மேப்பிள் லீஃப் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்து ஈ வி கணேஷ் பாபு இயக்க, சிருஷ்டி டாங்கே , கவுரவத் தோற்றத்தில் விதார்த் ஆகியோர் நடிப்பில் எடிட்டர் லெனினின் கதை, திரைக்கதை, வசனம் படத் தொகுப்பில் வந்திருக்கும் படம்.
பல தலைமுறையாகப் பல்கிப் பெருகி வந்திருக்கும் ஒரு பணக்கார பெரிய வீட்டுக் குடும்பத்தில் உள்ள ஒரு கட்டில்.அவர்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. திருமணமாகி முதலிரவு நடந்து குழந்தைகள் பிறந்து அந்தக் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும்போது அவர்களுக்கும் முதலிரவு நடந்து…… இப்படி பல தலைமுறை விருத்திக்குக் காரணமான கட்டில் அது.
ஒரு நிலையில் அந்த பெரிய வீட்டை விற்று கிடைக்கும் பணத்தை வைத்து பிசினஸ் தொடங்க, படித்த வசதியான அண்ணன்கள் மற்றும் அக்கா ஆகியோர் விரும்ப, படிப்பறிவு கம்மியான சரியான வேலையும் இல்லாத தம்பிக்கும் ( கணேஷ் பாபு )அவனது கர்ப்பிணி மனைவிக்கும் ( சிருஷ்டி டாங்கே ) அவனது அம்மாவுக்கும் (கீதா கைலாசம்) அதில் விருப்பம் இல்லை.
அந்த புராதன கட்டிலில் படுத்தால்தான அவனது மகனுக்கு தூக்கமே வரும்.
எனினும் வீடு விற்பனை செய்யப்படுகிறது . வாங்குபவர்அந்தக் கட்டிலையும் கேட்க, அவனும் அம்மாவும் மறுக்க , வாங்குபவருக்கும் இவனுக்கும் உரசல், .
கட்டிலை வைக்கும் அளவுக்கு வசதியான வீடு வாடகைக்கு தேடி இவன் அலைய, வீடு விற்கப்பட்ட நிலையில் இவர்களை உடனே காலி செய்யச் சொல்லி வீட்டை வாங்கியவர் வற்புறுத்த அவமனப்படுத்த , நடந்தது என்ன என்பதே படம் .
வித்தியாசமான , மண்வாசனை வீசும் கதை . இதோடு இன்னொரு பக்கம் தொழிற்சங்கம் பற்றிய கதைப்போக்கை இணைத்து கதை திரைக்கதை எழுதியுள்ளார் லெனின் .
மொத்தக் கதையையும் பிளாஷ்பேக்கில் சொல்லும் இன்றைய இளைஞனாக வரும் விதார்த் குரலால் உருக வைக்கிறார் .
கணேஷ் பாபு படம் முழுக்க நிறைகிறார் .
சிருஷ்டி டாங்கே மனம் நிறைக்கிறார் .
மாமியாராக நடித்திருக்கும் கீதா கைலாசம் , தொழிற்சங்கவாதியாக வரும் ராஜ திருமகன் சு. செந்தில் குமரன் (நான்தான்), ஆட்டோ டிரைவராக வரும் சம்பத் ராம், குழந்தைக்கு ஏங்கும் பெண்ணாக வரும் அன்னம் அரசு ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள் .
ஸ்ரீகாந்த் தேவை இசையில் வரும் மெல்லிசைப் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை .
ரவிசங்கரனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உரிய கனத்தைக் கொடுக்கிறது.
படம் முடிவதற்கு அரைமணி நேரம் முன்பே , அன்னம் அரசு சம்மந்தப்பட்ட ஒரு காட்சியில் படம் முடிந்து விட்டதாக எண்ணி படம் பார்ப்பவர்கள் கை தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின்பு படம் நீள்கிறது .
சொல்லப்படாத கதை, இலங்கைத் தமிழர் முகாமில் ஒரு தமிழ் நாட்டுக் குடும்பம் அகதியாகத் தங்குவது போன்ற காட்சிகளால் கனமாகவே இருக்கிறது கட்டில் .