ஓரிருவர் என்று மட்டுமல்லாது நிறைய பேர் கொஞ்ச கொஞ்சகொஞ்சமாக பணம் போட்டு படம் தயாரிக்கும் கிரவுட் ஃபண்டிங் முறையில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட லூசியா படம் பேரு வெற்றி பெற்றது .
அந்த வகையில் தமிழில் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் முதல் படம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது, பாத் வே புரடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜுலு மாரீஸ் சந்தானராஜ் இருவரின் நிர்வாக தயாரிப்பில் புதுமுகங்கள் கீதன் மற்றும் ஹரிதா இணையராக நடிக்க, கார்த்திக் ரவி எழுதி இயக்கி இருக்கும் குறையொன்றுமில்லை . படத்தில் நிறைகள் நிறைந்து கிடக்கிறதா என்று பார்ப்போம்.
மறைந்த கவிஞர் வாசகன் தேசிய கீதம் படத்தில் எழுதிய ”என் கனவினைக் கேள் நண்பா…” என்ற பாடலில் ” பாட்டி பால் விற்ற கணக்கை கம்ப்யூட்டர் பதிய வேண்டும். நாற்று நாடுகின்ற பெண்ணும் செல்போனில் பேச வேண்டும் . உழவன் ஏரோட்ட பென்ஸ் கார் ஓட்டி போக வேண்டும் . விளையும் பயிருக்கு நாங்கள் கேட்கின்ற விலைகள் வேண்டும் ” என்ற வரிகள் வரும். அந்த கடைசி வரியின் நோக்கமே இந்தப் படத்துக்கும்!
அதோடு அந்த பிரச்னையையும் விட வலுவாக, சின்னச் சின்ன குறைகளை பெரிதுபடுத்தும்போது காதல் முதலிய மனித உறவுகள் எப்படி சிதிலம் அடைகின்றன என்ற விஷயமும் சொல்லப்படுகிறது .
அதாவது, நமது நாட்டில் இயற்கை வளத்துக்கு குறையொன்றுமில்லை ஆனால் அவற்றை முறைப்படி பயன்படுத்துவதில்தான் பிரச்னை என்று உணர்த்தும் அதே நேரம், சின்னச் சின்ன பிரச்னைகளை எல்லாம் குறையொன்றுமில்லை என்று எண்ணி ஒதுக்கித் தள்ளினால் வாழ்வு நன்றாக இருக்கும் என்பதையும் இந்தப் படம் கூறுகிறது .
இப்படி அகம் புறம் இரண்டுக்கும் ஏற்ப, குறையொன்றும் இல்லை என்ற வார்த்தையை நிறைவாகப் பயன்படுத்தும் படம் இது.
ஒரு கிராமத்தை சேர்ந்த பிராமண வீட்டுப் பேரனுக்கும் அந்த வீட்டு வேலைக்காரியின் மகனுக்கும் இடையே மிக நெருக்கமான விடுமுறைக்கால நட்பு இருக்கிறது . ஒரு முறை மாநாகரம் திரும்புகையில் ஏழை நண்பனையும் உடன் அழைத்து வந்து விட பிராமண சிறுவன் விரும்ப , அது பிராமணப் பெற்றோரால் தடுக்கப்படுகிறது.
அதே போல வேறொரு இடத்தில் பெற்றோரை இழந்த ஒரு சிறுமி தனது தங்கையுடன் கிராமத்தில் இருந்து கிளம்பி மாமா வீட்டில் தங்கி படிக்க மாநகரம் வருகிறாள் .
பிராமண சிறுவன் கிருஷ்ணா வளர்ந்து ஒரு பல்தொழில் நிறுவனத்தில் பணியாற்றுகிறான் (கீதன்). அவனைக் காதலிக்கும் ஒரு சேட்டுப் பொண்ணு , தன் தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்து , தன்னை கல்யாணம் செய்து கொள்ள சொல்கிறாள் . ஆனால் கிராமத்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தும் தனது விருப்பத்தை கிருஷ்ணா சொல்ல, அவனை வெறுத்து விட்டுப் போய்விடுகிறாள்.
ஏழை நண்பன் கணேஷ் அதே ஊரில் விவசாயம் பார்த்துக் கொண்டு வறுமையோடு போராடுகிறான்.(ஹிட்லர்).
சிறுமி சந்தியா வளர்ந்து மருத்துவர் ஆகிறாள் (ஹரிதா). அவளது தங்கை ஒருவனை காதலிக்க, அந்தக் காதலின் நவீனத் தன்மை அவளை முகம் சுளிக்க வைத்தாலும் ஏற்றுக் கொள்கிறாள்.
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை தாங்களே வியாபாரம் செய்யும் நிலையை ஏற்படுத்தி, அவற்றை நியாயமான விலைக்கு வாங்கி நியாயமான விலைக்கு விற்று , அதன் மூலம் சற்று அதிக உழைப்புடன் மிக அதிகமாக லாபம் சம்பாதிக்கும் திட்டம் ஒன்றை தனது நிறுவனத்துக்கு கிருஷ்ணா சொல்கிறான்.
ஆனால் குறைந்த வேலையில் அதிக லாபம் பார்க்கும் ஆசை, மேட்டுக்குடி மனோபாவம், கிராமத்து மக்கள் என்றால் அவர்கள் கூலித் தொழிலாளிகளாக மட்டுமே இருப்பார்கள் என்ற அலட்சியம்.. இவை காரணமாக கிருஷ்ணாவின் மேலதிகாரி விக்ரம் (கிருஷ்ணா விஸ்வநாதன்) அதை எதிர்க்கிறான் . எனினும் அவனுக்கும் மேலாக உள்ள உயர்அதிகாரி கிருஷ்ணாவின் திட்டத்துக்கு அனுமதி தருகிறார் .
அதற்கான கள ஆராய்சிக்காக கிருஷ்ணா தனது சொந்த கிராமத்துக்கு போக, அங்குள்ள நகர்ப்புற மருத்துவமனையில் பணியாற்ற சந்தியாவும் அதே ரயிலில் போகிறாள் .அழுத்தமான பெண்ணான அவளுக்கும் கிருஷ்ணாவுக்கும் முதலில் மோதலும் பின்னர் காதலும் வருகிறது.
தினமும் லேட்டாக எழுவது முதல், பைக்குக்கு கூட ஒழுங்காக பெட்ரோல் போடாமல் அடிக்கடி நாடு ரோட்டில் வண்டியை தள்ளுவது உள்ளிட்ட பல நேர்த்திக் குறைபாடுகள் உள்ள கிருஷ்ணாவுக்கும், எதிலும் ஒரு வித பர்ஃபக்ஷனும் அந்த பர்ஃபக்ஷன் குறித்த இறுமாப்பும் நிறைந்த சந்தியாவுக்கும் ஒரு நிலையில் சீரியசாக முட்டிக் கொள்கிறது . முதல் காதலி சொன்ன அதே கடுமையான வார்த்தைகளை சொல்லிவிட்டு சந்தியாவும் கிருஷ்ணாவை பிரிகிறாள்.
கிருஷ்ணாவின் புராஜக்ட் நன்றாக வருவது தெரிந்தும் மேலதிகாரி விக்ரம் ஈகோ காரணமாக அதை சீர் குலைக்கிறான். சந்தியாவும் ஒரேயடியாக கிருஷ்ணாவை பிரிந்து அயல்நாடு போய் விடுகிறாள். புற லட்சியமான விவசாய திட்டம் , அக லட்சியமான காதல் இரண்டிலும் பாதிக்கப்படும் கிருஷ்ணா அவற்றில் இருந்து மீண்டு வென்றானா இல்லையா என்பதே இந்தப் படம் .
கிரவுட் ஃபண்டிங் என்ற அழுத்தம் இருந்தும் முதல் படம் என்ற பதட்டம் பரபரப்பு பயம் எதுவுமே இல்லாமல் தான் சொல்ல விரும்பியதை தெளிவாக சொல்லி இருக்கும் இயக்குனர் கார்த்திக் ரவிக்கு மூட்டை மூட்டையாய் பாராட்டுகள். நாயகன் நாயகியின் பாத்திரப் படைப்பை அருமையாக செய்து இருக்கிறார். படமாக்கலில் ஒரு தெளிவு இருக்கிறது இவரிடம் .
குறையொன்றும் இல்லை என்ற டைட்டிலை குறையோடு எழுதி அதை சரி செய்வது முதற்கொண்டு டைரக்டோரியல் டச்கள் படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. படத்தை முடித்த இடமும் விதமும் இயக்குனரின் மெச்சூரிட்டிக்கு மகுடம் சூட்டும் விதமாக இருக்கிறது. இவர் எழுதி இருக்கும் வசனங்களும் பல இடங்களில் ஆழமாகவும் அசத்தலாகவும் இருக்கிறது .
ரமணுவின் இசையில் அடிப்படைக் கதைக்கு பொருத்தமில்லாத சாஸ்திரியத்தனம் அதிகம் என்றாலும் காதுக்கு இனிமை . பாடலாசிரியர்தான் சில பாடல்களில் மிக சாதாரணமான– ஆனா , டியூனை விட நீண்ட நீண்ட வரிகளை டியூனுக்குள் அடித்து ஒடித்து மடித்து வைத்து சோதிக்கிறார்.
ஒளிப்பதிவு குறையொன்றுமில்லை . படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் நெருக்கிப் பிடித்து இருக்கலாம்– குறிப்பாக சில பல காட்சிகள் முடியும் விதத்தில்!
படத்தின் நடிக நடிகையர் தேர்வு இந்தப் படத்தின் பெரும்பலம். கிருஷ்ணாவாக நடித்து இருக்கும் கீதன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்து இருக்கிறார் .
மேலதிகாரியாக வரும் கிருஷ்ணா விசுவநாதன், கணேஷாக வரும் ஹிட்லர், லக்ஷ்மணனாக வரும் சத்தியமூர்த்தி, உயர் அதிகாரியாக வரும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் தத்தம் கதாபாத்திரங்களில் நின்று காட்டுகிறார்கள்.
ஆனாலும் எல்லாரையும் விட மிக சிறப்பாக நடித்து பிரம்மிக்க வைக்கிறார் சந்தியாவாக நடித்து இருக்கும் ஹரிதா . தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிக நன்றாக புரிந்து கொண்டு ரசித்து ருசித்து லயித்து நடித்து இருக்கிறார் . மலையளவு தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு எக்ஸ்பிரஷனையும் நிறுத்தி நிதானமாக முழுமையாக அழுத்தமாக நடித்த விதம் சூப்பரோ சூப்பர் ! இத்தன நாளா எங்கம்மா கண்ணு இருந்த?
சிறுவயது கிராமத்து நட்பின் தொடர்ச்சியாக ஒரு நகர்ப்புற இளைஞன் கிராமத்து மனிதர்களை முன்னேற்ற விரும்பும் லட்சியத்தை சொல்ல ஆரம்பிக்கும் படம் , ஒரு நிலையில் — பார்ப்பதற்கு மிக நன்றாகவே இருந்தாலும் — காதலுக்குள் திசை மாறுகிறது. அந்தக் காதல்தான் முக்கியம் என இயக்குனர் நினைக்கிறார் எனில் அந்தத் திரைக்கதைக்கான ஆரம்பம் இதுவல்ல.
விவசாயத்தின் நலிவு , கிராமத்து ஏழைகளின் வறுமை என்று பல விஷயங்களை இயக்குனர் சொல்லி இருந்தாலும் அந்த விஷயங்களில் புழுதியும் சேறுமாக புகுந்து வர தவறி இருக்கிறார் இயக்குனர். ஒரு பரதநாட்டியக் கலைஞர் விவசாயத்தின் அருமை பெருமை பற்றி பிரசங்கம் செய்வது போன்ற உணர்வு படத்தில் இருக்கிறது .
ஆனாலும் என்ன ….
தனி வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் தேவையான இரண்டு மிக முக்கிய விஷயங்களை கிராமம் நகரம் இவற்றின் இணைப்பான பின்னணியில் உயிர்ப்பாக கம்பீரப் பரிமாணத்துடன் சொல்லி இருக்கும் வகையில் மனத்தைக் கொள்ளையடிக்கிறது படம் .
குறையொன்றுமில்லை … நிறை கொண்ட முல்லை .
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————–
ஹரிதா, கார்த்திக் ரவி, கீதன், கிருஷ்ணா விஸ்வநாதன்,
இவர்களுடன்,
கிரவுட் ஃபண்டிங்கை சரியாக பயன்படுத்திய காரணத்துக்காக ….
அருண் ரங்கராஜுலு , மற்றும் மாரீஸ் சந்தான ராஜ்