யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் கோடை மழை .
”கோடை மழை என்பது கோடைக் காலத்தில் பெய்யும் மழை என்றுதான் பொருள் படும். ஆனால் இந்தப் படத்தில் இந்தப் பெயரை கோடையும் மழையும் என்ற பொருளில் வைத்து இருக்கிறோம் . படத்தின் முதல் பகுதி முழுக்க கோடையை பின்புலமாகக் கொண்டு இருக்கும். இரண்டாம் பகுதி முழுக்க மழையை பின்புலமாகக் கொண்டு இருக்கும். ” என்று, ஓர் ‘அடடே’ அறிமுகம் கொடுத்து விட்டுத் தொடர்கிறார் இயக்குனர் கதிரவன்
“ஓர் ராணுவ வீரன் தனது சொந்த ஊரான, திருநெல்வேலிப் பகுதியில் உள்ள சங்கரன் கோவிலுக்கு இரண்டு முறை வந்து போகும்போது நிகழும் சம்பவங்கள்தான் படம் . அந்த ஊர் காவல் அதிகாரி ஒருவருக்கும் அவனுக்கும் ஏற்படும் உரசல்கள் பற்றிய கதை இது .ஆனால் இதில் யாருமே கெட்டவர் இல்லை . அவரவர் நிலையில் அவரவர் கொள்ளும் உறுதியை படம் சொல்கிறது. ” என்று முடிக்க ,
“அந்த காவல் அதிகாரியாக நான் நடிக்கிறேன் ” என்று துவங்கும் இயக்குனர் களஞ்சியம் ” பொதுவாக திருநெல்வேலி பாஷை என்றால் ‘ஏலே…’, ‘வாலே…’ , ‘போலே……’ என்பதோடு முடித்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் நுணுக்கமாக அந்த பாஷையை இயக்குனர் கையாண்டு இருக்கிறார் .
பிரியங்கா இவ்வளவு கலரான பொண்ணு என்பதே எனக்கு இப்போதான் தெரியுது . ஷூட்டிங் சமயத்துல கருப்பா இருந்தார் . அந்த அளவுக்கு அந்த ஊர் வெயிலில் கிடந்தது உடலை கருக்கிக் கொண்டு நடித்தார். புதுமுகம் கண்ணனும் அப்படியே. இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. ” என்றார்
படம் பற்றி பிரியங்கா சொல்லும்போது ” நல்ல அண்ணனான ஒரு காவல் அதிகாரி , மிக நல்ல காதலனான ஒரு ராணுவ வீரன் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உரசலை தீர்க்கப் போராடும் ஒரு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் எனக்கு . வந்தா மல படத்தில் சென்னை பாஷை பேசி நடித்தேன் .இது முற்றிலும் மாறான கிராமியப் பாத்திரம் . எனக்கு இது ரொம்ப பிடிச்சு இருந்தது” என்கிறார்.
அறிமுக நாயகன் கண்ணன் ” வாய்ப்புத் தேடிப் போன என்னை தேர்ந்தேடித்த இயக்குனர் கதிரவனுக்கும் தயாரிப்பாளர் அலெக்சாண்டருக்கும் நன்றி . அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை நான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இயக்குனர் பல நாட்கள் என்னை அந்த மக்களோடு வாழ வைத்து பழக்கினார் . எனக்கே புதுப் பிறவி போல இருந்தது ” என்கிறார்
பாடல்கள் எழுதி இருக்கும் வைரமுத்து முதன் முதலாக எல்லாப் பாடல்களையும் நெல்லைத் தமிழில் எழுதி இருக்கிறாராம்.
படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி ” இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கு யாராவது சிரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தர்றேன் ” என்று சொல்லி இருப்பதாக இயக்குனர் கூறுகிறார் .
அப்போ, செம காமெடி இருக்குனு சொல்லுங்க !