இந்த கத்துக்குட்டி சத்துக் குட்டியா இல்லை வெத்துக் குட்டியா? பார்க்கலாம் .
எம் ஏ படித்து இருந்தாலும் விவசாயம்தான் பார்க்க வேண்டும் என்ற உறுதியோடு வாழும் இளைஞன் அறிவழகனுக்கு (நரேன்) குடிப்பழக்கமும் அதனால் செய்யும் சலம்பல்களும் ஒரு குறை என்றாலும் மற்றபடி அவன் மிகச் சரியானவன் . அவனது நண்பன் ஜிஞ்சர் (சூரி) .
அறிவழகனின் தந்தை சந்தானம் (இயக்குனர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் ), தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக நாற்பது வருடங்களாக உண்மையாக உழைப்பவர் . இதுவரை எந்தப் பலனையும் பெறாதவர் .
ஆரம்பத்தில் புவனாவும் அவளது தந்தையும் அறிவழகனை தவறாகவே பார்க்கின்றனர். ஒரு நிலையில் அவன் நல்லவன்; கொள்கை விசயங்களில் தம்மைப் போன்றவன் என்பதை உணர்கின்றனர் . ஆனாலும் அப்பா சந்தானம் பார்வையில் மட்டும் அறிவழகன் ஓர் உருப்படாத மகன்,
இந்த நிலையில் தேர்தல் வருகிறது.
இதுவரை கட்சிக்காகவே உழைத்த சந்தானம், இந்த முறையாவது தனக்கு சீட் கிடைக்காவிட்டால் , தனது அரசியல் வாழ்வே வீண் என மன நிலையில், எப்படியாவது எம் எல் ஏ சீட் வாங்கி விடும் முடிவில் சென்னைக்குப் போகிறார் .
இதே பாணியில் இளைஞருக்குதான் சீட் என்று ஆளுங்கட்சியும் முடிவெடுக்க, சந்தனத்தின் உறவினரான அந்த ஆளுங்கட்சிப் பிரமுகருக்கோ குழந்தை இல்லாத குறை . எனவே கட்சியில் அவருக்குப் பிடிக்காத ஒருவரின் மகனுக்கு சீட் கொடுத்து, அவனை எம் எல் ஏ ஆக்கினால் ராஜ்யசபா சீட் தருவதாக கூறுகிறது கட்சி மேலிடம் .
தேர்தல் பிரச்சாரம் துவங்க , அறிவழகனுக்கு ஆதரவு அதிகரிக்கிறது .
இந்த நிலையில் மீத்தேன் பரிசோதனைக்காக ஒரு விவசாயியின் நிலத்தை அதிகாரிகள் துளையிட , அதை புவனாவின் தந்தை தடுக்க, அவரை அதிகாரிகள் அடித்து அவமானப்படுத்துகினறனர் .
ஆளுங்கட்சி சார்பில் நிற்கும் வேட்பாள இளைஞன், புவனாவின் தந்தை மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தனது உயிரை தியாகம் செய்ததை மறைத்து , அறிவழகனுக்கும் புவனாவுக்கும் இருந்த காதலை ஏற்க முடியாமல் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கதை கட்டி விடுகிறான் .
பிரச்சாரம் செய்யவே முடியாத அளவுக்கு அறிவழகனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது .
ஜெயித்தது யார் என்பதே இந்தப் படம் .
படத்தின் பெரிய பலம் கதையிலேயே இருக்கிறது . ஆம் ! பூத்தேன் கொழிக்கும் காவிரி டெல்டாப் பகுதியில் மீத்தேன் எடுக்க முயலும் அராஜகத்துக்கு எதிராக படம் எழுப்பும் உரிமைக் குரல் போற்றுதலுக்குரியது .
அது மட்டுமல்ல….
“விவசாயியின் பட்டினிச் சாவு என்பதும் தற்கொலை என்பதும் அவன் சாப்பிட முடியவில்லையே என்ற வறுமையால் வரும் சாவு அல்ல. பலபேருக்கு சோறு போடும் விவசாயத்தை ஒழுங்காக செய்ய முடியவில்லையே என்ற விரக்தியாலும் அவமானத்தாலும் வருவது .
“விவசாயியின் வேதனை மரணனங்களையெல்லாம் கள்ளக் காதல் , வயித்து வலி , குடும்பத் தகராறு .. இப்படி பொய்யான காரணம் சொல்லி அசிங்கப்படுத்துற கொடுமை இந்த நாட்டில் தொடர்ந்து நடந்துகிட்டுதானே இருக்கு ” என்று மருகும் இடம் ஆகட்டும் ….
“கர்நாடகா தண்ணி கிடைக்கவே இல்ல . கேரளா தண்ணியும் வரவே இல்ல . ஆனா பாண்டிச்சேரி தண்ணி மட்டும் பாயுதடா ஆறாக ” என்று, பாடல் வரிகளும் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்புகின்றன
மீத்தேன் திட்டத்தால் விவசாயம் அழியப் போகும் விரக்தியில் புவனாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ளும் காட்சி ஒரே நேரத்தில் மனதில் கனத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது .
செல்போன் டவர்களால் சிட்டுக்குருவி இனம் மட்டுமே அழியும் என்றுதான் எண்ணிக்கொண்டு இருந்தோம். ஆனால் இந்தப் படத்தில் செல்போன் டவர்களால் அழியும் பறவைகள் மற்றும் உயிர்கள் குறித்து ஒரு நீ ஈ ஈ ஈ ஈ ண் ண் ண் ட லிஸ்ட் கொடுக்கிறார்கள் பாருங்கள்! அப்படியே விதிர்விதிர்த்துப் போகிறது நமக்கு .
தஞ்சை நஞ்சைப் பகுதியில் வாழும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள்…. இவை எல்லாம் இயற்கையோடு இணைந்து வாழும் காட்சிப் பதிவுகளை படம் முழுக்கப் பதித்து மனதைக் கொள்ளை கொள்கிறார் இயக்குனர் சரவணன் .
ஒரு சமூக அக்கறை உள்ள படத்தில் நாயகன் நாயகியின் கொள்கைப் பார்வைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் படம்.
பேச்சில் இருக்கும் மலையாள வாடை உறுத்தினாலும் அறிவழகன் கேரக்டரை, உணர்ந்து நடித்துள்ளார் நரேன் . கிராமத்துப் பாவாடை சட்டை இளம்பெண்ணாக சிருஷ்டி டாங்கே சாரப் பார்வை அழகு .
சந்தானமாக நடித்திருக்கும் ஜெயராஜ் ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் போகப்போக கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார் .
ஆளுங்கட்சி அரசியல்வாதியாக வரும் ஞானவேலின் பாத்திரப் படைப்பும் அதை அவர் நடித்திருக்கும் விதமும் சூப்பரோ சூப்பர் . படத்தின் கடைசியில் அவர் பேசும் வசனம் , இந்தப் படத்தின் மணி மகுடம் .
ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் கத்தரிக்கோலை ஸ்ட்ராங் ஆகப் போட்டு இருக்கலாம் . கர்நாடகா லாரிக்கரனுடன் குடி போதையில் அறிவழகனும் ஜிஞ்சரும் சண்டை போடும் காட்சி படாததின் பெரிய திருஷ்டி . மல்லாக்கப் படுத்துக் கொண்டு நம் மேல் நாமே எச்சில் துப்புவது போன்ற காட்சி அது . ஏன் சரவணன் ஏன் ?
ஒரு நல்ல அரசியல்வாதியின் தோல்வி உணர்வின் வலியை மிக அருமையாகப் பதிவு செய்யும் வகையில் மக்களின் மனங்களை இந்தப் படம் அசைக்கும் .
இந்தக் காலகட்டத்தில் இந்த மாநிலத்துக்கு மிகத் தேவையான படம் இது .
மொத்தத்தில் கத்துக் குட்டி…. சிங்கக் குட்டி .
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
இரா. சரவணன் , ஞானவேல்