கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் சார்பில் எஸ். ராஜேந்திரன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கால் நூற்றாண்டுக்கும் மேல் உதவியாளராக இருந்த ஜெயராமன்.. இவர்களுடன் எல். பிரித்வி ராஜ், கே.ஜெயராமன் ஆகியோர் தயாரிக்க …
மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிருடன் ரேஷ்மி ஜோடியாக நடிக்க, ஆஸ்திரேலியாவில் பல குறும்படங்களை இயக்கிய அனுசரண் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் கிருமி.
24ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வாங்கி வெளியிடுகிறார்
நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளை லாக் செய்து போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்புவதில் போலீசுக்கு உதவும் வேலைக்குப் போகும் ஓர் இளைஞன் , அப்படியே போலீஸ் இன்ஃபார்மராக மாறி, போலீஸ் செய்யும் தவறுகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ துணை போய்….
அதனால் நியாயமாக நல்லவர்களின் கோபத்துக்கும் அநியாயமாக கிரிமினல்களின் கோபத்துக்கும் இடையில் பந்தாடப்பட்டு , தவறான போலீஸ் அதிகாரிகளின் இரும்புப் பிடியிலும் சிக்கிக் கொண்டு , கடைசியில் என்ன ஆனான் என்ற ரீதியில் படத்தின் கதை போகிறது
படத்தின் கதை திரைக்கதையை , காக்காமுட்டை படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மணிகண்டனும் இந்த அனுசரணும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.
அனுசரண் இசையமைப்பாளர் நடிகர் ஜி வி பிரகாஷ் மூலம் நாயகன் கதிருக்கு அறிமுகம் ஆகி, அந்த வழியில் தயாரிப்பாளர் ராஜேந்திரனை அடைந்து, இந்த கிருமி படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர். படத்தின் படத் தொகுப்பாளரும் இவரே.
படத்தில் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் . இந்தப் படத்தில் நடித்த எந்த நடிகருக்கும் மேக்கப்பே போடக் கூடாது என்று கூறி, மேக்கப்பே இல்லாமல் எல்லோரையும் அழகாகப் படம் பிடித்து இருக்கிறார் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன் , எம். ரஜினி ஜெயராமன் , எல்.ப்ரித்திவி ராஜ் , கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் , தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
”திறமை உள்ள மனிதர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும் , இப்போது கூட நான் முகத்துக்கு வேடமிட்டு வந்திருக்கிறேன் ஆனால் நான் படத்தில் உண்மையான தோற்றத்தில் நடித்திருக்கிறேன் ”என்றார் நடிகர் சார்லி.
இசை அமைப்பாளர் கே , “எனக்கு படத்தில் நல்ல இசையமைக்க நிறைய வாய்ப்புள்ள காட்சிகள் இருந்தன. நான் அதை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக இசையமைத்துள்ளேன். படத்தின் பாடல்கள் ஆறும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
அடுத்ததாக பேசிய படத்தின் நாயகி ரேஷ்மி மேனன் ” கிருமி என்ற இந்த படத்தின் தலைப்பை கேட்டதும் நான் ஷாக் ஆகிவிட்டேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற யோசனை என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
படத்தின் நாயகன் கதிர் பேசும் போது, “மதயானை கூட்டம் படம் வெளியான பின்பு நான் பல கதைகளை தேர்ந்தெடுத்தே நடித்தேன். இந்த கதையின் முதல் 45 நிமிடங்களை இயக்குனர் என்னிடம் சொல்லும் போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன்” என்றார்.