தியா மூவீஸ் சார்பில் பிரதீப் தயாரிக்க, போப்டா சார்பில் தனஞ்செயன் வெளியிட விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் கொலைகாரன் .
‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்ற ஜப்பானிய நாவல், கொரியப் படமாக வந்தது . அதை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் திருஷ்யம் படம் வந்து தமிழில் பாபநாசம் வந்தது .
இப்போது நாவலை நேரடியாக அனுமதி பெற்று, கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நிறைய மாற்றி , கொலைகாரன் ஆக்கி இருக்கிறார்கள் .
கொலை ஒன்று நடக்கிறது . அது தொடர்பாக பிரபாகரன் ( விஜய் ஆண்டனி) என்பவர் தானே குற்றவாளி என்று சரண் அடைகிறார் . விசாரிக்கவரும் காவல் துறை அதிகாரி கார்த்திகேயனிடம் ( அர்ஜுன்) வாக்கு மூலம் கொடுக்கிறார் ( கொலைகாரன் பிரபாகரன்; போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் … ம்ம்ம் .. இதெல்லாம் ரொம்ப ஓவர் !)
வாக்குமூலம் பிளாஷ்பேக் ஆக விரிகிறது . பிரபாகரன் குடியிருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஓர் இளம் பெண்ணும் ( ஆஷிமா) அவளது அம்மாவும் (சீதா) குடி இருக்கிறார்கள் .
பிரபாகரனின் பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக்கில் எதிர் வீட்டுப் பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது போல காட்சிகள் வருகின்றன . ஆரம்பத்தில் கொலை செய்யப் படுவதும் இந்தப் பெண்ணே )
அந்த எதிர் வீட்டுப் பெண்ணை ஒருவன் துரத்துகிறான் . ஆந்திராவில் மந்திரியின் காம வெறி பிடித்த சகோதரன் அவன் . மந்திரியிடம் பணியாற்றிய தந்தை இறந்த நிலையில் , அந்த காம வெறியன் , இந்தப் பெண்ணை அடைய முயல ,அவள் தன் தாயுடன் அங்கிருந்து தப்பி சென்னை வந்து விட்டது சொல்லப் படுகிறது .
இந்நிலையில் அந்த மந்திரியின் சகோதரன் கொல்லப்பட்டு எரிக்கப்பட, அவனை அடையாளம் கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரி, விசாரணை மூலம், மந்திரி தம்பி- இளம்பெண் பிரச்னையை அறிகிறார் .
அந்தப் பெண்ணுக்கு பிரபாகரன் உதவுகிறார் .
மந்திரி தம்பியை கொன்றது யார் என்று கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் அதிகாரி திணறுகிறார் . அவருக்கு ஒய்வு பெற்ற அதிகாரி ஒருவர் ( நாசர் ) உதவுகிறார்.
மந்திரி தம்பியை கொன்றது யார் ? எதிர் வீட்டு பெண்ணும் , பிரபாகரனின் பிளாஷ்பேக்கில் வரும் காதல் மனைவியும் ஒரே நபராக இருப்பது எப்படி ? என்பதே இந்த கொலைகாரன் .
விஜய் ஆண்டனியின் ஆரம்ப காலப் படங்களான நான், சலீம் போன்ற ஓர் ஆழமான அமைதியான , நிதானமான அழுத்தமான படமாக்கல் .
போலீஸ் விசாரணையை மிக நுணுக்கமாக உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறார்கள். கருகிய பிணத்தை ஆழ்ந்து முகர்ந்து பார்க்கும் போஸ்ட் மார்ட்டம் டாக்டர் , மிரண்டு பார்க்கும் போலீஸ் .. ஹா ஹாஹா !
அப்போல்லோவை அடித்துத் துவைக்கும் கேமரா டயலாக் .. செம செம !
பாத்திரத்தை உணர்ந்து நுண்ணிய முக பாவங்களோடு சிறப்பாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. அழுத்தமான நடிப்பு .
ஆஷிமா இயல்பாக இருக்கிறார் அர்ஜுன் , நாசர் , சீதா பாத்திரப் பொருத்தம் .
இரண்டு வேறு வேறு கதைப் போக்குகளை ஒன்று போலக் காட்டி பின்னர் அது வேறு இது வேறு என்று திரைக்கதை சொல்கிறஅதற்குரிய பலம் பலவீனம் இரண்டும் படத்தில் இருந்தாலும், அந்த உத்தியே படத்தை ஆர்வத்தோடு பார்க்கவும் வைக்கிறது
முகேஷ் ஒளிப்பதிவு மர்ம உணர்வுக்கு பலம் சேர்க்கிறது .
தீம் மியூசிக்கில் மனம் கவர்கிறார் சிமோன்கிங் .
கடைசியில் எதுக்கு அந்த சினிமாத்தனமான டுவிஸ்ட் ?.
ஆந்திராவில் அரசியல் காரணமாக , ஒரு குற்றவாளியை கைது செய்ய முடியாமல் பாதிக்கவும் பட்டு சென்னை வந்த போலீஸ் அதிகாரி ,
இங்கே அவன் இன்னொரு அராஜகம் செய்ய முயலும்போது வச்சு செஞ்சார் ; அது சில அப்பாவிகளுக்கு நன்மையாக போனது என்று யதார்த்தக் கதையாகவே சொல்லி இருக்கலாம்.
அசந்தர்ப்ப பாடல்கள், பீப் ஹோல் இல்லாதஅப்பார்ட்மென்ட் வீடு, தனி ஆளாக சென்னைக்கு வந்து தான் அடைய விரும்பிய பெண்ணை தேடும் ஆந்திர மந்திரி தம்பி, இப்படி சில விஷயங்கள் படத்தின் யதார்த்த குணாதிசயத்துக்கு எதிராக தென்பட்டாலும் ,
ரசித்து நுகர ஒரு அற்புதமான திரில்லர் ‘ கொலைகாரன்’