ஐ அண்ட் பி மூவீஸ் சார்பில் மது மற்றும் ஜெய்ஸ் மோன் இருவரும் தயாரிக்க, ரோஷன் , அபிராமி , தலைவாசல் விஜய், ஆகியோர் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் குபேர ராசி
ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் (தலைவாசல் விஜய்) நண்பரோடு சேர்ந்து ஒரு பிசினஸ் செய்ய , அந்த நண்பர் ஏமாற்றிவிட்டு பணத்தோடு ஓடி விடுகிறார். பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் பணம் தரவேண்டிய நிர்ப்பந்தம் பெரிய மனிதருக்கு . அதை பயன்படுத்தி லோக்கல் அரசியல்வாதி ஒருவன் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, ஐம்பது லட்ச ரூபாய்க்கு வளைக்க எண்ணி பிளாக்மெயில் செய்கிறான் .
வயதுக்கு வந்த மகனும் மகளும் இருக்கும் நிலையில், அதை ஏற்காத பெரிய மனிதர் தற்கொலைக்கு முயல்கிறார் . அவரைக் காப்பாற்றும் மகன் (பாபநாசம் படத்தில் கமிஷனரின் மகனாக நடித்த ரோஷன் , இந்தப் படத்தில் கதாநாயகன் ) பணம் தருவதாக சொன்ன ஒரு நண்பனை நம்பி சென்னைக்கு வருகிறான் .
நண்பன் கடைசி நேரத்தில் கைவிரித்து விட , ஒரு ராங் காலில் அறிமுகம் ஆகும் ஒருவன் தேவைப்படும் பணத்தை தருகிறான் . அந்தப் பணம் மூலம் கடன் அடைக்கப்படுகிறது . ஆனால் பணம் கொடுத்தவன் அந்த உதவிக்கு பதிலாக ஒரு பேங்கை கொள்ளையடிப்பதில் உடன் ஈடுபட கட்டாயப்படுத்துகிறான் . கூடவே மிரட்டலும் !
வேறு வழியின்றி சம்மதிக்கும் நாயகன் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறான் . இருவரும் வெற்றியும் பெறுகிறார்கள். அதே நேரம் அந்த வங்கியில் பணியாற்றிய இளம்பெண்ணை (அபிராமி ) சந்தேகிக்கும் போலீஸ் அவளை அடித்து துவைக்கிறது . அவளது குடும்பம் நண்பர்கள் எல்லோரும் அவளை குற்றவாளியாக எண்ணி ஒதுக்குகின்றன .
பலத்த இழப்புக்கு பிறகு ஜெயிலில் இருந்து வரும் அவளுக்கு, குற்ற உணர்ச்சி காரணமாக உதவும் நாயகன், ஒரு நிலையில் அவளை காதலிக்கவும் செய்கிறான் .
வங்கிக் கொள்ளையை விசாரிக்கும் சி பி ஐ அணி ஒன்று திட்டமிட்டு குற்றவாளிகளை நோக்கி முன்னேறுகிறது .
இந்த நேரம் இன்னொரு வங்கியை கொள்ளையடிக்க நாயகனை அழைக்கிறான் வங்கிக் கொள்ளையன் . அதை நாயகன் விரும்பாத நிலையிலும் போக வேண்டிய மிரட்டல் மற்றும் கட்டாயத்துக்கு ஆளாகிறான் நாயகன் .
அடுத்து என்ன என்பதே இந்த குபேர ராசி .
பழகிய கதை. அதை மிக எளிமையாக, ஆனால் தங்களால் முடிந்தவரை நன்றாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசம் என்று பெரிதாக எதுவும் இல்லாததும் லோ கீ லெவலில் தரப்பட்டிருக்கும் படமாக்கலும் பின்னடைவே .
அபிராமி நன்றாக நடித்திருக்கிறார் .
காமெடி என்று பெயரில் சிபி ஐ அதிகாரியின் உதவி பெண் அதிகாரிகள் மொக்கை டயலாக் பேசி சொதப்புவதை தவிர்த்து இருக்கலாம் .
என்னதான் நியாயமும் தேவையும் இருந்தாலும் ஒரு முறை தவறு செய்தால் அது விடாது கருப்பு போல என்று குரல்வளையை வளைக்கும் என்று சொல்லி முடிக்கும் கிளைமாக்ஸ் , சிம்பிளாக இருந்தாலும் சபாஷ் .
குபேர ராசி .. கஞ்சிக்கு பஞ்சமில்லை .