இந்தப் படத்துக்காக முதன் முறையாகக் கிராமத்து நாயகனாகக் களமிறங்கி இருக்கும் நரேன், காமெடி நாயகனாக நடித்து இருக்கிறார் . கெட்டப் தொடங்கி கேரக்டர் வரை மிக வித்தியாசமான நரேனை இந்தப் படத்தில் பார்க்க முடியுமாம்
”கதையும் காமெடியும் பின்னிப் பிணைஞ்ச புது மாதிரியான திரைக்கதைதான் ‘கத்துக்குட்டி’யோட ஸ்பெஷல். என் வாழ்நாளுக்கும் நான் பெருமைப்படக் கூடிய படம் இது. வழக்கமான வார்த்தைகளா இதை நான் சொல்லலை.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், இந்தப் படத்தில் நரேனின் தந்தையாக குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் நடிக்க ஒத்துக் கொண்ட முதல் படமே இதுதான்.
“படத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்வியலை சொல்கிறோம் . மீத்தேன் திட்டத்துக்கு எதிரான குரலை பதிவு செய்கிறோம் .இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 திரை அரங்குகளில் ‘கத்துக்குட்டி’ வெளியாக இருக்கிறது” என்ற இயக்குனர் சரவணனிடம்…
” அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய் நடித்த புலி திரைப்படம் வெளியாக இருக்கிறது . அந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறுகிறீர்களே . புலி படத்தோடு மோதுவதாக விளம்பரப்படுத்தி பரபரப்பை உண்டாக்கி விட்டு, பின்னர் கடைசி நேரத்தில் ‘ தியேட்டர்கள் போதுமான அளவில் கிடைக்காத காரணத்தால் படத்தை தள்ளிப் போடுகிறோம்’ என்று அறிவிப்புக் கொடுக்கத் திட்டமா?” என்று கேட்டேன் நான் .
இதற்கு முதலில் பதில் சொன்ன நடிகர் நரேன் ” சில மாதங்களுக்கு முன்பு இளையதளபதி விஜய்யை நான் சந்தித்த போது ,’ உங்க புலி படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு சொல்லுங்க சார். அது வராத நாளா பார்த்து எங்க படத்தை ரிலீஸ் செய்யணும்’னு கேட்டேன் . விஜய் சார் சிரிச்சுகிட்டு ‘ எல்லா படமும் பெரிய படம்தான் நரேன் . புலி எப்போ ரிலீஸ்னு இன்னும் முடிவு பண்ணல’ன்னு சொன்னார் .
நாங்க அக்டோபர் 1 என்று தேதி முடிவு பண்ணினோம் . இப்போ புலி படமும் அதே தேதிக்கு வருது . அட, அந்த படத்துக்கு போற ஆடியன்ஸ் ஹவுஸ்புல் ஆன பிறகு அப்படியே எங்க படத்துக்கு வரட்டுமே சார்.புலி கூட ரிலீஸ் ஆகும் இந்த பூனைக் குட்டியும் பிழைச்சுக்கும் ” என்றார் .
அதையே ஒட்டி பதில் சொன்ன இயக்குனர் சரவணன் ” கண்டிப்பா படம் அக்டோபர் 1 ஆம் தேதி வந்துடும் . நரேன் சார் சொல்ற மாதிரி விஜய் சார் படத்தை பார்க்க வர்றவங்க அப்படியே எங்க படத்தையும் பார்த்துட்டு போகட்டும் . கத்தி படத்துல விஜய் சார் சொன்ன விசயங்களின் தொடர்ச்சியாதான் எங்க கத்துக்குட்டி படமும் இருக்கும் . அதனால் விஜய் சார் ரசிகர்களுக்கு எங்க கத்துக்குட்டி படமும் பிடிக்கும் ” என்கிறார் நம்பிக்கையோடு.
வாழ்த்துகள் சரவணன் !