ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் சார்பில் சஜீவ் பி கே மற்றும் ஆன் சஜீவ் இருவரும் தயாரிக்க ,
பார்த்திபன், ஜெயப்ரதா, அனு ஹாசன், நாசர் , ரேவதி, ரேகா , ஜாய் மேத்யூ, எம் எஸ் பாஸ்கர் , தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடிப்பில் ,
கதை திரைக்கதை எழுதி எம் ஏ நிஷாத் இயக்கி இருக்கும் படம் கேணி . ரசனை நீர் ருசிக்குமா? பார்ப்போம் .
கேரளாவைச் சேர்ந்த ஒரு நேர்மையான அரசு அதிகாரி மீது அநியாயமாக பாலியல் குற்றம் சாட்டி ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள் கேரள ஆளும் கட்சியினர் .
ஜெயிலுக்குப் போகும் அவர் தன் மனைவியிடம் ( ஜெயப்ரதா) , தமது சொந்த ஊரான புளியன்மலைக்கு போய் விடச் சொல்கிறார் .
ஓர் அப்பாவி முஸ்லீம் இளைஞன் மீது அநியாயமாக தீவிரவாதி பட்டம் கட்டும் கேரள இன்ஸ்பெக்டர் , அவனது இளம் மனைவி ஆசைக்கு இணங்கினால் இளைஞனை விட்டு விடுவதாகச் சொல்கிறார் .
ஜெயிலில் அரசு அதிகாரி இறந்து விட , புளியன்மலைக்கு வரும் மனைவியோடு , முஸ்லீம் இளைஞனின் இளம் மனைவியும் போலீசுக்கு பயந்து வந்து விடுகிறார் .
அதிகாரிக்கு சொந்தமான வீட்டில் இருவரும் தங்குகிறார்கள் . வீட்டில் ஒரு பாதி கேரள எல்லைக்குள் வருகிறது மறுபாதி தமிழக எல்லைக்குள் வருகிறது
கேரளா எல்லைக்குள் வரும் பகுதியில் ஓர் வற்றாத நீர் ஊற்றுக் கிணறு . மறுபுறம் தமிழக பகுதியில் உள்ள ஊர் கடும் வறட்சியில் ! குடி நீருக்குக் கூட வழியில்லாமல் மக்கள் கஷ்டப் படுகிறார்கள் .
தண்ணீரை உடம்பில் தெளித்தால்தான் அடங்கும் என்ற அவசியத்தில் உள்ள சூட்டு நோய் கொண்ட ஓர் மகனை வைத்துக் கொண்டு ஓர் ஏழைத்தாய் (அனுஹாசன்) கஷ்டப்படுகிறாள்.
தன் கிணற்று தண்ணீரை மக்களுக்கு தர அந்தப் பெண் மணி விரும்பியும் , கேரள அரசு தனது எல்லையில் உள்ள கிணற்று நீரை தமிழகத்துக்கு தரத் தடுகிறது .
அந்தக் கிணற்று நீரை வீட்டுக்குள் கூட கேரள எல்லைப் பகுதியில் உள்ள வீட்டின் பகுதியில்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளை இடுகிறது .
தண்ணீரை ஊருக்கு பெற்றுத் தர, ஊர்த் தலைவர் சக்திவேல் (பார்த்திபன்) , தமிழக கலெக்டர் ( ரேவதி) , மார்க்சிய சிந்தனை கொண்ட ஒரு தமிழக வழக்கறிஞர், ( நாசர்) , ஒரு நீதிபதி (ரேகா) ஆகியோர் போராடுகிறார்கள் .
ஒரு தொலைக்காட்சி அதிபர் ( எம் எஸ் பாஸ்கர்) இந்தப் பிரச்சனையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் .
தண்ணீர் வறட்சிப் பகுதிக்கு வந்ததா ? இல்லையா? தண்ணீர் தர விரும்பிய பெண்மணி என்ன ஆனார் என்பதே இந்த கேணி .
முதலில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ஆதரவாக இப்படி ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே , ஆன் சஜீவ் , மார்க்சிய சிந்தனை கொண்ட படைப்பாளி எம் ஏ நிஷாத் ஆகியோருக்கு அன்பும் நன்றியும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் !
இந்த நேர்மை அரிதானது . அபாரமானது . போற்றுதல்கள் !கேணி என்பதை முல்லைப் பெரியாறு அணை என்று எடுத்துக் கொண்டால் விஷயம் எளிதில் புரியும் .
முல்லைப் பெரியாறு அணை , வெள்ளைக்காரத் தமிழன் என்று தென் தமிழக மக்களால் வணங்கப்படும் பென்னி குவிக் தன் சொந்தப் பணத்தில் கட்டியது .
ஆனால் இந்தப் படத்தில் அந்தக் கிணறு ஒரு மலையாளிக்கு சொந்தமானது என்கிறார்கள் .
இதன் மூலம் முல்லைப் பெரியாறு மற்றும் பவானி நதி நீர் தமிழகத்தின் உரிமை என்பது மறைக்கப்பட்டு,
மலையாளிகள் தங்களுக்கு உரிமைப்பட்ட (?!?)தண்ணீரை, தமிழர்களுக்கு தண்ணீரை தானம் செய்ய வேண்டும் என்ற கருத்தியல் அடிப்படையில் வருகிறது .
ம்ம்ம்ம்… ஒகே !ஜேசுதாசும் எஸ் பிபியும் பாடும் அய்யா சாமி நாமளொண்ணே சாமி பாடல் தரும் ஜனரஞ்சகத் தன்மையோடு படம் துவங்குகிறது .ஆனால் அந்தப் பாட்டில் கேரளப் பெண்கள் , தமிழர்கள் கண்டு பிடித்த பரத நாட்டியம் ஆடுகிறார்கள் .
ஆனால் தமிழ்ப் பெண்கள் ஒயிலாட்டம் கும்மி கூட ஆடவில்லை . பிரபுதேவா சினிமா பெண்களுக்கு என்று கண்டு பிடித்த கேவலமான உதறு ஆட்டம் ஆடுகிறார்கள்.
எந்தா சாரே… ஜிமிக்கி கம்மல் தெறிக்கும் காலத்தில் இது நியாயமா ?
அதே நேரம் தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கு தமிழர்கள் நட்புடன் ஆதரவுக்கரம் நீட்டுவதை சொல்லி இருப்பது கண்ணியம் . நன்றிகள் !
கேரள அரசியல் குளறுபடிகளை படமாக்கிய விதம் ஈர்க்கிறது . புளியன் மலை கிராமத்தில் தமிழர்களின் வறுமையை படமாக்கிய விதத்தில் பிரம்மிக்க வைக்கிறார் இயக்குனர் . படத்தில் வரும் பில்டப்கள் அருமை . குறிப்பாக சூட்டு நோய் சிறுவன் விஷயம்!
ஆனால் கிராமத்துப் பெண் கேரக்டரை அனுஹாசன் செயற்கையாக செய்து இருப்பது உறுத்தல்.
தமிழக அரசியல்வாதிகள் கேரள அரசியல்வாதிகளை விட பெரிய ஊழல் பெருச்சாளிகள்தான் . ஆனால் நதி நீர் தமிழகத்துக்கு வருவதற்கு எதிராக எந்த தமிழக அரசியல்வாதியும் சுயநலத்துக்காக தடை போடுவதாக நிஜத்தில் எதுவும் இல்லை .
ஆனால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஒய்வு விடுதிகள் கட்டி தின்று கொழுக்கும் கேரளா அரசியல்தலைகள் பலவும்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்த்தப் பட்டால் அந்த விடுதிகள் மூழ்கி விடும் என்பதாலேயே டெல்லிக்குக் கப்பம் கட்டி , வெள்ளைக்காரன் கட்டிய அணையில் இருந்து கூட தமிழகத்துக்கு தண்ணீர் வர விடாமல் தடுக்கிறார்கள்.
ஆனால் படத்தில் இந்த விசயத்தை அப்படியே தமிழக அரசியல்வாதிகள் பக்கம் திருப்பி , புளியன் மலை தமிழக பகுதிக்கு தண்ணீர் வர விடாமல் தடுத்து,
பிறகு அந்த இடத்தை மல்டி நேஷனல் கம்பெனிக்கு விற்க ஒரு தமிழக அமைச்சர் முயல்வதாக கதை சொல்கிறது . (எங்க ஆளுகளுக்கு இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க டைரக்டரே . அப்படியே பண்ணிடுவாங்க)
என்ன செய்ய அப்போதுதான் படத்தை மலையாளத்திலும் ரிலீஸ் செய்ய முடியும் .
தண்ணீர் தர விரும்பும் மலையாளப் பெண் இந்திரா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் ஜெயப் பிரதா .
கோர்ட்டில் வக்கீல் மார்க்சியம் பேசும் காட்சிகள் இயக்குனருக்கு அழகு . அதில் நடித்து இருக்கும் விதம் நாசருக்கு அழகு .
கேரளாவில் இருந்து ‘தண்ணி ‘ வாங்கி வர சொல்லும் சேனல் ஹெட் கேரக்டரில் எம் எஸ் பாஸ்கர் சிறப்பு .
மூன்று கிளைகளாக பிரிந்து வரும் கதையை குழப்பம் இல்லாமல் கொண்டு போனதில் ராஜா முகமதுவின் படத் தொகுப்புக்கு பெரும் பங்கு உண்டு . பாராட்டுகள்
ஜெயச்சந்திரன் இசையில் அய்யா சாமி முணுமுணுக்க வைக்கிறது
சாம் சி எஸ் தந்திருக்கும் பின்னணி இசை படத்துக்கு கணம் சேர்க்கிறது .
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரள மாநிலத்தில் இருந்து சில பகுதிகள் தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டன என்று படத்தில் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் .
ரொம்ப தப்பு .
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது , சென்னை ராஜ தானியில் இருந்த – தமிழர்களுக்கு சொந்தமான பல பகுதிகளையும் ஆந்திர , கர்நாடக கேரளத் தலைவர்கள் — டெல்லியில் தங்களுக்கு இருந்த செல்வாக்கை வைத்து — அநியாயமாக தங்களுக்குக் கேட்டனர் .
தமிழக தலைவர்கள் அதில் கவனம் செலுத்தாத காரணத்தால் , ராயல சீமாவின் தென் பகுதி, சித்தூர் , புத்தூர், நகரி, பாலாறு உற்பத்தி ஆகும் நந்தி மலை, திருப்பதி போன்றவை ஆந்திராவுக்கும் ,
1950களிலேயே ஐயாயிரம் கோடி வருமானம் தரக் கூடிய குமுளி வனப் பகுதி, பவானி ஆறு, நெய்யாறு , நெடுமங்காடு, இடுக்கி, பீர் மேடு, வண்டிப் பெரியாறு போன்றவை கேரளாவுக்கும் பறித்துக் கொடுக்கப்பட்டன .
கேரளாக்காரர்கள் கன்யா குமாரியையும் ஆந்திராக்காரர்கள் திருத்தணி மற்றும் சென்னையையும் கன்னடர்கள் ஊட்டியையும் சேர்த்தே கேட்டார்கள். இவற்றைக் காப்பாற்றியதே பெரிய அதிசயம் .
அப்படி இருக்க , கேரள மாநிலத்தில் இருந்து சில பகுதிகள் தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டன என்ற கருத்து முழுத் தவறு . கண்டிக்கப் பட வேண்டியது . திரைக்கதை ரீதியாகப் பார்க்கும்போது,
தண்ணீர் விசயத்தில் என்ன நடந்தது என்பதை முன்பே சொல்லாமல் பிரச்னையை சொல்லி பிறகு முடிவை காட்டி இருந்தால் படம் இன்னும் உணர்வுப் பூர்வமாக அமைந்து இருக்கும் .
பிரச்னையை விட தண்ணீர் கொடுக்கும் நபரை முன்னிலைப் படுத்திய விதம் பலன் தரவில்லை .
இப்படி சின்னச் சின்ன குறைகள், தவறுகள் , திரிப்புகள் இருந்தாலும் ,
தண்ணீர் விசயத்தில் தமிழர்களுக்கான நியாயத்தை தங்கள் வசதிக்கு வளைத்தாவது சொன்ன வகையில் நெகிழ்ச்சிக்கும் போற்றுதலுக்கும் உரிய படமாகிறது கேணி .
கேணி … உப்புத் தண்ணீர் இல்லை !