ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்க, யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன், அனந்த நாக், ராமச் சந்திர ராஜு, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ஜான் கொக்கன், அச்யுத் குமார் , நாக பரணா நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கி இருக்கும் படம் .
மும்பையில் இருந்து கர்நாடகா வந்து கே ஜி எஃப் பைக் கைப்பற்றிய ராக்கி ( யஷ்) அங்குள்ள தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாக, மீண்டும் அதைக் கைப்பற்ற நினைக்கும் பழைய எதிரிகள், அவர்களின் வழியே வரும் புதிய எதிரிகள், பின்னணியில் இருக்கும் அரசியல் எதிரிகள் எல்லோரும் ராக்கியை குறிவைக்க, இதற்கிடையே ராக்கி வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்த பெண் கமர்ஷியல் சினிமா விதிகளின்படி அவரை காதலிக்க , என்ன நடந்தது என்பதே இந்த கே ஜி எஃ ப் 2. .ராக்கியின் சிலை ஒன்று அகழ்வாராய்ச்சியில் கிடைக்க , அவனது வரலாறை புத்தகமாக எழுதியவர் மரணப்படுக்கையில் கிடக்க,அந்த நோயாளியின் மகன் (பிரகாஷ் ராஜ்) கதையை சொல்ல , அரசு அதிகாரி (மாளவிகா) கேட்க , கதை விரிகிறது.
கதையை விடுங்க கழுதை . அதைப் பத்தி இப்ப யாருமே கவலைப்படுவதில்லை . ஆனால் மேக்கிங்கில் சும்மா மிரட்டுகிறார்கள். அதுதான் படத்தின் பெரும்பலம்.
தோற்றம், ஸ்டைல் , சண்டைக் காட்சிகள் அனைத்திலும் அசத்துகிறார் யஷ் . பிரம்மாதமான முன்னெடுப்பு.
பிரம்மாண்டம்… அசத்தல் லொக்கேஷன்கள் .. சிறப்பான சிஜிக்கள், அட்டகாசமான கலை இயக்கம், உடைகள், அந்த எல்டராடோ ஃபீலிங் , கூட்டம் கூட்டமாய் ஆட்கள், எங்கெங்கும் நிறைந்து இருக்கும் புழுதி மணல், என்று வாய் பிளக்க வைக்கிறார்கள் .
அட்டகாசமாக இயக்கி இருக்கிறார் பிரஷாந்த் நீல். பிரம்மிக்க வைக்கும் ஆற்றல்.
புவன் கவுடாவின் ஒளிப்பதிவு லோக்கேஷன்களை சும்மா வெறிப் பசி கொண்ட ராட்சஷி போல அள்ளிச் சாப்பிடுகிறது .
ரவி பர்சூரின் இசையும் ஒலி வடிவமைப்பும் காதுகளைப் புண்ணாக்கினாலும் கம்பீரம் காட்டவும் தவறவில்லை. உஜ்வல் குல்கர்னியின் படத் தொகுப்பு ஆக்ஷன் காட்சிகளிலும் , கூட்டம் நிறைந்து இருக்கும் காட்சிகளிலும் வித்தை காட்டி இருக்கிறது.
படத்தில் ஒரு ஹீரோ யஷ் என்றால் , இன்னொரு ஹீரோ அன்பறிவின் சண்டை இயக்கம் . அன்பறிவ் இல்லாமல் இந்தப் படத்தை யோசித்துக் கூடப் பார்க்க முடியாது . கிரேட் அன்பறிவு .
ஸ்ரீநிதி ஷெட்டி ஓகே .
சஞ்சய் தத் ஷோலே அம்ஜத்கானை நினைவுக்குக் கொண்டு வருகிறார் . டெர்ரர் நடிப்பு.
ரவீணா டாண்டன், அனந்த நாக், ராமச் சந்திர ராஜு, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ஜான் கொக்கன், அச்யுத் குமார் , நாக பரணா எல்லோருமே நாடகத்தனமாகவும் அதே சமயம் மிரட்டலாகவும் நடித்திருகிரர்கள் .
பின்னணி குரல்கள் அபாரம் .
கிளைமாக்சில் டைட்டிலுக்குப் பின் ஓர் அட்டகாசமான விஷயம் சொல்கிறார்கள் . ஆனால் சொல்லப்பட்ட உத்தியால் , அதைப் பார்க்காமலே பல ரசிகர்கள் வெளியே போய் விடுவதுதான் சோகம் . மூன்றாம் பாகத்துக்கு துவக்கம் கொடுத்து படத்தை முடிக்கிறார்கள்.
கடலில் காணமல் போய் மண்ணில் சிலையாய் இருக்கும் ராக்கி மீண்டும் பேன்ட் கோட் போட்டு தாடியோடு திரும்ப வந்தால் அதுதான் கே ஜி எஃப் 3 என்றறிக.
மொத்தத்தில் கே ஜி எஃ ப் 2……. அதிரி புதிரி