லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாக்குலின், ஆர் எஸ் சிவாஜி , சரவணன் நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம் கோலமாவு கோகிலா .
கோலமாவு என்றதும் கோலம் போடும் மாவை (மட்டும்) சின்ன சின்ன பாக்கெட்டில் பேக் செய்து விற்கிற கோகிலா என்று நினைச்சீங்களா ? கோகைன் போதைப் பொருள்ங்க .
சரி, இந்த கோலமாவு கோகிலா அலங்கோலமா ? இல்லை விழாக் கோலமா ? பார்க்கலாம் .
நியாயமான அப்பாவியான ஆனால் பலகீனமான் ஏடி எம் காவலாளியான பாண்டிக்கும் ( ஆர் எஸ் சிவாஜி),
யதார்த்தமான பாமரத்தனமான வடிவுக்கும் (சரண்யா) பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்தவள் கோகிலா (நயன்தாரா) இளையவள் ஷோபி (ஜாக்குலின்)
கோகிலாவை டாவடிக்கிறார் மளிகை கடை வைத்து இருக்கும் சேகர் (யோகிபாபு) அவர் அதை சொல்லும்போதும்,
பொறுமையாக மறுக்கும் அளவுக்கு நல்லவள் கோகிலா . ஷோபியை காதலிக்கிறான் ஒரு காதல் வெறி பிடித்த இளைஞன். (ஆனந்த்?)
வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் வருகிறது . முப்பது லட்சம் தேவைப்படுகிறது . வேலை செய்யும் நிறுவனம் ,
என் ஜி ஓ அமைப்புகள் என்று பல இடங்களில் மோதியும் பணம் கிடைக்கவில்லை .
படுக்கையை பகிர்ந்து கொண்டால் பணம் தருகிறேன் என்கிறார்கள் சில ‘பெரிய’ மனிதர்கள் .
இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தும் ஒருவன் போலீசில் சிக்க கோகிலா காரணமாக ,
அதற்காக ஷோபியை கடத்தும் நபர்கள், ‘கடத்தலுக்கு உதவி செய்யா விட்டால் தங்கையை விட மாட்டோம்’ என்கிறார்கள் .
அம்மாவை மீட்க பணம் கிடைக்காத நிலையில் தானே மீண்டும் கடத்தல்காரர்களிடம் போய் வேலை கேட்கிறாள் .
அவர்களும் கொடுக்க, பணம் கிடைக்கிறது. தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுகிறாள் .
ஒரு நிலையில் போலீசிடம் சிக்கும் சூழ்நிலை வந்து தப்புகிறாள் . தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் போதைப் பொருள் கடத்தும் கூட்டத்துக்குள் பிரச்னை வருகிறது .
வேலை கொடுத்தவனே கோகிலாவிடம் தவறாக நடக்க முயல , இவள் தடுக்க, அவன் அடிபட, அவனால் இயங்க முடியாத சூழலில் ,
அவன் கடத்த வேண்டிய 100 கிலோ போதைப் பொருளை கடத்தும் வேலை கோகிலாவுக்கு வருகிறது .
கோகிலாவை குடும்பத்தோடு கொன்று விட கடத்தல் கும்பல் திட்டமிட அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
கதைதான் இப்படி சீரியஸ். ஆனால் திரைக்கதை வசனம் இயக்கம் மூலம், கல கல காமெடி படமாக வந்திருக்கிறது கோலமாவு கோகிலா .
ஹாலிவுட்டில் வந்த We’re the Millers படத்தை எடுத்துக் கொண்டு அதில் ஆண் கதாபாத்திரத்துக்குப் பதில்,
பெண்ணாக மாற்றிப் போட்டு நகைச்சுவைக் கோலமாவு அரைத்து அதை நயன்தாரா என்ற பளபளப்பான பாத்திரத்தில் கொட்டி விற்கிறார்கள்
மளிகைக் கடை சேகராக வரும் யோகிபாபு, , கடைக்காரப் பையன் , காதல் வெறி இளைஞன் , கழுத்தில் கட்டுப் போட்ட தாதா ,
இன்னொரு தாதாவின் ஆசை நாயகியின் தம்பி என்ற சலுகை கெத்து காட்டும் டோனி, , போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியாக,
பியூட்டி பார்லர் பைத்தியமாக வரும் நிஷா , சற்றே நான் கடவுள் ராஜேந்திரன் … இவர்கள் மட்டுமல்ல ..
”அவன அடிச்சு உதைச்சு மிதிச்சு கிழிச்சு…. ” என்று ஆனந்த் அடுக்கும் போது, சற்றென்று எழுந்து,
” என் பொடவைய கிழிச்சுடாதப்பா ” என்ற இடத்தில் சரண்யாவும் குபீர் என்று சிரிக்க வைக்கிறார் .
ஆகியோரை பயன்படுத்திய விதத்தில் , ஸ்கிரிப்டில் சின்சியராக வேலை பார்த்து இருப்பதும் புரிகிறது .
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு , தாதாக்கள் கட்டிடம், லாட்ஜ், கோகிலாவின் வீடு , இவற்றை காட்சியின் உணர்வுகளுக்கு ஏற்ப நடிக்கவே வைக்கிறது என்றால் அது மிகை அல்ல .
அனிருத்தின் இசை , குறிப்பாக பின்னணி இசை படத்துக்கு யானை பலம் . பதைப்பான காட்சிகளுக்கு பரபரப்பு கூட்டுதல் ,
நகைச்சுவைக் காட்சிகளுக்கு பலம் சேர்த்தல் என்று இரண்டு வகையிலும் பலம் சேர்க்கிறார் அனிருத் .
பேசும் கண்களாலும் இம்மியும் பிசிறடிக்காத நேர்த்தியான அசத்தலான நடிப்பாலும் தூக்கிப் பிடிக்கிறார் நயன்தாரா .
படத்தின் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி சத்தாக இல்லை என்றாலும் முதல் பாதி போட்டுக் கொடுத்த ,
அடித்தளமும் படத்தை முடிக்கும் விதமும் குறைகளைக் குறைத்து விடுகிறது .
கோலமாவு கோகிலா … வண்ணக் கோலம்