி… கத(ம் கதம்) நிறைய ; ஆனால் களி(ப்பு) குறைவு