குபீர் @ விமர்சனம்

kubeer reveiw
kubeer reveiw
சரக்கு சவால்

ஆர்ச்சர் சினிமாஸ் தயாரிப்பில் திலீப்,  தமிழ், பிரதாப், ஒய்ட்டு, ரவி, பிரபு , போவர் ஆகியோர் அதே பெயரிலேயே  படத்திலும் நடிக்க,   கதை திரைக்கதை வசனம் எழுதி முதலாமவரான திலீப் இயக்கி இருக்கும் படம் குபீர். சந்தோசம் பற்றிக் கொள்ளும் அளவுக்கு இருக்கிறதா படம்? பார்க்கலாம் .

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து நாயோடு வாக்கிங் போய் வந்து,  தங்கி இருக்கும் வீட்டை சுத்தமாக பராமரித்து,   ஒரு சராசரி பெண்ணை விடவும் பிரம்மாதமாக விதம் விதமாக சமைக்கத் தெரிந்த ஓர் இளைஞன்…

ஒரே நேரத்தில் அக்காவை டாவடிக்கும் அதேவேளையில் வலிய வந்து விழும் அவளது தங்கைக்கும் ரூட் போட முயலும் ஒருவன்….

ஒரு அழகான பெண் தன்னிடம் காதலை சொல்லியும் நடிகையா அல்லது சக தோழியா என்று விளக்கப்படாத இலியானா என்ற பெண் மீது கொண்ட காதலுக்காக அந்த அழகான பெண்ணை புறக்கணிக்கும் ஒருவன்….

அதைப் பார்த்து வயிறெரிந்து அந்த பெண்ணிடமே கெஞ்சி காதலை சொல்லும் அவனது நண்பன்…..

அலுவலகம் முடிந்து கிளம்பும்போது ஹெட் போனில் பாட்டுக் கேட்டுகொண்டே சாலையில்  வேகமாக ஜாக்கிங் செய்தபடியே போலீசையே  டென்ஷன் செய்து விட்டு வந்து சேரும் ஒரு இளைஞன் ….

ஐ டி நிறுவனங்களில் பணி  புரியும் இவர்கள் ஐவரும்,  தாங்கள் தங்கி இருக்கும் அறையில் ஒரு சனிக்கிழமை இரவு காஸ்ட்லியான ஃபாரின் சரக்கோடு வீக் எண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள்.

kubeer review
தள்ளாடாத ஆட்டம்

சேகுவாரா, பிரபாகரன் , ஹிட்லர்,  பெரியார் , அண்ணா, கலைஞர் , எம்ஜிஆர் , சிவாஜி, கமல்,  ரஜினி , எம் ஆர் ராதா , , கவுண்டமணி ஹரிகுமார் வரை, , பிராட்பிட் , ஜெனிபார் லோபஸ் என்று உலகளாவிய பிரபலங்கள் வரை இயல்பாக பேசுகிறார்கள்.

 இந்தித் திணிப்பு, திராவிட இயக்க வளர்ச்சி, முதல் உலகப் போர், ஜப்பானின் அரசியல் குசும்பு , பியர்ல் ஹார்பர் அட்டாக், சீனா, கூடங்குளம் பிரச்னை ,பவர் கட் கஷ்டம், பாடி ஃபிட்னசில் உணவுப் பழக்கத்தின் பங்கு , பேய் பிசாசு கதைகள், என்று பல விஷயங்கள் பற்றி சுவையாக உரையாடுகிறார்கள் . (திராவிடம் என்ற சொல்லின் பொருள் , இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற இரண்டு விசயத்தில் மட்டும் சொதப்புகிறார்கள்) 

இந்தி மொழி உண்மையில் இந்திய மண்ணின் மொழியே அல்ல, ஹிட்லர் பக்கம் இருந்த நியாயம் என்ன? ஈழம் எப்படி அழிக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் ஆழ்ந்த அறிவோடு குடித்துக் கொண்டே விவாதிக்கிறார்கள்.

அவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்து இருக்கும் அவர்களது கல்லூரிக்கால புரபசர் இடையில் வந்து ரெண்டு மூணு ரவுண்டு போட்டு விட்டு, சீக்கிரம் எல்லோரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ள அட்வைஸ் பண்ணிவிட்டு,   நல்ல பிள்ளையாக தனது வீடு போகிறார் .

பாட்டுப் போட்டு விட்டு ஆடுகிறார்கள் . பாடுகிறார்கள். எம் ஆர் ராதா நடித்த ரத்தக் கண்ணீர் காட்சியை போட்டுப் பார்த்து கைதட்டி ரசிக்கிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள், கைப்  பளு பார்க்கும் விளையாட்டு விளையாடுகிறார்கள். சைகைகள் மூலம் படத்தின் பெயர் கண்டு பிடிக்கும் விளையாட்டு விளையாடுகிறார்கள். கொஞ்சம் டபுள் மீனிங் பேசுகிறார்கள் .குடித்து விட்டுப் போன புரபாசர் எழுதிய நூல்களை வியந்து பாராட்டி விமர்சனம் செய்து பேசுகிறார்கள்

ஒருவரை ஒருவர் வாரிக் கொள்கிறார்கள் . தனியே சிறுநீர் கழிக்கப் போகும் ஐவரில் ஒருவனை பேய் போல மிரட்டி பயமுறுத்துகிறார்கள் . ஹிட்லருக்கு ஆதராவாக பேசியவனின் மீசையை வலுக்கட்டாயமாக ஹிட்லர் மீசை போல ஆக்குகிறார்கள். ஒருவன் தலையை கொஞ்சம் சிரைக்கிறார்கள். இன்னொருவனை மொட்டை அடிக்கப் போக , அவன் முடியின் அவசியம் சொல்ல மன்னிக்கிறார்கள்.

இப்படியாக காலை வரை பொழுதை கழித்து விட்டு காலையில் ஒருவனின் தம்பி வர, அவனை கார் ஓட்ட சொல்லிவிட்டு (குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது அல்லவா?) சாப்பிடப் போகிறார்கள் . படம் முடிகிறது .

kubeer reveiw
ரவுண்டு ரவுண்டை ரவுண்டுகள்

ஆச்சர்யமாக இல்லை ? முதல் பாதி வரை படத்தின் பலமே இந்த அறிவார்ந்த அசால்ட்டுதான்.

பொதுவாக ஒரு வணிக ரீதியான வெற்றிப் படத்துக்கு என்று சில விதிகள் சொல்வார்கள் .

நம்பர் ஒன். கவர்ச்சி காட்டவோ கண்ணீர் விடவோ ஒரு கதாநாயகி வேணும்! .

ஆனால்  இந்தப் படத்தில் ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகளில் சில பெண்கள் வருகிறார்கள் . அதன் பின் படத்தில் வரும் அந்த நாய் கூட ஆண் நாய்தான். (பூனைக்குட்டி ‘விவரம்’ தெரியவில்லை). ஆனால் ஹீரோயின் இல்லை என்ற குறையே தெரியவில்லை.

நம்பர் டூ …நிறைய லொக்கேஷன் மாறவேண்டும் . அப்போதுதான் ரிலாக்சாக இருக்கும் . !

ஆனால் இந்தப் படத்தில் முதல் சில காட்சிகளுக்கு பிறகு முழுப் படமும்– கிட்டத்தட்ட சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் —  ஒரு வீட்டுக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனாலும் போரடிக்கவில்லை .

நம்பர் திரீ. எல்லாரும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டே இருக்கக் கூடாது .

ஆனால் இந்தப் படத்தில் எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால்  இடைவேளை வரை நேரம் போனதே தெரியவில்லை . அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்களை  பேசுகிறார்கள் .

சும்மா சொல்லக் கூடாது புதியவர்கள் அசத்தி இருக்கிறார்கள் . சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது . இப்படிப்பட்ட திரைக்கதை கொண்ட ஒரு படத்தை முடிந்தவரை அட்டகாசமாக தொகுத்து அசத்தி இருக்கிறார் எடிட்டர் கிரண் கேயன்

kubeer reveiw
ஹேங் அப்

ஆனால் இடைவேளைக்கு முந்தைய முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜெராக்ஸாக இடைவேளைக்கு பிறகு வரும் இரண்டாம் பாகமும் போவதுதான் சோகம்

ஒரு நிலையில் இது பேய்க் கதையாக போகுமோ என்று எதிர்பார்ப்பு வருகிறது . அதுவும் நடக்கவில்லை . நாடு இரவில் வரும் புரபாசரால் பிரச்னை வருமா என்றால் அதுவும் இல்லை. எப்போதும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் இரண்டு நண்பர்களுக்குள் சண்டை பெரிதாகி விபரீதம் ஆகுமா என்று பார்த்தால் அதுவும் இல்லை . காலையில் எதுவும் நடக்குமா என்றால் அதுவும் இல்லை .

இப்படி எதுவுமே நடக்காமல்  இரண்டு மணி நேரம்… ஜஸ்ட் ஒரு அப்செர்வேஷனில் என்ன நோக்கம் இருக்க முடியும் ?

முழுக்க முழுக்க குடிக்கிற பார்ட்டி பற்றி படம் எடுத்து விட்டு “இந்த படத்தில் நடிக்கும்போது எல்லோரும் தண்ணீரை குடித்து விட்டுதான் குடிகாரர்கள் போல நடித்தோம் . எனவே மது என்ற கருமத்தை யாரும் குடிக்காதீங்க ” என்று டைட்டில் போட்டு படத்தை முடிக்கிறார்கள் .

அதையே கதைக்குள் கொண்டு வந்து ஒரு பிரச்னையை உருவாக்கி குற்றம் செய்ய வைத்து… ” இப்படி அறிவுப் பூர்வமான மனிதர்கள் கூட மது போதை அதிகம் ஆனால் எவ்வளவு கீழாக போகிறார்கள். எனவே எப்படிப் பார்த்தாலும் குடிப்பழக்கம் ஆபத்தானது ” என்ற விழிப்புணர்ச்சியை கொடுத்து இருக்கலாம் .

அல்லது இது எல்லாம் சாதாரணம் என்று தோன்றினால் கூட இதை எல்லாம் தாண்டி ஏதாவது ஒரு நிகழ்வை படத்துக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும் .

முப்பது லட்ச ரூபாய் செலவில் பலர் சேர்ந்து எடுத்திருக்கும் இந்தப் படம் நகர்ப்புறங்களில் ஒரு வேலை நூன் ஷோவாக ஓடியாவது அந்த பணத்தை சம்பாதித்துக் கொடுத்து விடலாம். அல்லது பலர் சேர்ந்து எடுத்திருக்கும் இந்தப் படத்தின் நஷ்டம் சம்மந்தப்பட்ட யாரையும் பாதிக்காமல் கூட போகலாம்.

ஆனால் அந்த காலத்து ராஜா ராணி படங்களை விட அதிக வசனங்கள் வைத்தும் போரடிக்காமல் முதல் பாதியை பார்க்க வைத்தவர்கள் இப்படி விசயமே இல்லாமல் இரண்டாவது பாதியில் சறுக்கலாமா? இரண்டாம் பகுதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்தப் படம் மொழிகளைக் கடந்து பட்டையைக் கிளப்பி இருக்கும்.

‘நாங்கல்லாம் தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் எத்தனை லார்ஜ் குடிச்சாலும் நிதானமாத்தான் இருப்போம். அறிவுப்பூர்வமாத்தான் பேசுவோம் ” என்று அலட்டிக் கொள்வதற்கு ஒரு படம் எதுக்கு ?

எனினும் வித்தியாசமான படம் விரும்புவோருக்கு விறுவிறுப்பான விருந்து இந்த குபீர் .

மகுடம் சூடும் கலைஞர்
—————————————
வசனகர்த்தா திலீப் . படத்தொகுப்பாளர் கிரண் கேயன் , ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஸ்ரீராம், 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →