தமிழ்த் திரை விருட்சம் சார்பில் தமிழ் மணி தயாரித்து கதாநாயகனாக நடிக்க, இசைஞானி இளையராஜா இசையில் ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் கிடா பூசாரி மகுடி .
“கோவில்களில் படையல் போடும் பூசாரி தவிர கிடா வெட்டும் வேலையை செய்ய தனியாக ஒரு பூசாரி இருப்பார். அவர்தான் கிடா பூசாரி . கதாநாயகன் அப்படி ஒரு கிடா பூசாரி . அவனது பெயர் மகுடி . அவன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மண் வாசனையோடு இந்தப் படத்தில் கொடுத்துள்ளேன் ” என்கிறார் இயக்குனர்.
தமிழ் மணியின் தந்தை தமிழ் அழகன் தே மு தி க (அதிருப்தி) எம் எல் ஏக்களில் ஒருவர் . தனது இளம் வயதில் சினிமாவில் நடிக்க விரும்பி ஒரு படத்தை தானே தயாரிக்கவும் ஆரம்பித்தவர். பின்னர் அது முடியாமல் போய் விட , இப்போது மகனை ஹீரோவாகவும் தயாரிப்பாளர் ஆகவும் ஆக்கி விட்டார் .
ஆனாலும் படம் தயாரிக்க முடிவு எடுத்ததும் பல கதைகளைக் கேட்டு, ஜெயக்குமார் சொன்ன கதையை தேர்ந்தெடுத்த பிறகும் , இந்தக் கதைக்கு தனது மகன் பொருத்தமாக இருப்பானா என்று யோசித்தாராம் (அனுபவம் ! அனுபவம் !!) .தமிழ் மணியின் கெட்டப்பை மாற்றி இயக்குனர் ஒரு டீசர் எடுத்துக் காட்டிய பிறகே சம்மதித்தாராம் .
படம் 70 சதவீதம் எடுக்கப்பட்ட நிலையில் படத்தை பார்த்து விட்டு இசை அமைக்க ஒத்துக் கொண்டாராம் இளையராஜா .
இந்தப் படத்துக்காக கதாநாயகி நக்ஷத்ரா மொட்டை அடித்துக் கொண்டு நடித்து இருக்கிறாராம். இது பற்றி ஒளிப்பதிவாளர் நெகிழ்ந்து போய் பேச, இயக்குனர் குரல் கம்ம பேசினார் . (சினிமான்னா இந்த மாதிரி டெடிகேஷன் இருக்கணும் நக்ஷத்திரா. மத்தபடி நீங்க பண்ணினது ரொம்ப பெரிய காரியம் எல்லாம் இல்ல . தட்ஸ் ஆல் )
படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் இது முழுமையான கிராமியப் படம் என்பது உணர்த்தியது. இளையராஜாவின் இசை படத்துக்கு பலமாக இருக்கும் என்பது புரிந்தது .