தாமரை — தியாகு : யார் பக்கம் நியாயம் ?

DSC_0082
தனது கணவரும் தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகு  , தன்னையும் தங்களது மகனுமான சமரனையும் ஏமாற்றி விட்டு,  மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டதாக புகார் சொல்லி,  மீடியாக்களை சந்தித்தார் கவிஞர் தாமரை . “அவர் விரைவில் நேரில் வந்து என்னிடமும் மகன் சமரனிடமும்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு விட்டு குடும்பத்தில் இணைய வேண்டும் “என்ற கோரிக்கையோடு , தியாகுவின் இயக்கத்தின் அலுவலக வாசலில் மகனோடு உட்கார்ந்து  தாமரை போராட்டத்தில் இறங்கினார்.

“நான் தீவிரமாக பாடல்  எழுதும் பணிகளில் இருக்கும்போது மகனை பார்த்துக் கொள்ளக் கூட ஆள் இல்லாமல் சிரமப்படுகிறேன். தீவிரமாக இயக்கப் பணிகளில் ஈடுபடப் போவதால் குடும்பம் தேவை இல்லை என்று ஒரு காரணத்தை கூறிவிட்டு தியாகு ஓடிப் போய் விட்டார்.அப்படியானால் அவர் எதற்கு திருமணம் செய்ய வேண்டும் ?
 இயக்கப் பணிகளில்  இருக்கும் குடும்பஸ்தர்கள் எல்லாம் மனைவி , குழந்தையை பார்த்துக் கொள்வது இல்லையா? பிள்ளையை பள்ளியில் விடுவது இல்லையா? வீட்டுக்கு காய்கறி வாங்கி வருவது இல்லையா ?” என்று கேள்வி கேட்கும் தாமரை,

 தொடர்ந்து “மூன்று வருடத்துக்கு முன்பு எங்களுக்குள்  பிரச்னை வந்தபோது பேசி பிரச்னையை தீர்த்து வைத்தவர்களே இப்போதும் தீர்த்து வைக்க வேண்டும் .  தியாகு குடும்பத்துக்கு  திரும்ப வேண்டும் .2002ஆம் ஆண்டு என்னை பெண் கேட்டு என் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் ‘ உங்கள் மகளை கடைசி வரை பார்த்துக் கொள்வேன் ‘ என்று , அவர் கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும். கட்டிய மனைவி பெற்ற பிள்ளையையே காப்பாற்ற முடியாதவர்,  தமிழ் தேசியத்தை எப்படி காப்பாற்றப் போகிறார் ” என்று கேள்வியிலேயே மீண்டும் முடிக்கிறார்  தாமரை

சமூகப் போராட்டத்தால் சிறை சென்று , பல கொடுமைகளை அனுபவித்து ,அது குறித்த தனது கம்பிக்குள் வெளிச்சங்கள் தொடர் மூலம் தமிழ் நாடு முழுக்க அறிமுகம் ஆன தியாகு, தொடர்ந்து தமிழ் தேசிய அடையாளத்தில் இயங்க ஆரம்பித்து அதில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளையும் உருவாக்கியவர்

பொறியியல் பட்டப் படிப்பு படித்து , பாடல் எழுத வந்து,   வளமான சொல்லாடலுடன் கூடிய நல்ல பாடலாசிரியராக தன்னை செதுக்கிக் கொண்ட தாமரை,  ஈழப் பிரச்னை  உள்ளிட்ட தமிழின  நலன் குறித்த செயல்பாடுகளில் உணர்வுப் பூர்வமாக இயங்கியவர் .

தியாகுவுக்கு முன்பே திருமணம் ஆகி  மனைவியும்  குழந்தைகள் இருந்தன . எனினும் அவருக்கும் தாமரைக்கும் காதல் வந்தது . முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு , ஒன்று சேர்ந்த இருவருக்கும்  இடையில் ஏற்பட்ட பிரச்னைகள் வளர்ந்து,  இப்போது மீடியாவுக்கு வந்து நிற்கிறது .

thiyagu

அப்படி என்னதான் நடந்தது?முதலில் தாமரைக்கு வேண்டிய சிலரிடம் பேசியபோது …..

“தனக்கும் தியாவுக்கும் திருமணம் என்ற நிலை வந்து , தியாகுவின் முதல் மனைவி விவாகரத்து செய்யப்பட்ட போதும், முதல் தாரத்துக் குழந்தைகளை தியாகு பார்ப்பதை தாமரை தடுத்ததே இல்லை .

குடும்பத்தில் வருமானம் என்பது தாமரையின் மூலம்தான் வருகிறது . தியாகு மூலம் எதுவுமே வருவது இல்லை. . தியாகுவின் இயக்கப் பணிகளுக்கு தாமரை தன் உழைப்பால் சம்பாதித்த பணத்தை எவ்வளவோ கொடுத்து இருக்கிறார். தியாகு அந்த பணத்தை இயக்கப் பணிகளுக்கு உண்மையாக பயன்படுத்தி இருந்திருந்தால் நல்ல படியாகவே எல்லாம் போயிருக்கும் . ஆனால் தியாகுவுக்கு தவறான பழக்கங்கள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் சகவாசம் . அது கூட பரவாயில்லை .

தமிழ் உணர்வு , தமிழ் தேசியம் என்ன சித்தாந்தத்துக்காக இயக்கப் பணிகளில் ஈடுபட வந்த பெண்களுக்கே  அவர் குறி வைத்தார் . அப்படி வந்த  ஈரோட்டுப் பெண் ஒருவருக்கும் தியாகுவுக்கும் தொடர்ந்து நெருக்கம் வளர்ந்தது . கணவனை விட்டு விட்டு வந்த அந்தப் பெண்ணை  தனியாகக் குடி வைத்தார் தியாகு . இயக்கப் பணிகளுக்காக என்று தாமரை தரும் பணம் இதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்ட கொடுமை நடந்தது .

2012 ஆம் ஆண்டு இந்த ஈரோட்டுப் பெண்ணால் தாமரையையும் மகனையும் விட்டு விட்டு போனார் தியாகு . தாமரை தமிழ் உணர்வுத் தலைவர்களிடம் விசயத்தைக் கொண்டு போக, பழ.நெடுமாறன் , வைகோ ,  வேல் முருகன் போன்ற தலைவர்கள் தியாகுவை அழைத்துக் கண்டித்தனர் . இயக்க உணர்வு என்ற கோட்பாட்டோடு வரும் பெண்களையே இவர் தவறாகப் பயன்படுத்தும் நிலையில் இனி தியாகுவுக்கு தமிழ் உணர்வுப் போராட்டங்களில் எந்த முக்கியத்துவமும் தருவது இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ‘தியாகு இனி தாமரையோடு ஒழுங்காக குடும்பம் நடத்தினால் போதும்’ என்று அறிவுறுத்தினர்.

தாமரையும் எல்லாவற்றையும் மன்னித்து தியாகுவை ஏற்றுக் கொண்டார் . ஆனால் கொஞ்ச நாள்தான் .

மறுபடியும் இயக்க வேலை என்று தியாகு கிளம்பியபோது தாமரை தடுக்கவில்லை . அதே போல அவர் கேட்கும்போதெல்லாம் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தரவும் தயங்கவில்லை . காரணம் தாமரைக்கு ஒற்றைத் தலைவலி, இதய பலகீனம் உள்ளிட்ட சில பிரசனைகள் இருப்பதால் தன்னால் நேரடியாக தமிழ் உணர்வுப் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு உண்டு . எனவே தனது பணமாவது தியாகு மூலமாக அந்தப் போராட்டங்களுக்கு செலவாகட்டும் என்று எண்ணினார்.

ஆனால் இந்த முறை தியாகு பதினாறடி பாய்ந்தார் …” என்ற அந்த நண்பர்கள் தொடர்ந்தனர் .

“மீண்டும் அதே பெண்ணோடு தொடர்பை வலுப்படுத்தினார் . தாமரை தரும் பணம் மூலம் அந்த  பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்தார்

அது தவிர இலங்கை மலையகத்தை சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு பாடகி ஆக வேண்டும் என்று ரொம்ப ஆசையாம் . ஒரு நிகழ்ச்சியில் அந்தப் பெண் பாட , தியாகு கேட்க, அதோடு முடித்துக் கொள்ளவில்லை தியாகு. தாமரையிடம் சொல்லி ஹாரீஸ் ஜெயராஜ் மூலமாக பாடகி ஆக்குவதாக ஆசை காட்டி… கடைசியில் அந்தப் பெண்ணை ஆசை நாயகியாகத்தான் தியாகு ஆக்கிக் கொண்டார் . இவர்கள் இருவரும் மட்டுமின்றி இன்னொரு பெண்ணையும் தன் வசப்படுத்திக் கொண்டார் .

இந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் சுற்றினார். இதனால் தியாகு மீது எல்லோருக்கும் மரியாதை போனது. அவரது இயக்கப் பணிகளுக்கு மற்ற  தமிழ் உணர்வாளர்களிடம் இருந்து நன்கொடை வருவது முற்றிலும் குறைய, தாமரையின் பணத்திலேயே இது எல்லாமும் தொடர்ந்தது . இப்படியாக  பாடல் எழுதி தாமரை சம்பாதிக்கும் பணம்,  இந்த சரசமாடல்களுக்கு போனது .

விஷயம் ஆதாரங்களுடன் தாமரைக்கு வந்தபோது , அவர் ரொம்ப நொறுங்கிப் போனார். ‘தமிழ் தேசியம் என்ற உயரிய தத்துவத்தின் பேரால் பெண்களை வீழ்த்தும் நீங்கள் இனி எந்தப் பணிக்கும் போக வேண்டாம். வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கட்டுப்பாடுகள் விதித்தார். ஆனால் தியாகுவால் சும்மா இருக்க முடியவில்லை . அதுதான் மீண்டும் தாமரையையும் மகன் சமரனையும் விட்டு விட்டு போய் விட்டார். இப்போது மீண்டும் பழ. நெடுமாறன், வைகோ , வேல்முருகன் போன்றவர்கள் தலையிட்டு  தியாகுவை தன வீட்டுக்கு வரச் செய்ய வேண்டும் என்பதே தாமரையின் கோரிக்கை  ” என்று தங்கள் தரப்பை விரிவாகவும் , அதிர்ச்சிகரமாகவும் எடுத்து வைக்கிறார்கள் தாமரையின் நண்பர்கள் .

DSC_0081

இந்த விசயத்தில் எந்த தரப்பு பக்கமும் சாயாமல் உண்மைகளை நடு நிலையோடு விளக்க வேண்டும் என்பதால் தியாகுவின்  நண்பர்கள் தரப்புக்கும் சின்சியராக காது கொடுக்க வேண்டி வந்தது. ”  போராட்டத்தில் உட்கார்ந்து இருக்கும் தாமரையிடம் இப்போது  , ‘தியாகு உங்களை விவாகரத்து செத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்ற கேள்வியைக் கேட்டபோது , ‘ ‘அதெல்லாம் ஏற்க மாட்டேன். அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டு விட்டு சேர்ந்து வாழ வேண்டும்’ என்கிறார் தாமரை.

ஆனால் தங்கள் கல்யாணத்துக்கு முன்பே தியாகுவுக்கு மனைவியும் பெண் குழந்தை உள்ளிட்ட பிள்ளைகளும் இருக்கும் நிலையில் , ‘என்னை  திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வா ‘ என்று தியாகுவிடம் சொன்னவர்தான் இந்தத் தாமரை . இன்று தியாகு தாமரையை விவாகரத்து செய்து விட விரும்புகிறார். அது மட்டும் தாமரைக்கு வலிக்குதோ ? ‘ என்று சூடாக ஆரம்பித்தது  தியாகு தரப்பு .

தொடர்ந்து கூறும்போது “இருவரும் திருமணம் செய்து கொள்ளும்போதே  குடும்பத்துக்கு சம்பாதிக்கும் வேலை தாமரைக்கு. இயக்கப் பணிகளில் ஈடுபடும் வேலை தியாகுவுக்கு என்று முடிவு செய்துதான் திருமணமே செய்து கொண்டார்கள். ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு தாமரை உண்மையாக இருக்கவில்லை. ஒரு நிலையில் தாமரை தியாகுவை சம்பாதிக்க வக்கில்லாதவர் என்ற  ரீதியில் தொடர்ந்து அவமானப்படுத்த,  மனம் உடைந்து போனார் தியாகு. தொடர்ந்த அவமானங்கள் ஏச்சு பேச்சுக்கள் உள்ளிட்ட டார்ச்சரை தியாகுவால் தாங்க முடியவில்லை .

தாமரை- தியாகு இருவருக்கும் பிறந்த மகனான  சமரன் மீது மிக பாசமாக இருப்பார் தியாகு .  நிகழ்ச்சிகளுக்கு சமரனை அவர் தூக்கி வருவார் . அதுவும் எப்படி தெரியுமா? பெண்களைப் போல இடுப்பில் வைத்து தூக்கி வருவார் . அந்த அளவுக்கு,  பாசத்துக்காக சபை கவுரவம் கூட பார்க்காதவர் தியாகு..

ஒரு கணவனாக குடும்பத்தை பார்த்துக் கொள்வது வேறு . ஆனால் ஒரு நிலையில் தாமரை அவரை மிக கேவலமாக நடத்தினார் . தியாகுவுக்கு ரொம்பவும் வெறுத்துப் போனது . அதனால் தாமரையிடம் இருந்து எப்படியாவது முற்றிலுமாக தப்பிக்க வேண்டும் என்பதுதான் இப்போது தியாகுவின்  மனநிலை ” என்றார்கள் .

‘சரி…. மனைவி சம்பாதித்து இன உணர்வு காரணமாக , இயக்கப் பணிகளுக்கு தரும் பணத்தை  ஒரு மனிதன் ஆசை நாயகிகளுக்கு செலவு பண்ணுவது பெரிய கேவலம் இல்லையா ?” என்றால்

“ஹலோ … அதிக வட்டிக்கு பேராசைப்பட்டு ஒருவரிடம் தான் சம்பாதித்த பணத்தில்  பெரும் தொகையை நாக்கை சுழற்றிக் கொண்டு தாமரை கொடுத்தார் . அந்த  ஆள் நாமம் போட்டுவிட்டுப் போய்விட்டான் . ஒரு கீழ்த்தரமான சராசரி நபர் போல வட்டி வாங்க ஆசைப்பட்டு தாமரை ஏமாந்த  விஷயம் பற்றி  விசாரிங்க ” என்று கட்டளை போடுகிறது  தியாகு தரப்பு . (அதற்காக மனைவியின் வருமானத்தில் ஆசை நாயகிகள் அணி அமைப்பது நியாயமா என்று  தெரியவில்லை )

DSC_0083

இது இப்படி இருக்க , தாமரை இப்போது போராட்டம் என்று சொல்லி  எந்த அலுவலகத்தின் வாசலில் உட்கார்ந்தாரோ அந்த  சூளைமேடு அலுவலகத்தை “தியாகு இருபது நாட்களுக்கு முன்பு காலி செய்து விட்டார்” என்கிறார் அந்த இடத்தின் உரிமையாளர் .  ஆனால் “அது உண்மையில்லை . இப்போதும் எப்போதாவது அங்கு தியாகு வந்து போகிறார் . சொல்ல முடியாது .. தாமரை போராட்டம் என்று சொல்லி உட்கார்ந்த இந்த நேரம் கூட,  தியாகு கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்க வாய்ப்பு உள்ளது ” என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது  தாமரையின் தரப்பு.

இது ஒரு பக்கம் இருக்க,

பிரிந்த கணவனை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி தாமரை கொடுத்து இருக்கும் அறிக்கையில்  தமிழ் உணர்வு , தமிழ் தேசியம் , இன உணர்வு , போன்ற விஷயங்களையும் வார்த்தைகளையும் மிக அதிகமாக பயன்படுத்தி  இருக்கிறார் . இவரது சொந்தப் பிரச்னைக்கு இப்படி தமிழ் தேசிய இன உணர்வை ஆயுதமாக பயன்படுத்துவது , தமிழ் தேசிய உணர்வின் எதிரிகள் மத்தியில் கேலி உணர்வையே ஏற்படுத்தும் என்ற அக்கறை  தாமரையிடம் இல்லாதது பெருத்த வேதனை . 

அது மட்டும் அல்ல …

அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் குறிப்பிடுவது மட்டுமல்லாது தொலைக்கட்சிகளுக்கு பேட்டி கொடுக்கும்போது ” தனது தரப்பு நியாயத்தை சொல்ல தியாகுவை பேச்சு வார்ததைக்கு அழைத்தால் , ‘முடியாது… சட்டப்படி பார்த்துக் கொள்கிறேன்’ என்று தியாகு சொல்கிறார் . இதை சட்டப்படி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் தியாகு , முல்லைப் பெரியாறு , கூடங்குளம், காவிரி பிரச்னைகளிலும் சட்டப்படி நடக்கட்டும் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே , அதற்கு மட்டும் ஏன் மாற்று வழியில் போராடப் போகிறார் ?”‘ என்று ஒரு ‘அரிய பெரிய தத்துவத்தை’ வேறு உதிர்க்கிறார் .

அடப் பாவமே ! ஏம்மா …

உங்கள் பிரச்னை ஒழுக்கக் குறைபாடு , அத்துமீறல்  , யார் பெரியவர் என்ற போட்டி இவற்றால் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை . ஆனால் முல்லைப் பெரியாறு , கூடங்குளம் , காவிரி போன்றவை நம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் !

இந்த இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பேசும் அளவுக்கு சுயநலத்தில் கொழுத்துக் கிடக்கும்  நீங்கள் எல்லாமா தமிழ் தேசியத்துக்கு கிழிக்கப் போகிறீர்கள் ?

இது மட்டுமா?

தொலைக்கட்சிகளுக்கு பேட்டி கொடுக்கும்போது இன்னொரு விசயத்தையும்  கூறினார் தாமரை . ” நான் என்ஜினீயரிங் பட்டப் படிப்பு படித்தவள் . தமிழுக்க்காக அந்த துறையை விட்டு விட்டு பாடல் எழுதவும் இன இனர்வுப் போராட்டத்துக்கும் வந்தேன் . அப்படி தமிழுக்காக வந்ததால் இப்போது தெருவில் நிற்கிறேன் ”

இது எப்படி இருக்கு ?

தாமரை தமிழாலா தெருவுக்கு வந்தார் ?

தமிழ் அவரை பாடலாசிரியர் ஆக்கியது . பிரபலம் ஆகியது . லட்சக் கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்தது.

 ”ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் நான்தான் எழுதுவேன்” என்றும் ,  அல்லது ” இந்த சூழலுக்கு  நான் பாட்டு எழுத மாட்டேன் , வேறு யாரிடமாவது எழுதிக் கொள்” என்று சொல்லும்போது , பாடல் கேட்டு வந்தவர்களை பவ்யமாக  தலையாட்ட வைத்தது.  ”நான் கேட்கிற சம்பளத்தை கொடுத்து விட்டு பாட்டுக்கான மெட்டை கொடுத்து விட்டுப் போ .  நான் கூப்பிடும்போது  வந்து வாங்கிக் கொள் ‘ என்று கட்டளையிட்டு விட்டு காத்திருக்க  வைத்தது.  போராட்ட மேடைகளில் தனி மரியாதை பெற்றுத் தந்தது .  ஆக  தாமரை தெருவுக்கு வர , தமிழ் காரணம் இல்லை .

இன்னொரு குடும்பத்தை கலைத்து ஒரு பெண்ணின் கணவனை முற்றிலுமாக கவர்ந்ததுவும் , மனிதர்களை சரியாகத் தெரிந்து கொள்ளாத அலட்சியமும் , மேலே சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையெனில் கணவனை மதிக்காத தன்மையும் , வட்டிப் பணத்துக்கு ஆசைப்பட்டதும்தான் தாமரை  தெருவுக்கு வரக்  காரணங்கள். இதை யாராவது தாமரைக்கு உணர்த்தினால் பரவாயில்லை .

தியாகு மீதும் தாமரை மீதும் எதிரெதிர்  தரப்புகளால் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளில் எது, எந்த அளவுக்கு உண்மை எது பொய்என்பது , தியாகு மற்றும் தாமரைக்கு மட்டும்  வெளிச்சம் . 

ஆனால் எல்லாவகையிலும் ஏய்க்கப்படும் தமிழ்  சமுதாயத்தின் மொழி இன உணர்வையும்  போராட்டக் களத்தையும்  தனது சுயநலங்களுக்காக பயன்படுத்தி விட்டு,  இப்போது இப்படி மீடியா வெளிச்சத்தில் அடித்துக் கொள்வதன் மூலம் அந்த உணர்வுகளை அசிங்கப்படுத்தி,  நம்மையெல்லாம் கூனிக் குறுக வைக்கிற தாமரை , தியாகு இருவருமே….

இனி தமிழ் மொழி இன உணர்வு , தமிழ் தேசியம் என்று பேசக் கூடாது என்று விதிக்கப்பட்டு , ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →