சென்னை வடபழனியில் வசிக்கும் பதினான்கு வயதுச் சிறுவன் விமல்ராஜ்.
சென்னை கே கே நகர் வாணி வித்யாலயாவில் ஒன்பதாவது படிக்கும் விமல்ராஜ், இப்போதே கிக் பாக்சிங்கில் உலக அளவில் மெடல்களைக் குவித்து வருகிறார் .
அமைப்பு மற்றும் அலுவல் ரீதியாக நடந்த முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கம் பெற, அதன் பிறகு மறு யோசனைக்கு வேலை இல்லாமல் போனது.
படித்துக் கொண்டே பயிற்சியும் பெற்று 2021 – 2022 ஆண்டுக்கான IAKO – NATIONAL KICKBOXING CHAMPIONSHIP போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இந்தோனேசியாவில் பாலி நகரில் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான WKA( WORLD KICKBOXING CHAMPIONSHIP) போட்டியிலும் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் .
விமல்ராஜின் அப்பா வழிப்பாட்டி விளையாட்டில் ஆர்வம் உள்ள ஆசிரியை. அப்பா எம் எல் விஜய் பாக்ஸிங்கில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் மகனை அதில் ஈடுபடுத்த, விமல்ராஜ் கிக் பாக்சிங்கில் ஆர்வம் கொண்டு இப்போது சாதனைகள் நிகழ்த்தி வருகிறார் .
இவ்வளவு திறமைகள் இருந்தும் இவர்களுக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கிறது . விமல்ராஜ் தந்தை எம் எல் விஜய், “இந்தோனேசியா போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அந்த நிகழ்ச்சிக்குப் போய் வர , ஒன்றரை லட்சம் செலவானது . முழுக்க முழுக்க எங்கள் செலவுதான். முடியாத நிலையில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவே முடியாமல் போய் விடுகிறது ” என்று வருந்துகிறார் .
தாயார் தமிழ்ச் செல்வி, ” அவன் படிக்கும் வாணி வித்யாலயா பள்ளியில் உதவுவதாக சொல்லி இருக்கிறார்கள். அவன் படிப்பு கெட்டுப் போகக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நிலையில் நிலைமையை சமாளிக்கத் தேவையான பொருளாதார பலம் இல்லை” என்று வருந்துகிறார் .
இருவரும் ஒரே குரலில் மிகுந்த எதிர்பார்ப்போடு , ” என் மகன் நம் இந்தியாவுக்கும் நமது தாய்த் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் – குறிப்பாக நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் என் மகனுக்கு உதவினால் எங்கள் மகன் நிறைய சாதிப்பார் . நாங்களும் என்றென்றும் நன்றியோடு இருப்போம் ” என்கிறார்கள் .
விளையாட்டு வீரர் விமல்ராஜ் என்ன சொல்கிறார் ?”இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் கிக் பாக்ஸிங் ஒலிம்பிக்கில் இடம்பெறும். அப்போது ஒலிம்பிக்கில் கிக் பாக்சிங்கில் முதல் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக நான் வாங்கி வர வேண்டும் . அதுதான் என் லட்சியம் ” என்கிறார் , கண்களில் கனவுகள் மின்ன.
மத்திய அரசு உதவுமா என்று தெரியவில்லை. ஆனால், தமிழக முதல்வர்- விளையாட்டுத்துறை அமைச்சர், விமல்ராஜுக்கு உதவ வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!