சீசன் சினிமா சார்பில் கதிரேச குமார் மற்றும் யாழ் குணசேகரன் தயாரிக்க , கதிரேச குமார், கிருஷ்ணகுமார், விஜய ரணதீரன் , கே என் ராஜேஷ் , பேக்கரி முருகன் , அனுதியா , உறியடி அனந்தராஜ் நடிப்பில் அஜித் குமார் ஒளிப்பதிவில் கெபி இசையில் கே என் ராஜேஷ் படத் தொகுப்பில் யாழ் குணசேகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்.
கிராமத்துக் காட்டுப்புற குறுகிய தார்ச்சாலை ஒன்றில் ஒரு கர்ப்பணிப் பெண்ணோடு சிலர் காரில் வருகின்றனர். பத்திரமாக சீக்கிரம் வந்து சேரும்படி முன்பே ஒருவர் போனில் சொல்லியும் இருக்கிறார் . கார் பயணிக்க, முன்னால் ஒரு ஓங்கு தாங்கான வயதான நபர் (கதிரேச குமார்) ஒரு பழைய சைக்கிளில் போகிறார் . காரில் உள்ளோர் வழி விடும்படி ஹாரன் அடிக்க, அவர் மெதுவாகவே போகிறார் . காரில் இருந்து ஒருவர் இறங்கிப் போய் திட்ட அப்போதும் அவர் வழி விடவில்லை. இன்னொருவர் இறங்கி வருகிறார் . அவர் சொல்ல அப்போதும் வழி விட விலை . அடிக்கிறார்கள். திட்டுகிறார்கள்…. மற்றவர்களும் இறங்கி வந்து திட்டி அடிக்க, அப்போதும் அவர் வழி விடவில்லை .
அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலர் சமாதனம் செய்ய வருகிறார். அவர் சொல்லியும் வழிவிடாமல் நிற்க , ஒரு நிலையில் அவரும் வயதான நபரை கெழப் பய என்று திட்டுகிறார் . . காரில் உள்ளோர் தரப்பில் வேறு சிலர் வந்து அவர்களும் இணைய, அப்போதும் பெரியவர் வழி விட மறுக்க, ஒரு நிலையில் போலீஸ் வர, அப்புறம் என்ன என்று பார்த்தால்….
ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் கூட , அட என்று ஆச்சர்யப்படும்படி முற்றிலும் வேறு ஒரு விஷயம் சொல்லி அசத்துகிறார் இயக்குனர் யாழ் குண சேகரன்.
சுமார் நூறு நிமிடம் ஓடும் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் ஓரிரு நிமிடங்கள் கடைசியில் சுமார் பதினைந்து நிமிடம் தவிர , மிச்ச ஒன்னேகால் மணி நேரமும் ஒரே இடத்தில் ஒரே காட்சியாக நிகழ்வதால் கிட்தத் தட்ட இதுவும் ஒரு சிங்கிள் சீன் படம் ( மொத்த படமும் ஒரே காட்சியாக இருப்பது) என்று சொல்லலாம். . அதற்கேற்ப அந்த ஒற்றைக் காட்சிக்கு சிறப்பான லோக்கேஷனைப் பிடித்து இருப்பதையும் பாராட்டலாம் .
அவ்வளவு அடி உதை வாங்கியும் வழி விடாமல் நிற்கும் பெரியவர் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருகிறார் கதிரேச குமார் .
எப்படியாவது திரையரங்கில் திரையிடத் தகுதியான நீளத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக , ஒற்றைக் காட்சியின் ஒவ்வொரு அசைவுகளும் ரொம்ப நேரத்துக்கு நீள்கிறது . உதரணமாக பெரியவரின் சைக்கிளை ஒருவர் பிடுங்கி எறிய முயல்கிறார் என்றால் அவர் இழுக்க இவர் இழுக்க அதுவே அளவுக்கு மேல் நீள்கிறது. தவிர பேசியதையே ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் .
படமாக்கல் மற்றும் தொழில் நுட்ப நேர்த்தியும் மிகக் குறை . நடிப்பவர்கள் பலரின் நடிப்பும் வெகு செயற்கை.