விதார்த், ரவீணா, ஜார்ஜ் , ஹலோ கந்தசாமி, ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. ரசிகர்கள் மீது கருணை காட்டுமா படம்? பார்க்கலாம் .
கல்யாண வேண்டுதலாக ராம மூர்த்தியின் அப்பத்தா வளர்த்து வந்த ஆட்டை குலதெய்வமான முனியாண்டி கோவிலில் வெட்டி சாமி கும்பிட்டு வருவதற்காக முதலிரவு கூட நடக்காத நிலையில் கிளம்புகிறார்கள்
ஆடு வெட்டி உரிக்க ஆள், சமையல் பார்ட்டி, நண்பர்கள் , உறவு முறை மாமன் மச்சான் எல்லோரும் சேர்ந்து ஆட்டையும் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பிடித்து குல தெய்வம் கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.
வழியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்கிறது . அது பெரும் அசம்பாவிதம் ஆகிறது . அந்த அசம்பாவிதம் குற்றமாக நிர்ணயிக்கப்படுகிறது .
அந்த குற்றத்தை செய்தது ராம மூர்த்தி என்று ஆகிறது . அதற்குத் தூண்டியது சீதா என்று ஆகிறது .
அதில் இருந்து தப்ப அல்லது பிரச்னையை முடிக்க எல்லோரும் சேர்ந்து எடுக்கும் முயற்சிகளை மீறி, புதிதாக உள்ளே நுழையும் ஆட்கள் மூலம் பெரும் விபரீதங்கள் ஏற்படுகிறது . அது ரத்தக் களறியில் முடிகிறது
எது குற்றம் ? எதனால் அது குற்றம் ? அது யார் செய்த குற்றம்? அரசின் தீர்ப்பு என்ன? மக்களின் மன ஓட்டம் எப்படி ? பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதித்ததாக நம்புபவர்களின் உறவு எப்படி இருந்தது .
அதில் மனிதம் என்ன ஆனது ? மதிப்பீடுகள் என்ன ஆனது ?
வெட்டுவதற்கு கொண்டு போன கிடா என்ன ஆனது ? யார் நிஜமான கிடா ? வெட்டியது யார்? வெட்டப்பட்டது யார்? வெட்டியது குற்றமா ? வெட்டுப் பட்டது குற்றமா ?
என்ற கேள்விகளின் பதிலே இந்தப் படம்
சபாஷ் சங்கையா !
எந்த ஜோடனையும் மேனா மினுக்கும் இல்லாமல் , அச்சு அசலாக மண்ணும் மனமும் கண்ணீரும் வியர்வையும் ரத்தமும் சதையுமாக ,
சற்றே சுயநலமும் நிறைய மனிதாபிமானமும் கொண்ட கதாபாத்திரங்களுடன், ஒரு இயல்பான உணர்வுப் பூர்வமான படத்தைக் கொடுத்தமைக்காக மனமார்ந்த பாராட்டுகள் !
முதல் தொடுகைக்கு கணவன் காத்திருக்க , பரிசுப் பொருளை பிரித்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் யதார்த்தமான் கிராமத்துப் பெண்ணின் செய்கையில் துவங்கும் போதே,
படம் சட்டென்று மனசில் ஒட்டிக் கொள்கிறது .
திருடப்பட்ட ஆட்டை முதலிரவு ஜோடிக்கு தொந்தரவு இல்லாமல் இரவில் தேடிப் பிடித்து வைக்கும் உறவு முறைகள் , உறவுகளோடு போய் லாரி பேசுவது , என்று காட்சி விவரிப்புகள் அவ்வளவு யதார்த்தம் .
சாமான்களை ஏற்றி அப்புறம் ஆளை ஏற்றுவது , புதுப் பொண்டாட்டி லாரிக்கு உள்ளே மற்றவர்கள் வெளியே , பயணத்தில் வரும் மழையில் நனைவது,
அப்புறம் அடிக்கும் சுள் வெயிலுக்கு முந்தானை எடுத்து முகத்தை மறைக்கும் கிராமத்து பழக்கம்…. அடேயப்பா…
இந்தப் படத்தின் டைரக்டர் குறைந்தது அஞ்சாறு ஆடு வெட்டுகளுக்காவது லாரியில் பயனித்திருக்கக் கடவது !
சடன் பிரேக்கில் லாரியின் டாப்பில் இருக்கும் நபர் குட்டிக் கரணம் அடித்து லாரியின் உள்ளே இருக்கும் தண்ணீர் டிரம்முக்குள் விழுந்து குளித்து மேலே எழுவது குபீர் சிரிப்பு என்றால் ,
அடுத்த நொடியில் ஆரம்பிக்கும் விபரீதம் , அது அடுத்தடுத்து எடுக்கும் திருப்பங்கள் என்று .. நேர்த்தியான திரைக்கதை . அடுத்து பல பரபரப்புகள் . படபடப்புகள் ! அருமை .
உதவி செய்ய வரும் மனிதர்கள் செய்யும் துரோகங்கள் அரசு துறை நபர்களின் மனசாட்சியற்ற தன்மை , அந்த காட்டு மிராண்டித்தனமான செயல்களைப் பற்றி பேசும் விதத்தில் ஒரு நாகரீகம் என்று ,
பல விசயங்களை அழகாகப் பேசுகிற திரைக்கதை . .
உண்மையை மாற்றி பொய் சொல்லி அந்த பொய்யை உண்மை என்று நம்ப வைத்து ஒரு நிலையில் உண்மையை பொய் போல சொல்லி அதன் மூலமும் காசு பார்க்கும் நபர்கள்,
சட்டத்தின் ஓட்டைகளை வைத்து அவர்கள் சுய நலப் புல்லாங்குழல் வாசிக்கும் விதம் என்று படம் பேசும் ஏரியாக்கள் மிக சிறப்பானவை .
மிக இயல்பான படமாக்கல் .
விதார்த் மிக இயல்பான நடிப்பில் கவர்க்கிறார் .
ரவீணா பொருத்தமாக நடித்துள்ளார் .
அரும்பாடு பட்டு என்ற வார்த்தையை வைத்தே காமெடி பட்டாசு கொளுத்தும் ஹலோ கந்தசாமி, அதே போல வார்த்தைக்கு வார்த்தை காமெடி வாண வேடிக்கை நடத்தும் சித்தன்,
ஆறுமுகம் மற்றும் அனைத்து நடிக நடிகையருமே அருமை .
அப்பத்தா மிக அருமை .
பூசாரியின் தோளில் சாய்ந்தபடி அலறிக் கொண்டு வரும் மூதாட்டி நடிப்பில் நம் அடி வயிற்றைக் கலங்க வைக்கிறார் . நடிப்பா நிஜமா என்று ஒரு நிமிடம் நாமே ஆடிப் போகிறோம் .
படத்தை அவர் முடித்து வைக்கும் விதமும் அழகு .
உறவு பாசம் நட்பு இவற்றால் ஒரு தவறுக்கு துணை போகும் அதே மனிதர்கள் , பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீரில் கரைந்து தங்கள் குற்றத்தை உணர்ந்து அழும் காட்சி விவரிக்க முடியாத அற்புதம் .
தனி மனிதன் என்று அல்லாமல் ஒரு சமூகத்தையே நேசமாகப் பார்த்தால் மட்டுமே இது போன்ற காட்சிகளை அமைப்பது சாத்தியம்
கோர்ட் சீனில் அந்த ஜட்ஜ் பேசும் விதமும் வார்த்தைகளும் அசத்தல் .
அடுத்து வரும் டி வி நிருபரின் கேமராவுக்கு சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள் சொல்லும் பதில் ரகளை என்றால், அந்தக் கடைசி காட்சி நெகிழ்வுக் கவிதை .
பணத்தை விட மனிதம் முக்கியம் என்று எண்ணும் நபர்களை எதிர் கொள்ளும் அனுபவம் , திரையில் என்றாலும் கூட , அது தரும் திருப்தியே தனி
அதே மேற் சொன்ன விஷயங்களை எல்லாம் வெகு ஜன ரசிகனையும் ஈர்த்து கலங்க வைக்கும் வகையில் இன்னும் அழுத்தமான ,உணர்வுப் பூர்வமான படமாக்கல் இந்தப் படத்துக்கு தேவைப்படுகிறது
குறிப்பாக மேலே சொன்ன மூதாட்டியின் அழுகை காட்சி நமக்குள் ஏற்படுத்திய உணர்வை படத்தில் இன்னும் பல காட்சிகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
காட்சிகள் உள்ளே விஷயம் இருந்தும் அவற்றை திரைப் படைப்பாக சொன்ன விதம் கொஞ்சம் பலவீனமாக உள்ளது .
ஆனாலும் என்ன ..
ஒரு கிடாயின் கருணை மனு.. தமிழ் சினிமாவில் பூத்திருக்கும் புதிய குறிஞ்சி மலர் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
சுரேஷ் சங்கையா , மன்னிக்கும் மூதாட்டியாக நடித்தவர் , ஹலோ கந்தசாமி மற்றும் பல துணைக் கதாபாத்திர நடிகர்கள் , சாகர் சாத்வானி மற்றும் சித்தி புஜார