ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சஷிகாந்த் மற்றும் ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இருவரும் இணைந்து தயாரிக்க, சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, அனைகா சோட்டி நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வசந்தபாலன் இயக்கி இருக்கும் படம் காவியத் தலைவன் .
காவியம் படைக்கிறானா தலைவன் ? பார்க்கலாம் .
நாடகக் கலைக்கு நல்ல தொண்டாற்றியவர் என்று போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் கூத்து மற்றும் நாடகக்கலைக் களத்தில் அடிமை இந்தியாவின் அரசியல் சூழ் நிலையில் கட்டமைக்கப்பட்ட கதை .
சிவதாஸ் சுவாமிகளின் (நாசர்) நாடகக் கம்பெனியில் , தனது தந்தையால் சிறு வயதிலேயே ஒப்படைக்கப்படும் கோமதி நாயகம் பிள்ளையும் (ப்ரித்விராஜ் ) ரயிலில் ஆனதைச் சிறுவனாக பிச்சை எடுத்து பாடி வருகையில் கண்டு பிடிக்கப்பட்டு நாடகக் கம்பெனிக்கு வந்து தங்கி நடிக்கப் படித்து வளர்ந்த காளியப்பாவும் (சித்தார்த் ) தங்கள் இறுதி மூச்சு வரை எப்படி இருந்தார்கள் என்று பேசுகிறது படம்.
ஆண்கள் மட்டுமே இருக்கும் அந்த நாடகக் கம்பெனியில் தனது திறமையால் இடம் பிடிக்கும் வடிவு (வேதிகா) ஸ்திரீ பார்ட் ஆக முன்னேறுகிறாள். கம்பெனியின் பிரபல ராஜ பார்ட் நடிகர் (பொன்வண்ணன்) ஒரு நிலையில் மமதை காரணமாக சாமிகளோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியேறுகிறார்.
அடுத்த ராஜபார்ட் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று நம்பி அதற்காக பல காலமாக கனவு காணும் கோமதியையும் அவனோடு காளியப்பாவையும் சாமிகள் நடித்துக் காட்ட சொல்ல, காளியப்பா நடிக்கும் விதம் பிடித்துப் போய் அவனை ராஜபார்ட் ஆக தேர்வு செய்கிறார் சாமிகள். ஆரம்பம் முதலே காளியப்பாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை சாமிகள் மட்டம் தட்டுவதாக நினைக்கும் கோமதி மனதில் வன்மம் வளர்க்கிறான்.
ராஜபார்ட்டாக வளரும் காளியப்பாவுக்கும் அந்த பகுதி ஜமீன் ராஜாவின் மகளுக்கும் (அனைகா ) காதல் வருகிறது . விஷயம் அறிந்த கோமதி காளியப்பாவை பழிவாங்க எண்ணி , விஷயத்தை சாமிகளிடம் போட்டுக் கொடுக்கிறான் .
தற்போது ராஜபார்ட்டாக இருக்கும் கோமதி கையில் நாடகக் கம்பெனி வருகிறது. காளியப்பா அங்கு இருந்தால் தன்னை மீண்டும் ஜெயித்து விடுவான் என்று பயப்படும் கோமதி, ‘குருவின் மரணத்துக்கு காரணமான’ காளியப்பாவை கம்பெனியில் வைத்துக் கொள்ள முடியாது என்று கூறி, அவனை அடித்து விரட்டுகிறான் . கண்ணீரோடு அதை தடுக்க முடியாமல் இடிந்து போய் நிற்கிறாள் வடிவு
கோமதியும் வடிவும் ஜோடியாக இலங்கை மலேசியா பர்மா எல்லாம் போய் நாடகம் போட்டு பெரும்புகழ் பெறுகிறார்கள் . மீண்டும் இந்தியா வந்து மதுரையில் நாடகம் போடத் திட்டமிட, கோமதிக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் காரணமாக நடிக்க முடியாமல், அவசரத்துக்கு ஒரு நடிகனை தேட, மீண்டும் வருகிறான் காளியப்பா .
தனது நடிப்பால் மீண்டும் புகழ் பெறுகிறான் . வடிவுவும் காளியப்பாவை விரும்புகிறாள் . அடுத்ததடுத்து மீண்டும் காளியப்பாவை அழிக்க கோமதி வஞ்சக ரகசியமாய் திட்டங்கள் தீட்ட , காளியப்பாவோ தொடர்ந்து கோமதி மீது, அண்ணன் என்ற அன்பும் மரியாதையும் காட்டி முன்னேற, இன்னொரு பக்கம் புராண நாடகங்களில் இருந்து விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டும் சமூக நாடகங்கள் உருவாக , அதனால் தேசப்பற்றுள்ள நாடகக் கலைஞர்கள் சிறைபட்டுத் துன்பப்பட, இந்த மாற்றங்களிலும் பயணிக்கும் இந்த இருவரின் உணர்வுக் கொந்தளிப்புகள், எப்படி ஒரு முடிவுக்கு வந்தது என்பதுதான்…. இந்த காவியத் தலைவன் .
அந்தக் கால நாடகங்கள் மற்றும் ஆரம்ப கால திரைப்படங்களின் பாணியில் வரும் டைட்டில் நம்மை ஒரு நல்ல அனுபவத்துக்கு தயார் படுத்துகிறது.
பிரபல நாடகக் கலைஞர்களான கிட்டப்பா மற்றும் நாடக மேடையில் தேச பக்திப் பாடல்களை பாடியபடியே உயிர்துறந்த தியாகி விஸ்வநாத தாஸ் ஆகியோரின் பாதிப்பில் சித்தார்த் நடித்த காளியப்பா கேரக்டரை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் .
.அந்தக் கால நாடக வசனங்களை கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து நடித்து இருக்கும் சித்தார்த், ப்ரித்விராஜ் இருவரும் பாராட்டுக்குரிவர்கள் . ப்ரித்விராஜின் குரலில் அடிக்கும் மலையாள நெடிதான் மகா எரிச்சல்.
தனி ஆளாக நின்று நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அசத்துகிறார் சித்தார்த். சிவதாஸ் சாமிகள் கேரக்டரில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நாசர் . பாடம் சொல்லித்தரும் வாத்தியாராக தம்பி ராமையா, சக நடிகனான சிங்கம் புலி, ராஜபார்ட் பந்தாவில் பொன் வண்ணன் இவர்களும் அருமை .
அப்பாவித்தனமான நடிப்பில் ராஜா மகளாக அவரும் அனைகா மனதுக்குள் நுழைந்தால் , பக்குவமான பாத்திரத்தில் நின்று விளையாடுகிறார் வேதிகா. உண்மையை மேற்சொன்ன பெருமைகள் எல்லாம் இயக்குனர் வசந்த பாலனையே சேரும் என்ற அளவில் நடிக நடிகையரிடம் அற்புதமாக வேலை வாங்கி இருக்கிறார்.
கலை இயக்கம் , உடைகள் , மேக்கப் மூன்றும் கதை நிகழும் காலகட்டத்தை உருவாக்குவதில் பெரும் வெற்றி பெற, அவற்றுக்கு அப்படியே உயிர் கொடுத்து யதார்த்தப்படுத்துகிறது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு .
கதை நிகழ்வதாக சொல்லப்படும் காலகட்டத்துக்கு பொருத்தமான இசையையும் நடனத்தையும் வழங்குவதில் பல சமரசங்கள், யதார்த்த மீறல்கள், துருத்திக் கொண்டு தெரியும் ஒட்டாத தன்மை தெரிகிறது . அவர்கள் இஷடத்துக்கு இசையின் பாணி , உடைகள், நடனம் என்று எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறார்கள் . இருந்தாலும் பொதுவில் ஏ ஆர் ரகுமானின் இசை படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது .
நினைத்த போது எல்லாம் ஜமீன் அரண்மனைக்கு காளியப்பா திருட்டுத்தனமாக போய் போய் ராஜா மகளை பார்த்து ஆடிப்பாடி அப்புறம் கர்ப்பமாக்கி விட்டு வருவதும்…..அவர் போகும்போது எல்லாம் அரண்மனை மற்றும் தெருக்களில் ஆட்களே இல்லாமல் –ஒருவேளை எல்லோரும் ஊரைக் காலி பண்ணிட்டு போய்ட்டாங்களோ என்று யோசிக்கும அளவுக்கு இருப்பதும்…இயக்குனரின் அலட்சியமான அழுகுணி ஆட்டம் .
சிறையில் காளியப்பாவிடம் ஒரு சுதந்திரப்போராட்ட தியாகி ” வடக்கே எல்லாம் சுதந்திரப்போராட்டம் பத்திகிட்டு எரியுது . நாம மட்டும்தான் சும்மா இருக்கோம் ” என்று கூறுவது அக்கிரமம் .
படத்தின் இன்னொரு ஏமாற்றம் என்னவென்றால், எந்தக் களத்தில் வேண்டுமானலும் சொல்ல முடிகிற ஒரு சாதாரண கதையைத்தான் நாடக உலகம் நடிப்பார்வம் போன்ற விசயங்களின் பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள் . சொல்லப்படும் களம் மற்றும் பின்புலத்துக்கு பொருத்தமான இன்னும் சிறப்பான ஒரு கதை திரைக்கதையை அமைத்து இருந்தால் படம் இன்னும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று இருக்கும் .
எனினும் …
இந்தத் தலைமுறையில் பலரும் அறியாத ஒரு பின்புலத்தில் ஒரு படத்தை உருவாக்கி நடிகர் நடிகையரிடம் அற்புதமாக வேலை வாங்கி ரசிகர்களை இரண்டை மணி நேரம் முற்றிலும் வேறு சூழலில் இருக்க வைத்த வகையில்…
காவியத்தலைவன் ஒரு சிறப்பான பதிவு .