வெர்ட்டிகல் பிலிம்ஸ் சார்பில் ரசிக், ஈ.எம் , ஜபருல்லா மற்றும் பலர் தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து நேசம் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் கொள்ளிடம்.
இசை ஸ்ரீகாந்த தேவா .
தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜபருல்லாவின் அண்ணன் இப்ராஹீம்தான் ஒருதலை ராகம் படத்தை எடுத்தவர்.
”மனித இனத்துல இருபது சதவிதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் என்பது சதவிதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம்.
அழகு குறைவா இருக்குற எண்பது சதவிதம் பேர் ஒருதலையாதான் காதலிக்க முடியுது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம்
‘இந்த மூஞ்சிக்கு இது தேவையா?’ன்னு நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், இதுவே கொள்ளிடம் படத்தின் கதைக்கரு. டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. “
–-என்று படத்தைப் பற்றிக் கூறுகிறார் இயக்குனர்- ஹீரோ நேசம் முரளி (ஆக , இதுலயும் ஒருதலை வருது )
கொள்ளிடம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா , சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க குளுகுளு அரங்கில் நடந்தது.
பாடல்களை தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் , இயக்குனர்கள் சங்கத் ்தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர் கே செல்வமணி இயக்குனர் பேரரசு ஆகியோர் வெளியிட்டனர்.
மூன்று பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன . ஒரு பாடலில் ஸ்ரீகாந்த் தேவா தோன்றி ஆடுகிறார் .
நிகழ்ச்சியில் பேசிய வெள்ளையன் ” எல்லா வணிகமும் நன்றாக இருந்தால்தான் சினிமாவும் நன்றாக இருக்கும் . சினிமாவும் ஒரு வணிகம் என்பதால் அதுவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை ” என்றார் .
இயக்குனர் நேசம் முரளி பேசும்போது ” ஒளிவிளக்கு படத்தில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் , குறத்தி மகன் படத்தில் ஜெமினி கணேசன் ஆகியோர் நரிக்குறவர் வேஷம் போட்டு ஆடுவார்கள் .
அந்த இரண்டு படமும் சூப்பர் ஹிட் . ஆனால் இந்த கொள்ளிடம் படத்தின் கதையை நான் சில ஹீரோக்களுக்கு சொன்னபோது நரிக்குறவராக நடிக்க மறுத்தார்கள் . எனவ நானே நடித்து விட்டேன் ” என்றார் .
ஸ்ரீகாந்த் தேவா ” எம் ஜி ஆர் , ஜெமினி மட்டுமல்ல , இயக்குனர் பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலில் இளைய தளபதி விஜய் நரிக்குறவர் வேடத்தில் ஆடுவார்.
அதனாலேயே அந்தப் பாடல் ஹிட் ஆனது . ” என்றார் .
பேரரசு ” சிவகாசி மட்டுமல்ல.. திருவண்ணாமலை படத்திலும் ஹீரோவை நரிக்குறவர் வேடத்தில் ஆட வைத்துள்ளேன் ” என்றார்
ஆர்.கே. செல்வமணி பேசும்போது ” எந்த தொழிலிலும் பலம் நிறைந்தோர் மட்டுமல்லாது எளியவர்களும் தங்கள் வழியில் பிழைக்க வழி இருக்கிறது . கப்பலில் போய் மீன் பிடிப்பதும் நடக்கிறது .
கட்டுமரத்தில் போய் மீன் பிடிப்பதும் நடக்கிறது . ஆனால் சினிமாவில் மட்டும் வல்லவர்கள் மட்டுமீ வாழ முடிகிறது .
இது மீறி சிறிய படங்களும் ஓட வழி செய்தால்தான் தமிழ் சினிமா முன்னேறும் .
இந்த அரங்கில் நடக்கும் முதல் பாடல் வெளியீட்டு விழா இது . சிறிய படங்களுக்கான பாடல் வெளியீட்டு விழா , மற்றும் சினிமா நிகழ்சிகளுக்கு இந்த அரங்கு தரப்படும் . ஷூட்டிங்கிற்கும் பயன்படுத்தலாம் ,
கட்டணமும் மற்ற இடங்களில் உள்ளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் . ” என்றார்
விக்ரமன் தன் பேச்சில் “சூப்பர்ஹிட் ஆன ஒளி விளக்கு , சூப்பர் ஹிட் ஆன குறத்தி மகன் மற்றும் சிவகாசி படங்களைப் போல இந்தப் படமும் வெற்றி பெறும்” என்றார்
இந்த கொள்ளிடம் படத்தின் விளம்பரத்தில் ‘இந்தியாவிலேயே நரிக்குறவர் வாழ்க்கையை பதிவு செய்யும் முதல் படம்’என்று விளம்பரம் செய்கிறார்கள் . ரொம்ப தப்பு
கலைஞானத்தின் கதை இயக்குனர்ப் திலகம் கே எஸ் கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் , கே ஆர் விஜயா நடித்து 1972 இல் வந்த வந்த வந்த குறத்தி மகன் திரைப்படம்,
நரிக்குறவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்த முதல் படம் .
அடுத்து சுதாகர், வனிதா ஸ்ரீ நடிப்பில் மாந்துறை பாபுஜி என்பவர் இயக்கத்தில் 1979 இல் வந்த படம் கரை கடந்த ஒருத்தி .
முதலில் இந்தப் படத்துக்கு கரை கடந்த குறத்தி என்றே பெயர் வைக்கப்பட்டு பின்னர் கரை கடந்த ஒருத்தி என்று மாற்றப்பட்டது
இவையும் நரிக் குறவர்கள் வாழ்க்கையை முழுக்க பதிவு செய்த படங்கள்தான் .