BOFTA மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிக்க,
ஜோதிகா விதார்த் நடிப்பில் ராதா மோகன் இயக்கி இருக்கும் காற்றின் மொழி படம் அக்டோபர் 16 ஆம் நாள் திரைக்கு வருகிறது .
அதையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டது .
வண்ண மயமான படமாக்கலில் ஜோதிகா , விதார்த் நடிப்பு சிறப்பாக இருந்தது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ராதாமோகன் பேசும்போது, “‘காற்றின் மொழி’ படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும்.
இந்தப் படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள். அனைவரும் அவர்களுடைய முதல் படத்தில் நடித்தது போல நடித்துக் கொடுத்தார்கள்.
இப்படத்திற்கு A.H.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர். பார்த்திபன் நன்றாக வசனம் எழுதியிருக்கிறார்.” என்றார்
கலை இயக்குநர் கதிர் பேசும்போது, “தொடர்ந்து ராதாமோகனிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கு எல்லோரும் உதவி புரிந்தார்கள்.” என்றார்
வசனகர்த்தா பார்த்திபன் , “‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக அவரிடம் பேசினேன்.
அவருடைய இப்படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. படத்தில் முழுக்க முழுக்க,
ஜோதிகாவுடைய ஆதிக்கம் தான். நடிப்பில் ராக்ஷஸி போல அவர் நடித்திருந்தார்.” என்றார்
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா , ” நான் பணியாற்றிய படங்களிலேயே இந்தப் படம்தான் அமைதியாக பணியாற்றிய படம்..
ஒவ்வொரு படம் பணியாற்றும்போதும் பயத்தோடுதான் பணியாற்றுவோம். ஆனால் இதில் அது இல்லை விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். ” என்றார்
நடன இயக்குனர் விஜி சதீஷ், ” லட்சுமி மஞ்சு இருந்தாலே அந்த சூழ்நிலையே கலகலப்பாக இருக்கும். ராதாமோகனுடன் இரண்டாவது படம் எனக்கு.
ஜோ வுக்கு செனோரீட்டா பாடலில் நடன உதவியாளராக பணியாற்றினேன் . பிறகுஅவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
ராதாமோகன் ஜோவுடன் என்று கூறியவுடனேயே அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஜோதிகா மிகவும் திறமையானவர்.
ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே சிறப்பாக நடிக்கக் கூடியவர் “என்றார்.
இணை தயாரிப்பாளர் விக்ரம் குமார் , “ராதாமோகன் இயக்கம், ஜோதிகா நடிக்கிறார் என்று கூறியவுடனேயே நான் எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டேன்” என்றார்.
மனோபாலா , ” படம் முழுக்க ஜோதிகாவை சுற்றியே நடக்கும். ஜோதிகாவுடன் நடிக்கம்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், பத்து மடங்கு பாவனை காட்டுவார்” என்றார்
ஒளிப்பதிவாளர் மகேஷ், ” எல்லோருடைய கனவுப் படம்இது எந்த தடையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது.
ராதாமோகன் படத்திலேயே மொழி தான் எனக்கு மிகவும் பிடித்த படம். இந்தப் படத்தின் திரைக்கதை நன்றாக வந்திருக்கிறது.”என்றார்
எம்.எஸ்.பாஸ்கர் தன் பேச்சில், ” ராதாமோகனின் அனைத்துப் படங்களிலும் நான் இருப்பேன். அப்படி இல்லாமல் போனால் அதற்கு நான் தான் காரணம்.
வேறு எங்காவது மாட்டிக் கொண்டிருப்பேன். எனக்கென்று ஒரு கதாபாத்திரத்தைக் கொடுப்பது வரப்பிரசாதம்.
மொழிக்கு பிறகு இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறேன். அவர் எனக்கு சொந்த தங்கை மாதிரி.
அவர் கூறி எனக்கு ஒரு மலையாளப் படம் படம் கிடைத்தது. அன்பும், பாசமும் உள்ள ஒரு நண்பர் குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் குமரவேல் , “இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்கள் உடன் நான் ஏற்கனவே பணியாற்றியிருக்கிறேன்.
எனக்கு பெரும்பாலான காட்சிகள் ஜோதிகா மற்றும் லட்சுமி மஞ்சுவுடன்தான் இருந்தது. இருவரும் எளிமையாக பழகினார்கள். , சக நடிகரை மதித்து நடந்தார்கள்.
எனக்கு நடனம் வராது என்று கூறினேன். அதற்கு நடன இயக்குநர் நீங்கள் ஆட வேண்டாம். நடந்தது வந்தால் போதும்
-என்று சொன்னார். காட்சியைப் பார்த்தபோது பொருத்தமாக இருந்தது” என்றார் .
நடிகை லட்சுமி மஞ்சு, “இந்தப் படத்தில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால் என்னால் கூற முடியாது. நடித்த அனுபவமே இல்லாமல்,
முழுக்க முழுக்க வேடிக்கையாகத் தான் இருந்தது. ஜோதிகாவின் மிகப் பெரிய ரசிகை. இருப்பினும், ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருக்கிறது.
இப்படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரத்தில் என்னைத் தவிர யாரும் நன்றாக இருந்திருக்கமாட்டார்கள்.
அந்தளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் நன்றாக அமைந்திருக்கும்.’என்றார்.
விதார்த் பேசும்போது, “தனஞ்செயன் என்னிடம் ராததாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்க ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது.
நடிக்கிறீர்களா? என்று கேட்டார். ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்கு காத்திருந்தேன். அதேபோல என் அம்மாவிற்கும், மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா.
ஆகையால் உடனே ஒப்புக் கொண்டேன். ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போதே,
ஏன் நான் ஒப்புக் கொண்டேன் என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது
குமரவேலிடம் ராதாமோகனைப் பற்றி கேட்டேன், ‘அவர் எப்படிப்பட்டவர்? கோபப்படுவாரா?’ என்று. ‘அப்படியெல்லாம் கிடையாது’ என்று அவர் கூறினார்.
இருந்தும் கொஞ்சம் பயத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன். அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது.
அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. ஆனால் முதல் ‘டேக்’ கிலேயே சரியாக வந்தது.
அதேபோல படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா எப்படி பழகுவார்? என்று சந்தேகம் இருந்தது.
ஆனால், அவரோ என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாக பழகினார்.
இந்த படத்தில் நான் நன்றாக நடித்தேன் என்றால் அதற்கு ‘ஜோ’ தான் காரணம்.
ஜோதிகாவிற்கு இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும்.படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடனமாடியிருக்கிறேன்
ராதாமோகனின் அடுத்தடுத்த படத்தில் சிறிய வேடமென்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்”. என்றார்.
தனஞ்செயன் பேசும்போது, “BOFTA -வில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக கூறுவேன்.
ஏனென்றால், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தயாராக இருந்தால்தான்,
ஒரு படம் இவ்வளவு வேகமாகவும், இடைவெளி இல்லாமலும் குறுகிய காலத்தில் உருவாக முடியும் என்பதற்கு இந்தப் படம் உதாரணம்.
அதிலும் ஜோதிகாவிடம் நடிக்க கேட்கும்போதே அவர் உடனே ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கான தேதிகளையும் தாராளமாக கொடுத்தார்.
அதேபோல அனைத்துக் காட்சிகளையும் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்துவிட்டார்.
இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்” என்றார்.
ஜோதிகா தன் பேச்சில், “ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். ஆனால் அந்த துமாரி சுலு இந்திப் படத்தை நான் பார்த்ததே கிடையாது.
கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். இப்படம் ஒரிஜினல் படத்தை விட சிறப்பாக இருக்கும்
‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது.
முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.
லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார்.
விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது.
குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார். தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள்.
ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான்.
பிறந்த நாள் என்றாலே SMS மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான்.
இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும்தான் நான் முன் மாதிரியாக கருதுவேன்.
என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும்.
இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.” என்றார்
இசையமைப்பாளர் A.H.காஷிப் பேசும்போது , “சுமார் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் இந்தத் துறைக்கு வந்துள்ளேன்.
தனி ஆல்பம் மூலம் பிரபலமானேன். அதைக் கேட்டுத்தான் இந்த வாய்ப்பை தனஞ்செயன் கொடுத்தார்.
பின்னணி இசை சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக வந்திருக்கிறது.”என்றார் .