செந்தூர் பிலிம்ஸ் மற்றும் இன்ஃபினிடிவ் பிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் கோடியில் ஒருவன் .
கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு வரும் ஏழைப் பெண் ஒருவர் மக்கள் மீது அன்பு கொண்டு நேர்மையாக செயல்பட, அது பிடிக்காத மேல் மட்ட அரசியல்வாதி , கர்ப்பிணியாக இருக்கும் அவளைக் கொல்ல முயல, கொலை முயற்சியில் தப்பிக்கும் அவளுக்கு குழந்தை பிறக்கிறது .
அதிகாரம் முக்கியம் என்று நினைக்கும் அவள் மகனை ஐ ஏ எஸ் ஆகச் சொல்ல, சென்னை வந்து படித்தபடியே சமூக சேவை செய்யும்அவன் ஐ ஏ எஸ் கனவின் வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது,
அரசியல்வாதிகளால் பிரச்னை வந்து கனவு கலைய அப்புறம் என்ன ஆனது என்பதே கோடியில் ஒருவன் .
சமூக சேவை , எளிய மக்களுக்கான முன்னெடுப்பு, அரசியல் கசடுகளை கழுவுதல் என்று ஏழைப் பங்காளன் கதாபாத்திரத்தில் ரசித்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி . உற்சாக நாயகியாய் ஆத்மிகா
அம்மாவின் ஆரம்பக் கதையும் அவரது சபதமும் அருமை . அடிமைப் பெண் படத்தை நினைவூட்டும் கம்பீரம் .அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபாவும் கவனம் கவர்கிறார் .
விதம் விதமான வில்லன்கள் பக்க மசாலா நெடி தூவுகிறார்கள் . டைலர் கதாபாத்திரம் வித்தியாசம் .
குடிசை மாற்று வாரியம் போன்ற பகுதிகளில் வாழும் ஏழைப் பிள்ளைகள் விரும்பினாலும் முன்னேற முடியாத அளவுக்கு எப்படி அரசியல் ரவுடித்தனம் விளங்குகிறது என்று காட்டிய விதம் அருமை.
விஜய் ஆண்டனியே நடித்த திமிரு புடிச்சவன் படத்தை நினைவு படுத்தும் நல்ல காட்சிகளும் உண்டு . வசனத்தில் வேறு திமிரு புடிச்சவன் , பிச்சைக்காரன் படங்கள் நினைவு கூரப்படுகின்றன .ஒரு காட்சியில் விஜய் நடித்த கத்தி படமும் நினைவுக்கு வருகிறது .
ஒளிப்பதிவு , இசை அருமை.
மலைப்பாங்கான அந்த லொக்கேஷன் உள்ளம் கொள்ளை கொள்கிறது
விஜய் ஆண்டனியே படத் தொகுப்பு செய்திருக்கிறார் .
சுயேச்சை எம் எல் ஏ படத்தை நினைவு படுத்தும் அரசியல் சித்து விளையாட்டுகள் மூலம் பரபரப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளை கொண்டு போய் படத்தை சிறப்பாக முடிப்பதோடு ஆரம்பம் முதல் கடைசி வரை அருமையான படமாக்கலில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் .
கோடியில் ஒருவன் — 3.75/5
