லக்கி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து இயக்கி படத் தொகுப்பு கலை இயக்கம் செய்து சாம் கான் என்பவர் கதாநாயகனாகவும் நடிக்க ,
எலிசபத், திவ்யாங்கனா ஜெயின், மாறி முத்து, ராமதாஸ் ஆகியோர் உடன் நடித்திருக்கும் படம் காதல் மட்டும் வேணா .
படம் வேணுமா வேணா வா ? பேசலாம் .
இரவில் பஸ்சுக்குள் வைத்து ஒரு இளம் பெண்ணையும் ஆணையும் சில ரவுடிகள் அடித்துத் துவைக்கிறார்கள் . பெண் கற்பழித்துக் கொலை செய்யப்படுகிறார் .
தற்கொலை செய்து கொள்ள முயல்வோருக்கு நம்பிக்கை தரும் சேவை செய்யும் ஓர் அமைப்புக்கு வந்த போனை அங்குள்ளொரு நபர் யாருக்கோ டைவர்ட் செய்ய , அது நாயகன் போனுக்கு வருகிறது .

அவன் ஆறுதல் கூற அவள் ஆறுதல் அடைய , அடுத்து நேரடி சந்திப்பு . பழகுகிறார்கள் . காதலில் உருகுகிறார்கள் . ஒரு நிலையில் அவள் சட்டென்று காணமல் போக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறான் நாயகன் .
அந்தப் பெண் பல மாதங்களுக்கு முன்பே கற்பழித்துக் கொலை செய்யப்பட ( முதல் காட்சி ) பெண் என்பது தெரிய வருகிறது .
அவன் வெளியே வர , அவளது குரல் அவனை அழைக்கிறது .
— இந்த இடத்தில் தான் இதுவரை நாம் பார்த்த எல்லாமே, நாயகன் நடித்து இயக்கிக் கொண்டு இருக்கும் சினிமா என்பதை சொல்கிறார்கள் .

அன்றைய படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாயகன் பாலியல் பெண் தேடி, இரவில் பயணிக்கிறான் . வழியில் போலீசிடம் சிக்குகிறான் .
ஒரு வழியாக விடுபட்டு கிளம்ப ,
அந்த போலீஸ்காரர் கத்துகிறார் , ” சார் இவன் யாரு தெரியுதா ? மேற்படி பேருந்து கொலை கற்பழிப்புய் வழக்கில் உயிர் பிழைத்த பையன் ” என்று!
இப்போது மீண்டும் பேருந்து சீன் காட்டப்பட , பேருந்தில் இருந்து ரத்தம் வழிய நாயகன் இறங்க .. மீதிக் கதையை இரண்டாம் பாகத்தில் சொல்வார்களாம்.
மிகக் குறைந்த நடிக நடிகையர் , மிகக் குறைவான செலவு , என்ற வகையில் படத்தை எடுத்திருக்கிறார் சாம் கான் . பாராட்டலாம்.

சொந்த செலவில் தனக்கு ஒரு ஷோ ரீல் எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது .
பேருந்தில் நடக்கும் கற்பழிப்புக் கொலை சம்பவத்தில் — ஆரம்பத்தில் பெண்ணை மட்டும் காட்டி அவள் செத்துப் போவதை காட்டி அவள் பேயாக வரும் உணர்வை படம் பார்ப்பவருக்கு ஏற்படுத்தி விட்டு ,
மறுபக்கம் அடிபடும் இளைஞன்தான் நாயகன் என்பதை ஆரம்பத்தில் மறைத்து கடைசியாக சொல்லும் உத்தி சிறப்பு .
நாயகன் எடுக்கும் படத்தில் காதலியாக வரும் எலிசபத் நிஜ காதலியாக வரும் திவ்யாங்கனாவை விட நன்றாக இருக்கிறார் . (மாறாக அல்லவா இருக்க வேண்டும் ?)

ஜே எஸ் கே வின் ஒளிப்பதிவு சிம்ப்ளி ஒகே .
இரண்டாம் பாதியில் தேவையில்லாமல் காட்சிகள் நீள்கின்றன . குறிப்பாக நாயகனோடு காரில் வரும் உதவி இயக்குனர் பல பாடல்களை பாடிக்கொண்டே வருவது . ( அப்படி இருந்தும் படத்தின் நீளம் நூறு நிமிடம் மட்டுமே !)
இரண்டாம் பாகத்தில் பாருங்க என்று சொல்கிறாரே .. அதையும் முதல் பாகத்திலேயே சொல்லி இருந்தால்தானே இது ஒரு முழுமையான பாடமாகவாவது வந்திருக்கும்?