ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிப்பில் பூ ராம், மாஸ்டர் தீபன் , காளி வெங்கட், கதிர், மீனாம்பாள், விஜயா, லோகி, , ராஜு , பாண்டி நடிப்பில் ரா. வெங்கட் எழுதி இயக்கி இருக்கும் படம்
குடித்து விட்டு லேட்டாக வேலைக்குப் போவதால் கறிக் கடையில் மட்டன் வெட்டும் பணியில் இருந்து முதலாளியின் மகனால் நீக்கப்படுகிறான் வெள்ளைச்சாமி ( காளி வெங்கட்) . அவனது மகன் லோகிக்கும் (பாண்டி) அத்தை மகள் கமலிக்கும் (ஜோதி) காதல். அதை ஏற்காத அத்தை, தனது மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறாள்.
பெற்றோரை இழந்த நிலையில், தாத்தன் செல்லையா ( பூ ராம்) பாட்டி மீனம்மாள் ( பாண்டியம்மாள்) ஆதரவில் வளர்க்கப்படும் பேரன் கதிர் ( தீபன்) .
தீபாவளிக்கு பேரன் புது சட்டைக்கு ஆசைப்பட , அதை வாங்கித் தர தாத்தாவால் முடியவில்லை. வீட்டில் இருக்கும் கிடா ஆட்டை விற்று சட்டை வாங்கித்தர முயல்கிறார். ஆனால் அப்படி விற்று விட்டால் ஆட்டை வெட்டிவிடுவார்கள் என்பதால் ஆட்டின் மீது பாசம் காட்டும் பேரனுக்கு அதில் விருப்பமில்லை. தவிர அது சாமிக்கு நேர்ந்த கிடா என்பதால் யாரும் வாங்க வரவில்லை.
வேலை இழந்த வெள்ளைச்சாமி முதலாளி மகனுக்கு எதிராக புதிதாக கடை போட சவால் விட்டு விட்டு ஆடுவாங்க முயல்கிறான் . அவனது மகன் காதலியோடு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்லையாவின் கிடாவை வாங்க கடைசி நேரத்தில் வர, ஆடு திருடு போயிருக்கிறது . அப்புறம் என்ன என்பதே படம் .
அழகான கிராமத்துக் கதை . அச்சு அசல் கிராமம் . நிஜமான கிராமத்து முகங்கள் .. சரியான மொழி . மூன்று வெவ்வேறு சூழல்களை இணைத்த விதம் அழகு
நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்
கறிக்கு அட்வான்ஸ் வாங்கி அந்தக் காசில் ஆடு வாங்கும் ஐடியா, படத்தின் இறுதியில் மனிதர்களின் நல்ல குணங்களால் காட்சிகளை நிறைப்பது ஆகியவை அழகு .
இப்படி சிறப்பாக செய்தவர்கள் திரைக்கதையில் சறுக்கி விட்டார்கள் .
ஆடு திருடும் ஆட்களை முன்பே காட்டி விலாவாரியாக காட்சிகளும் வைத்து விட்டதால் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி அனுபவத்தை ரசிகர்கள் இழக்க வேண்டி இருக்கிறது . அதன் பிறகும் கடைசி வரை கிடைப்பது எல்லாம் சுமாரான காட்சிகளே
கிடா … கறியே இல்லாத மட்டன் பிரியாணி