வாலி பாடல் எழுதிய கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் , அல்லி அர்ஜுனா நாடகத்தை ஆறு காட்சிகளாகவும் அந்த ஆறு காட்சிகளையும் ஆறு பாடல்களாகவும் எழுதி கொடுத்து இருக்கிறாராம் வாலி . தவிர நா.முத்துக்குமார், பா.விஜய் ஆகியோரும் பாடல் எழுதி இருக்கும் இந்தப் படத்தில் யாருமில்லாத் தனியறையில் என்ற விஜய்யின் பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே ஐ டியூன் தளத்தில் உலக அளவில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்ததாம்.
சொல்லி விடு சொல்லி விடுஎன்ற பாடல் போரின் கொடுமையையும் உலக அமைதியையும் வலியுறுத்தும் பாடலாம். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் ஒன்றும் இசையமைக்கப்பட்டு இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது .
எல்லா பாடல்களுமே எழுதப்பட்ட பிறகு இசையமைக்கப்பட்ட பாடல்கள் என்கிறார்கள் . மொத்த பாடல்களையும் கவிஞர் வாலிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் ஏ ஆர் ரகுமான் .
வரும் பதினான்காம் தேதி வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்காக, அந்தக் கால நாடக மற்றும் சினிமா பாணியில் விளம்பரங்களை செய்ய முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் ஷஷிகாந்த் .
“ஒரு ரோடு ஷோ அரேஞ் செய்கிறோம் . காவியத்தலைவன் சுவரொட்டிகள் கொண்ட வண்டிகள் எல்லா ஊருகளுக்கும் அனுப்பப்பட்டு பழைய பாணியில் குழாய் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டே ‘பிட்’ நோட்டீஸ் விநியோகிக்க இருக்கிறோம். சிறு நகரங்களில் மாட்டு வண்டிகளில் அறிவிப்பு செய்ய இருக்கிறோம் . தவிர தமிழ்நாடு முழுக்க, பல ஊர்களில் மேடை நாடகப் போட்டிகள் நடத்தி அதில் சிறந்த நடிகர்களை வசந்த பாலனும் சித்தார்த்தும் தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு பரிசுகளும் வழங்க இருக்கிறோம் . இந்த விளம்பர உத்திகள் எல்லாம் நவம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்கும் ” என்றார் .
“பொதுவாக இப்போ வர்ற படங்கள் எல்லாம் வேகமான திரைக்கதை கொண்ட படங்களாவே இருக்கு. அதுதான் நல்ல உத்தின்னும் ஆகிப் போச்சு. ஆனா மகேந்திரன் சார் எல்லாம் பண்ணின சரித்திரம் படைத்த பல படங்கள் அழுத்தமாக மெதுவாக நகரும் படங்கள்தான். காவியத் தலைவனும் அப்படிதான்.அதை புரிந்து கொண்டு ரசிகர்கள் படம் பாக்கணும். அப்போதான் இந்தப் படத்தின் ஆழம் விளங்கும் ” என்றார் வசந்த பாலன் .