கிருமி @ விமர்சனம்

kirumi 1

கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் சார்பில் எஸ். ராஜேந்திரன்,  ரஜினி ஜெயராமன்,  எல். பிரித்வி ராஜ், கே.ஜெயராமன் ஆகியோர் தயாரிக்க … மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிருடன் ரேஷ்மி மேனன் ஜோடியாக நடிக்க, நடிகர் சார்லி மற்றும் வனிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க,  அனுசரண் என்ற அறிமுக இயக்குனர் கதை எழுதி,  படத்தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் கிருமி.

படத்தின் திரைக்கதை வசனத்தை காக்கா முட்டை  மணிகண்டனும் அனுசரணும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். இந்த கிருமி தாக்குமா? காக்குமா? பார்க்கலாம். 

வடசென்னையில் ஒரு குறைந்த வருவாய் குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிறு வீட்டில் குடியிருக்கும் இளைஞன் கதிர் (கதிர்). அக்காவின் (வனிதா) மகளை (ரேஷ்மி மேனன் ) திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தந்தையானவன் அவன்.

அக்காவும் மனைவியும் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்ய , கிளப் கம் பாரில்  சூதாடிக் கொண்டும் குடித்துக் கொண்டும் ஊர் சுற்றுபவன் கதிர். அவன் வழக்கமான சூதாடும்  கிளப்பின் உரிமையாளரின் தம்பியும் செல்வாக்குள்ள ரவுடியுமான ஒருவன்  ஒருமுறை கதிரை அடித்துக் கேவலப்படுத்தி  இருக்கிறான் . அது கதிருக்கு ஆறாத அவமானம்.

 அதே நேரம் உறவை விட பாசம் காட்டும் ஒரு நல்ல மனிதரும்  (சார்லி) கதிருக்கு உண்டு.  அவரது மனைவியான மாற்றுத் திறனாளிப் பெண்மணி  கதிருக்கு இன்னொரு அக்கா போல.

அந்த நல்ல மனிதர் போலீசுக்கு இன்ஃபார்மர் வேலை செய்பவர் .(போலீசாக அல்லாமல் குற்றவாளிகளை பின் தொடர்ந்து விவரங்களை சேகரித்து போலீசுக்கு தரும் ரகசியமான தனி நபர்களே இன்ஃபார்மர்கள் ) அவர் மூலம் கதிருக்கும் அந்த இன்ஃபார்மர் வேலை கிடைக்கிறது . போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றும் வாய்ப்பு,  ஒரு நிலையில்  ஒரு சிறு பவராக மாற,  கதிருக்கு  ஒரு இன்ஸ்டன்ட் பந்தா வாழ்க்கை கிடைக்கிறது . 

kirumi 8

சக இன்ஃபார்மரையே  இன்ஸ்பெக்டரிடம் போட்டுக் கொடுக்கிறான்.  தன்னை அடித்த ரவுடிக்கு சொந்தமான சூதாட்ட கிளப்பையும்  இன்ஸ்பெக்டருக்கு போட்டுக் கொடுக்கிறான்  உண்மையில் அந்த கிளப்,  இந்த இன்ஸ்பெக்டரின் ஏரியாவுக்குள்ளேயே வராது.  எனினும் , நார்காட்டிக் சட்டம் கொடுத்த சலுகைப்படி ஏரியா தாண்டி அந்த கிளப்புக்குப் போய் ரெய்டு செய்கிறார் இன்ஸ்பெக்டர் .

காரணம் கிளப் இருக்கும் – சம்மந்தப்பட்ட அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கும் கதிரின் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் உள்ள பனிப் போர் .

முன்பொரு முறை கதிரை அடித்து அவமானப்படுத்திய செல்வாக்குள்ள அந்த  ரவுடியை கதிரின் முன்னாலேயே அடித்து அசிங்கப்படுத்துகிறார் கதிரின் இன்ஸ்பெக்டர் . அவனை கைதும் செய்கின்றனர் . கதிரின் ஈகோ சந்தோஷப்படுகிறது.

கிளப்பின் ஓனர் தனது ஏரியா இன்ஸ்பெக்டரிடம் போகிறான் . காரணம் மாசா மாசம் அந்த ஓனர்,  அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாமூல் கொடுக்கிறான் என்பதுதான் .

தவிர அந்த கிளப்பில் கணக்கில் காட்டப்படாமல் இருந்த இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் பணத்தையும் கதிரின் இன்ஸ்பெக்டர் ‘லபக்’கிக் கொண்டு வந்துவிடுகிறார் . ஒரே நேரத்தில் கிளப் ஓனரும் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரும் அவரவர்  கோணத்தில் கோபத்தின் உச்சிக்குப் போகிறார்கள். 

இதற்கெல்லாம் காரணம் கதிர் என்பது தெரியாமல் , கதிரின் மேல் பாசம் காட்டும் அந்த  நல்ல மனிதரான இன்ஃபார்மர்தான் காரணம் என்று எண்ணி அவரைக் கொன்று விடுகிறார்கள், பார் மற்றும் கிளப் ஓனரின் அடியாட்கள்! கூட இருந்தும் கதிரால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

அந்த நல்ல மனிதரின் மனைவி கர்ப்பிணியான நிலையில் அனாதையாகிறாள் . தன்னால் அந்த மனிதர் இறந்து விட்டாரே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான் கதிர் .

kirumi 2

ஒரு நிலையில் 25 லட்ச ரூபாய் பணப் பிரச்னையில் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சமாதானம் ஆகிறார்கள் . அவர்களோடு கிளப் ஓனரும் அவரது தம்பியும் சேர்கிறார்கள் . எந்த இன்ஸ்பெக்டருக்காக இதுவரை கதிர் இன்ஃபார்மராக இருந்தானே அவரே ஒரு நிலையில் கதிர் உயிரோடு இருப்பது25 லட்ச ரூபாய் தான் திருடிய விசயத்தில் தனக்கு பிரச்னையாக வரும்  என்று முடிவு செய்கிறார் .

கிளப் ஓனரின் ஆட்கள் கதிரைக் கொலை செய்ய முயல , அதற்கு கதிரின் இன்ஸ்பெக்டரும் துணை போக…  அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தக் கிருமி . 

படத்தின் மிகப் பெரிய பலம் இயக்குனர் அனுசரணின் மேக்கிங் . அதற்கு முக்கிய உதவியாக இருப்பது  அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு.   வறுமை , எளிமை, மர்மம் , சிக்கல், இழப்பு எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது இயக்குனரின் ஷாட்களும் ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவும் .  

எந்த நடிகருக்கும் மேக்கப்பே போடாமல் எல்லோரையும் அழகாகப் படம் பிடித்து இருக்கிறார் அருள் வின்சென்ட். படத்தின் அடுத்த பலம் இசையமைப்பாளர் கே கொடுத்திருக்கும்  இயல்பான பின்னணி இசை. அருமை!

இயக்குனர் அனு சரணின் படத்தத் தொகுப்பும் படத்தை போரடிக்காமல் நகர்த்தவும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கவும் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது.

மிக சிறப்பாக கேரக்டரை உணர்ந்து நடித்து இருக்கிறார் கதிர் . அந்தக் கண்களின் BAAவமும் உடல் மொழிகளும் மிக அருமை . நல்ல படங்கள் அமைந்தால் குறிப்பிடத்தக்க உயரம் தொடுவார் இந்தத் தம்பி.

ரேஷ்மி மேனன் ஓர் இயல்பான நல்ல– கீழ் நடுத்தர வர்க்கத்து நகரத்துப் பெண்மணியை அழகாக பிரதிபலிக்கிறார். எனினும் நடிப்பில் அசத்தி இருப்பவர் என்றால் முதல் இடத்தைப் பிடிப்பவர் இன்ஃபார்மராக வரும் சார்லி . அடுத்து இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் .

kirumi 9

பரபரப்பு , பரிதவிப்பு, திரில் , திகில், சோகம் , வெறுமை என்று எல்லா உணர்ச்சிகளையும் அழகாக திரையில் கொண்டு வருகிறார் இயக்குனர் அனுசரண் . அடடா ! கணவன் மனைவியின் காதலையும் காமத்தையும் தமிழ் சினிமாவில் பார்த்துதான் எத்தனை நாள் ஆச்சு . இந்தப் படத்தில் அதை ஒரு கண்ணியக் கவிதை போல சொல்லி இருக்கிறார் இயக்குனர் . சபாஷ்

படத்தில் வரும் காவல் நிலையங்கள் உண்மையில் நிஜ காவல் நிலையங்களோ என்று ஐயம் வர வைக்கும் அளவுக்கு,  காவல் நிலைய அரங்குகளை அவ்வளவு இயல்பாக அமைத்திருக்கும்  கலை இயக்குனர் எஸ்.எஸ்.மூர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

கதாநாயகியின் பாத்திரப் படைப்பு, வேலை , யதார்த்தம் ,  குடும்ப செட்டப், சார்லி கேரக்டரின் மனைவி கதாபாத்திர வடிவமைப்பு இவற்றில் காக்கா முட்டை மணிகண்டன் தெரிகிறார் .

இப்படிப் பாராட்ட பல விஷயங்கள் இருந்தாலும் சில முக்கியமான விசயங்களில் படம் சறுக்காமலும் இல்லை படம் . 

இன்பார்மர் தொழில் என்பது பலருக்கு தெரியாத ஒன்று. அது பற்றி ஒரு சின்ன அறிமுகம் கொடுத்து இருக்கலாம்.

முக்கியமாக சார்லி கேரக்டர் மேல் வரும் பரிதாபத்தில் கொஞ்சம் கூட கதிர் கேரக்டர் மேல் வரவில்லை . காரணம் அந்த கேரக்டரே தவறான ஒருவனின் கேரக்டர் . அவனே ஒரு பொறுக்கி. அவன் படும் கஷ்டத்துக்கு நாம் ஏன் வருத்தப்படவேண்டும் ?

அதே போல கிளைமாக்ஸ் மிகப்பெரிய ஏமாற்றம் . யதார்த்தம் என்ற பெயரில் செய்யப்பட்டிருக்கும் அநியாயம் .

ஒரு மணி நேரம் 44 நிமிஷம் ஒருவனை ஹீரோ என்று நம்பி ஒரு படத்தைப் பார்த்தால் , கடைசியில் ‘போலீஸ்காரர்கள் ,கிளப் ஓனர்கள் , ரவுடிகள் எல்லாம் அப்படிதான் அநியாயம் செய்வார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அதை கண்டு கொள்ளாமல் நீ ஒதுங்கிப் போவதுதான் புத்திசாலித்தனம். ‘ என்று முடிவு செய்து ஹீரோ கண்டு கொள்ளாமல் போகிறான் என்று சொல்லி,  படத்தை முடிக்கிறார்கள் .

kirumi 3

அதுவும் யதார்த்தப்படி அதன் பிறகும் கதிரை அவர்கள் எல்லாம் நிம்மதியாக வாழ விடுவார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலையில் அவன் அப்படிப் போவதுதான் கொடுமை.

அதுமட்டும் இல்லாமல் போலீசுக்கு இன்ஃபார்மர் வேலை பார்பவர்களை எல்லாம் பயமுறுத்துகிறது இந்தப் படமும் அதன் முடிவும்.

உண்மையில் இந்தப் படத்தின் திரைக்கதை எப்படி இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்? பார்ப்போமா?

சென்ற தலைமுறையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து இப்போது நல்ல வேலை , கை நிறைய வருமானம் , அழகான காதலி  அல்லது மனைவி குழநதைகள் என்று செல்வச் செழிப்பில் வாழும் ஒரு இளைஞன்.

அவனுக்கு வேண்டிய ஒரு குடும்பம் சமூக விரோதக் குற்றவாளிகளால் பாதிக்கப்படுகிறது . அந்தக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் , அந்தக் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கலாம் என்ற நிலைமை. போலீஸ் எவ்வளவோ முயன்றும் குற்றவாளிகளைக்  கண்டுபிடிக்க முடியவில்லை . 

பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு உதவ எண்ணி இந்த இளைஞனே தன் போக்கில் விசாரிக்க , இவனுக்கு சில தகவல்கள் கிடைக்க,  அதை அவன் போலீசுக்கு சொல்ல ,அதன் காரணமாக  குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள் . பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கிறது .

பாதிக்கப்பட்டவர்கள் போலீசை வாழ்த்த , அந்த நல்ல போலீஸ் அதிகாரி , இந்த இளைஞனைக் காட்டி ‘இவன்தான் குற்றவாளிகள் பிடிபடக் காரணம்’ என்று சொல்ல , நிவாரணம் பெற்ற அந்தக் குடும்பமே இளைஞனை கண்ணீரோடு நெகிழ்ந்து வாழ்த்துகிறது .

kirumi 6

குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசுக்கு உதவும் இந்த வேலை இவனுக்கு பிடிக்க , அவனை பாரட்டும் அந்த நல்ல போலீஸ் அதிகாரி , இன்ஃபார்மர் வேலையின் அவசியம் , சிறப்பு பற்றி எல்லாம் கூறுகிறார் . அவன் விரும்பி இன்ஃபார்மர் ஆகிறான் . சமூக விரோதிகள் பற்றிய பல தகவல்களை அவனாகவே கண்டுபிடித்து போலீசுக்கு சொல்லி பலருக்கும் நியாயம் கிடைக்க உதவுகிறான் .

தனது வேலைக்கு கூட ஒழுங்காக போகாமல் பல இழப்புகளை சந்தித்தபடி, வெயில் – மழை, இரவு- பகல், நகரம்- கிராமம், பட்டினி – தாகம் பாராமல் இன்ஃபார்மர் வேலைக்காக குடும்பத்தைக் கூடக் கவனிக்காமல்  உழைக்கிறான் .

அந்த நல்ல இன்ஸ்பெக்டர் மாற்றல் ஆகிறார் . ஸ்டேஷனுக்கு ஒரு மோசமான இன்ஸ்பெக்டர் வருகிறார் . அவன் வழக்கம் போல கஷ்டப்பட்டு பணியாற்றுகிறான். அனால் இன்ஸ்பெக்டர் அதை முறைதவறிப் பயன்படுத்துகிறார். சக அதிகாரிகளுடன் சண்டை, ரவுடிகளின் நட்பு என்று போகும் அந்த இன்ஸ்பெக்டர் இவன் தரும் செய்திகளை முறைகேடாக பயன்படுத்தி தவறுகள் செய்கிறார் .

ஒரு நிலையில் நாயகன் இன்ஃபார்மர் வேலையை வெறுத்து விலகுகிறான் . ஆனால் அவனை வற்புறுத்துகிறார்  இன்ஸ்பெக்டர். அவன் தொடர்ந்து மறுக்க , கிரிமினலை விட கேவலமாக  யோசிக்கும் இன்ஸ்பெக்டர் , இவன் எந்தெந்த சமூக விரோதிகள் பற்றி செய்தி கொடுத்து தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தானோ , அந்த சமூக விரோதிகளுக்கு எல்லாம் இவனை போட்டுக் கொடுக்கிறார்.

தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்

எல்லோரும் நாயகனை கொலை செய்ய துரத்த , நாயகன் இன்ஸ்பெக்டரிடம் வந்து உயிர்ப்பிச்சை கேட்க, அவர் தனக்கு உதவ வற்புறுத்துகிறார் . கொந்தளிக்கும் நாயகன் இன்ஸ்பெக்டரை சுட்டுத் தள்ளுகிறான் . கைது செய்யப்படுகிறான் .

கோர்ட்டில் நீதிபதி முன்பு பொங்குகிறான் . இன்ஃபார்மர் வேலை செய்யும் ஒரு நபருக்கு இயல்பாகவே உள்ள கஷ்டங்கள் , பிரச்னைகள் , ஆபத்துகள் , சமூக அவமானங்கள் இவற்றை சுட்டிக்காட்டுகிறான் .

” போலீஸ்காரங்க பலபேருக்கு பந்தோபஸ்துக்கு போகவும் , அரசியல்வாதிக்கு சல்யூட் அடிக்கவும் , ஜீப் எடுத்துக் கிட்டு தெருத் தெருவா போய் கடைக்கரங்ககிட்ட  அஞ்சு பத்துன்னு மாமூல் பிச்சை எடுக்கவுமே போலீஸ்காரங்களுக்கு நேரம் இல்ல .

இந்த நிலையில் பல கேஸ்கள்ல விசாரணை சரியா போகவே எங்களை மாதிரி இன்ஃபார்மர்கள் தரும் தகவல்தான் முக்கியம் . ஆனா எங்களைக் கொண்டாட வேண்டிய போலீஸ்காரர்களே எங்களை காட்டிக் கொடுத்தா என்ன நியாயம் ? ” என்று முழங்க…

நல்ல போலீஸ் அதிகாரிகள் அவனை ஆதரிக்க , இன்பார்மரான  ஹீரோவின் நியாயத்துக்கு ஒரு வலிமை கிடைக்க…

இப்படி இந்தப் படத்தின் திரைக்கதை போயிருந்தால் இந்தப் படம் தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கும் . ஆனால் அப்படி எதுவும் இல்லாதது வருத்தமே .

எனினும் ஒரு வித்தயாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு மேக்கிங்கில் அசத்தி இருக்கும் வகையில் கவனத்தில் தொற்றுகிறது இந்தக் கிருமி . 

மொத்தத்தில் கிருமி … antibody.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →