தமிழ்த் திரை விருட்சம் சார்பில் தமிழ்மணி தயாரிக்க, தமிழ் , நட்சத்திரா மற்றும் ராம்தேவ் ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் கிடா பூசாரி மகுடி .
இந்த மகுடிக்கு ரசனைப் பாம்பு மயங்கி ஆடுமா ? பார்க்கலாம்.
தென்னாற்காடு பகுதி கிராமம் ஒன்றில் பிறந்து, சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து, அக்காவால் வளர்க்கப்பட்டவன் மகுடி (தமிழ்) .
வாக்கப்பட்ட இடத்தில் அக்காவுக்கு குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறையாக இருக்க , ‘அக்காவுக்கு குழந்தை பிறக்க வேண்டும்’ என்று அந்த அறியா வயசிலேயே அய்யனாருக்கு வேண்டுதல் வைத்து,
தவம் இருந்தவன் அவன் .
அக்காவுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்க, அவளுக்கு மலர் என்று பெயரும் மனம் முழுக்க பாச மணமும் வைத்தவன் .
அக்காவின் குறையை நீக்கிய கோயிலில், கிடா வெட்டும் பணியை விரும்பி ஏற்று, இளம் வயதிலேயே கிடா வெட்டும் பூசாரியாகவே மாறிவிட்டவன். .
எந்த அளவுக்கு கோவக்காரனோ அந்த அளவுக்கு நல்லவன் . எந்த அளவுக்கு நல்லவனோ அந்த அளவுக்கு அவசரக்காரன்.
அதே கிராமத்தைச் சேர்ந்த– பெற்றோர் கை விட்ட நிலையில் தாத்தா பாட்டியால் வளர்க்கப்படுகிற — தாத்தா பாட்டிக்கும் ஒத்தாசையாக இருக்கிற – ஓர் இளைஞன் ( ராம்தேவ்) .
மலர் மேல் மகுடி உயிரையே வைத்திருக்க, பெரிய மனுஷியான மலருக்கு (நட்சத்திரா) அப்பா அம்மா இல்லாத அந்த இளைஞன் மீது காதல் வருகிறது . ஊரும் அது பற்றி அவல் மெல்கிறது.
விஷயம் தெரிந்து மலரின் அம்மா (கம்பம் மீனா), மலரை அடித்து உதைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப் போக ,
ஓடி வரும் மகுடி , தன் அக்காவை அடித்துத் தள்ளி ,”யாரோ என்னவோ சொன்னதற்காக மலரை சந்தேகப்படுவதா?” என்று கோபப்பட்டதோடு நில்லாமல் ,
அப்படியே மலரை அழைத்துக் கொண்டு போய் கோவிலில் நிற்க வைத்து தாலி கட்டி விடுகிறான் .
காதலனும் சென்னைக்குப் போய் விடுகிறான் .
ஆரம்பத்தில் வேதனைப்பட்டாலும், மாமன் மகுடியின் உண்மையான அன்பில் நெகிழும் மலர் , காதலனை மறந்து கணவன் மகுடியுடன் கருத்தொருமித்துக் குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள்
வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்த நிலையில் , காதலனின் தாத்தா இறந்து போக , காதலன் மீண்டும் ஊருக்கு வருகிறான் . அது மட்டுமல்ல பாட்டிக்காக அந்த ஊரிலேயே தங்குகிறான் .
இந்த நிலையில் நடக்கும் சின்னச் சின்ன இயல்பான நிகழ்வுகள் கூட மலர் மீது மகுடிக்கு அநியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
விளைவாக மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்கிறான் மகுடி . அப்புறம் மகனையும்.!
ஒரு நிலையில் மலரின் பழைய காதலனுடனும் ரோட்டில் புரண்டு சண்டையும் போடுகிறான் மகுடி .
இந்த சந்தேகமும் கோபமும் உச்சத்துக்குப் போகும்போது என்ன நடந்தது என்பதும் அதன் பிறகு கதபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளுமே இந்த கிடா பூசாரி மகுடி .
அடடா!
தங்கர் பச்சானின் அழகி படத்துக்குப் பிறகு , அச்சு அசலான , கவிதைப் பூர்வமான களங்கமில்லாத ஒரு கிராமத்துப்படம் .
கிராமத்துப் பின்புலத்தை பயன்படுத்திய விதம அழகோ அழகு !
கிடா பூசாரியாக நடித்துள்ள தமிழ் , மகுடியாகவே வாழ்ந்து இருக்கிறார் . கோபம் , பாசம் , வேகம் ,முரட்டுத்தனம் , என்று…
கதாபாத்திரத்துக்குத தேவையான அனைத்து உணர்வுகளையும் அழகாக சித்தரிக்கிறார் . சபாஷ் .
படம் துவங்கிய பத்தாவது நிமிடத்துக்குள் மலர் கதாபாத்திரம் மேல் நமக்கு ஒரு காதலே வருகிறது . அந்தக் காதலை அதிகப்படுத்தும்படியாக மிக அழகாக நடித்துள்ளார் நட்சத்திரா .
அந்த உதட்டுப் புன்னகையும் கண்களின் சிரிப்பும் ரம்மியம். இயக்குனர் அவரை திரையில் பயன்படுத்திய விதம் அருமை.. அட்டகாசம் .
இசைஞானி இளையராஜா மீண்டும் ஒரு மாசு படாத கிராமத்து மண்வாசனையை தனது இசையில் படம் முழுக்க தவழ விட்டிருகிறார். கவிஞர் மேத்தாவின் வரிகளில் செவியிலும் சிந்தையிலும் தேனூற்றும் பாடல்கள் . .
மணிக்குயிலு சத்தம் எமக்கு கேக்குது கேக்குது ராசா! ராசா!!
கிராமியப் படம என்பதை சாக்காக வைத்து பச்சை பசுமை என்று பிரித்து மேயாமல் , மண்ணின் சூழல் , யதார்த்தமான வறட்சிப் பின்னனி, கேரக்டர்களின் மன நிலை , காட்சியின் உணர்வு …
இவற்றுக்குப் பொருத்தமான ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார் ரவி சீனிவாஸ் . வாழ்த்துகள் !
ஒவ்வொரு கதாபத்திரத்துக்குமான நியாயத்தை அல்லது நிலைப்பாட்டை அந்த கதாபாத்திரத்தின் இடத்தில் நின்று சொல்லி திரைக்கதையிலும் இயக்கத்திலும் கவனம் கவர்கிறார் இயக்குனர் ஜெயக்குமார் . பாராட்டுகள் !
‘இருந்தும் இருந்தும மலருக்கு காதலிக்க ஒரு கேரளாக்காரப் பையன்தனா கிடைத்தான்/’ ?
— இப்படி ஒரு கேள்வி நகைச்சுவையாகக் எழும் அளவுக்கு (கதைப்படி உள்ளூர் நபர்தான் என்றாலும்) காதலன் பாத்திரத்தில் பொருத்தமே இல்லாமல் அந்நியமாகத் தெரிகிறார் ராம் தேவ்.
காரணம் அவரது மலையாள வாசனைப் பேச்சும் , அவ்விட தேச முக பாவனைகளும் .
மலரின் அம்மா கதாபாத்திரம் வரை பொருத்தமான நபர்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து இருக்கும் இயக்குனர், இந்த காதலன் கதாபாத்திரததுக்கான நடிகர் தேர்வில் ரொம்பவும் சறுக்கி இருக்கிறார் .
படத்தின் இன்னொரு இமாலய பிரச்னை .. இந்தப் படம் விவரிக்கப்படும் விதம், தமிழ் சினிமாவின் பொற்காலமான எண்பதுகளின் படமாக்கல் பாணியில் இருப்பதுதான்
படத்தில் “ஒரு காலத்துல இந்த காதலுன்னா ரொம்ப புனிதமானது ” என்று ஒரு பாடல் வருகிறது. படமும் அந்தக் காலத்தில் வந்திருந்தால் பட்டையைக் கிளப்பி இருக்கும் .
சரி இப்போது இப்படி எடுக்கக் கூடாதா?
எடுக்கலாம் . தப்பில்லை . ஆனால் அதற்கேற்ப திரைக்கதையின் வடிவத்தில் சில மாறுதல்கள் செய்து இருக்க வேண்டும் .
என்ன செய்திருக்க வேண்டும்? . இதை ஒரு பீரியட் பிலிம் ஆக சொல்லி இருக்க வேண்டும் .
அல்லது இந்தக் காலகட்டத்துக்கான ஒரு ஆரம்பம் கொடுத்து இந்த முழு படத்தையும் பிளாஷ்பேக் ஆக சொல்லி , மீண்டும் காரண காரியத்தோடு 2016 பாணியில் ஒரு காட்சி வைத்து ,
படத்தை முடித்து இருக்க வேண்டும்.அப்போது இது இந்தக் காலத்துக்குப் பொருத்தமான படமாக மாறி இருக்கும். அதைச் செய்யாதது தகவமைப்பு ரீதியாக ஒரு பெரிய பின்னடைவே !
இப்போது நின்று நிதானித்து ரசிக்கும் தலைமுறை எல்லாம் காணாமல் போய் விட்டதே .
கிடா பூசாரி மகுடி ஒரு ஆடு என்றால் , இந்த அவசர கோல ரசனை மன நிலைதான் இந்தப் படத்தை ஒரே போடாக வெட்டுவதற்காக உயர்ந்து எழுந்த கொடுவாள் .
மொத்தத்தில் கிடா பூசாரி மகுடி .. அந்தக் காலத்து அற்புதப் பாட்டு