குளோபல் இன்போடைன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் வழங்க, செராபின் ராய சேவியர் தயாரிப்பில் ஜீவா, நிக்கி கால்ராணி, அனைகா சோட்டி, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் காளீஸ் இயக்கி இருக்கும் படம் கீ . படம் எப்படி ? பேசலாம் .
கம்பியூட்டர் ஹேக்கிங் செய்வதை விளையாட்டாக நல்ல விசயங்களுக்கு செய்து கொண்டிருக்கும் இளைஞன் ( ஜீவா) ஒருவனின் கல்லூரித் தோழி ஒருத்தி ஒரு தவறான நபரை காதலித்து ஏமாந்து தற்கொலை செய்து கொள்கிறாள் . ஒரு காதலி ( நிக்கி கல்ரானி)

இவனது கம்பியூட்டர் ஹேக்கிங் திறமையால் அசந்து போய் நட்பான ஒரு பெண்ணுக்கு ( அனைகா சோட்டி) வேண்டிய ஒரு நபருக்கு ( கவுதம் ) இவனது உதவி தேவைப் படுகிறது .
காரணம் கெட்ட எண்ணத்தோடு மொபைல் ஹேக்கிங் செய்து பலரின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்குள் சண்டை மூட்டி விடுவது , தற்கொலை செய்துகொள்ள வைப்பது , மற்றவர்களை கொலை செய்ய வைத்து , அதை வைத்து வேறு பலருக்கு இழப்புகளை ஏற்படுத்தி அவர்கள் துன்புறுவதை ரசிப்பது என்று பல வக்கிர செயல்களை செய்து வருகிறான் ஒருவன் ( கோவிந்த் பத்ம சூர்யா ).
இந்த கொடூரனை பற்றி அறியும் தோழி, அதை ஹீரோவிடம் சொல்ல முயல …. முடியாமல் போகிறது .

ஒரு நிலையில் ஹீரோவுக்கு உண்மைகள் தெரிய வரும்போது, கல்லூரித் தோழியின் மரணம், அடுத்த தோழி என்று எல்லோரும் கஷ்டப்படுவதற்கு காரணம், இந்த கொடூர ஹேக்கர் என்பது தெரிய வருகிறது .
அவனை ஹீரோ நெருங்க, ஹீரோயினை கொடூர ஹேக்கர் தூக்க, அப்புறம் என்ன என்பதே இந்த கீ .
உங்கள் வீட்டில் உங்கள் அறையில் உங்கள் செல்போனை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் இன்னொரு முனை வழியே உங்களை யாரோ பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம் .
இன்றைய தொழில் நுட்ப வசதிப்படி அவர்கள் நினைத்தால் நீங்கள் கெட்டவர்களாக மட்டுமல்ல , நல்லவர்களாக இருந்தாலும் கூட உங்களுக்கு ஆபத்து உண்டு என்பதை சொல்கிறது படம் .

நீங்கள் நல்லவர்தான் என்றால் உங்கள் போனுக்கு லாக் எதற்கு என்பது போன்ற முட்டாள்தனமான கேள்விகளும் படத்தில் உண்டு .
ஆனால் இந்தக் கதைக்கும் கூட முழுமையாக சரியான திரைக்கதை அமைக்காமல் என்னென்னமோ சீன் வைத்து , அலுப்பூட்டுகிறார்கள்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு மிக அருமை . ஒளி இருள் ஆளுமையில் வண்ணத்தில் மிரட்டுகிறார் . இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஏமாற்றி விட்டார்.
ஒரு நல்ல விசயத்தை சொல்வதாக கூறிக் கொண்டு ஓவரான கிளாமர் காட்சிகளால் கடுப்பேற்றுகிறார்கள். ராஜேந்திர குமார் – சுகாசினி சம்மந்தப்பட்ட காட்சிகள் பக்கா டிராமா . ஜீவா, நிக்கி , அனைகா , பாலாஜி ஒகோவும் இல்லை . அய்யோவும் இல்லை

ஹேக்கிங் சம்மந்தப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யம் . சாத்தியமே இலாத விசயங்களை எல்லாம் சொல்வதால் நம்பகத்தன்மையும் சீரியஸ் உணர்வும் வர மறுக்கிறது . மேக்கிங்கில் கவர்கிறார் காளீஸ் .
உங்கள் போன், லேப் டாப், இதெல்லாம் உங்கள் நண்பன் அல்ல .. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு எதிரியாக மாறலாம் என்று சொல்லும் விஷயம் மட்டும் ஒகே .
கீ … கீச் கீச் !