MIK புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் வெளியீட்டில் விமல் தான்யா ஹோப் , வினோதினி, வினோதினி, கீர்த்தனா நடிப்பில் விஜயசேதுபதியின் வசனத்தில் சரவண சக்தி இயக்கி இருக்கும் படம்.
குடிப்பழக்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் உடைய ஓர் இளைஞன் ( விமல்) நன்றாகப் படிக்கும் தன் தங்கையை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க , தன் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகிறான். ஆட்டோ ஓட்டி சம்பாதித்துப் படிக்க வைக்கிறான் .
பணம் கட்ட வசதி இல்லாத மாணவிகளை மயக்கி பாலியல் ரீதியாக பல்வேறு நபர்களுக்கு விருந்து வைக்கிறார் ஒரு ஆசிரியை. (வினோதினி). பணம் போதாத நிலையில் தங்கையும் அந்த ஆசிரியையிடம் உதவி கேட்க,
வெகுண்டு எழும் நாயகன் சம்மந்தப்பட்ட கும்பலை ஒழித்துக் கட்ட முயல என்ன நடக்கிறது என்பதே படம்.
அண்மையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிஜமான கல்லூரி ஆசிரியை – மாணவிகள் சம்பவத்தை வைத்து கதை பண்ணி இருக்கிறார்கள் . ஆனால் சின்சியராக பண்ணாமல் சும்மாகதை விட்டு இருக்கிறார்கள் .
ஒரு கண்ணியமான கிராமத்துப் பெண் கல்லூரி விடுதியில் அரைகுறை உடையோடு இருக்கும் போது, அண்ணனுக்கு விபத்து என்று யாரோ போனில் சொன்னதைக் கேள்விப்பட்டதும் அதே உடையோடு அப்படியே ஓடி வந்து யாரோ ஒருவனின் காரில் ஏறிப் போகும் காட்சி எல்லாம் வேற லெவல். உங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட ஆஸ்கார் அவார்டுக்கே தகுதி இல்லை
படத்தில் வசனம் — ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என்று ஒரு பெயர் வருகிறது . விஜய் சேதுபதி என்ற பெயரில், முன்பே ஒரு அற்புதமான நடிகர் இருக்கும்போது அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டமும் இருக்கும் போது ,அவர் பெயரை இன்னொருவர் எப்படி பயன்படுத்தலாம்?அதுவும் அதே பட்டப் பெயரோடு? விஜய் சேதுபதிக்காக கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைத்து விட்டீர்களா?
இன்னும் நடிக்கவே கூச்சப்படுகிறார் விமல்.
சும்மனாச்சுக்கும் படத்தில் வருகிறார் தான்யா ஹோப் . எவ்வளவு அழகாக இருந்த பெண். இப்போது தான்யா ஹோப்லஸ் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கெட்டவர்களாகக் காட்டும் முயற்சி தெரிகிறது .
மாணவிகளைக் கூட்டிக் கொடுக்கும் ஆசிரியைக்கு கண்ணகி என்று பெயர் வைத்தது எல்லாம் வக்கிரத்தின் உச்சம்
டைட்டில் பாடலும் தங்கையாக வருபவரும் மட்டும் ஆறுதல் .
கொல சாமி . !