குரங்கு பெடல் @ விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம் மற்றும் சுமி பாஸ்கரன் தயாரிப்பில் , ராசி. அழகப்பன் எழுதிய சிறுகதையில் இருந்து , பிரபாகர் சண்முகத்தோடு சேர்ந்து எழுதி –  இதற்கு முன்பு மதுபானக் கடை படத்தை இயக்கிய- கமலக்கண்ணன் இயக்கி இருக்கும் படம். 

சிறுவயதில் நடந்த சம்பவத்தால் சைக்கிளையே வெறுத்து கல்யாணம் பண்ணி பிள்ளை பெற்றும் சைக்கிள் ஓட்டக் கூடக் கற்றுக் கொள்ளாத- எங்கு போனால் நடந்தே போவதால் நடராஜா என்று கிண்டலான பட்டப் பெயர் வாங்கிய – அளவுக்கு மீறிய சிக்கனமான- ஆனால் லாட்டரி சீட்டு வாங்கி காசை அழிக்கிற  ஒரு கேடுகெட்ட அப்பனின் ( காளி வெங்கட்) மகனான  சிறுவன் மாரியப்பன் ( சந்தோஷ் வேல்முருகன்). 

கிராமத்தில் உள்ள வாடகை சைக்கிள் கடையில் சைக்கிள் எடுத்து சிறுவர்கள் சைக்கிள் கற்கும் அந்த கிராமத்தில் மாரியப்பனுக்கும்  அவன் நண்பர்கள் இடையே சைக்கிள் கற்க ஆர்வம்.  யார் முதலில் கற்றுக் கொண்டு காலை மேலே தூக்கி விட்டத்தில் போட்டு ஏறி சீட்டில் உட்கார்ந்து ஓட்டும் அளவுக்கு பழகுகிறோம் என்பதில் போட்டி. 

மேற்படி வீணாப்போன அப்பன் காளி வெங்கட்டின் மகனான மாரியப்பன்  வாடகை கடைக்கு சைக்கிள் எடுக்கப் போக , அங்கே சைக்கிள் இல்லாத நிலையில், குடிகாரன் ஒருவன் அடகு வைத்து விட்டுப் போன சைக்கிளை , சைக்கிள் கடைக்காரன் கொடுக்க, ஆர்வத்தில் மாரியப்பன் அதிக நேரம் சைக்கிள் ஓட்ட, 

மேற்கொண்டு கொடுக்க காசு இல்லாத நிலையில், வீட்டில் உள்ள கோழி முட்டையைத் திருடி விற்க, அதுவும் போதாத நிலையில் மாரியப்பன் அதை வைத்து சூதாட, மொத்த பணமும் போய் விட, 

பக்கத்து ஊரில் உள்ள அக்காவிடம் காசு வாங்க அங்கே போக, அங்கே அக்கா கேசரியும் இட்லியும் ஆக்கிப் போட, அதைச்  சாப்பிடும் சிறுவன் மாரியப்பன், பொம்மலாட்டம் பார்த்து விட்டு அக்கா ஊரிலேயே  தூங்கி விட , 

இங்கே சைக்கிளை அடகு வைத்தவன் சைக்கிளை மீட்க வர, பிரச்னையாகி,எல்லோரும் மாரியப்பனின் கேடுகெட்ட அப்பன் காளி வெங்கட்டிடம் போக, 

மாரியப்பனைத் தேடி அவன் போக, அப்பனுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் நடந்தது என்ன என்பதே படம். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு குழந்தைகள் படம். மாசு மருவில்லாத ஒரு முழு கனிமமான படம். 

எளிய கிராமம்..  ஒரு காலத்தில் எல்லா கிராமங்களின் கதையாகவும் இருந்து இப்போது மிகவும் அருகி விட்ட-  சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் கிராமத்துச் சிறுவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்து ஒரு  அழகான கதையை செய்திருக்கிறார் கமலக்கண்ணன் . கவிதை . 

வாடகைக்கு சைக்கிள் எடுத்து தள்ளிப் பழகி , பிறகு கீழே மேலே விழுந்து , குரங்கு பெடல் போட்டு , அப்புறம் அடிபட்டு ரத்தம் சிந்தி விட்டத்தின் மேல் காலைத் தூக்கிப் போட்டு, 

முழு காலும் எட்டாத நிலையில் மேலே வரும் பெடலை அழுத்தி காலை தொங்க விட்டு , பெடல் சுற்றி மேல வரும் போது மீண்டும் அழுத்தி, அதற்கேற்ப விட்டத்தில் தொடையை சற்றே அழுத்தி இருபுறமும் அசைந்து 
அடுத்த கட்டமாக பக்கவாட்டில் பெடல்களை சரியான மட்டத்தில் நிறுத்தி, அதில் நின்று வண்டி ஓட்டி, அதன் பிறகு சீட்டில் உட்கார்ந்து , கால் எட்டாத நிலையில் இருபுறமும் இடுப்பை வளைத்து வளைத்து , பெல் அடிப்பதில் அதீத ஆர்வம் காட்டி .. 

இப்படி, ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதை — எல்லோருக்கும் மலரும் நினைவுகளை ஏற்படுத்த்ய்ம் வண்ணம்   அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் கமலக்கண்ணன். 

அக்கா வீட்டில் இட்லி திங்கும் சந்தோஷத்தில் இட்லி சட்டி கால் முட்டியில் சுடுவதைக் கூட மகிழ்ச்சியாக உணரும் குழந்தைமைக் காட்சி இந்தப் படத்தின் சிகரம் . 

அதேநேரம் ஒரு நிலையில் அவன் பேசும் பக்குவப் பேச்சு , கிராமத்தில் வறுமையும் வாழ்வும் சிறுவர்களுக்கும் தரும் பட்டறிவின் சிறப்பை சொல்லும் காட்சி . 

பெரிய நடிகர்கள் சுமாராக நடித்திருக்க, சிறுவனும் அவன் நண்பர்களாக வரும் சிறுவர்களும் அட்டகாசமாக நடித்து படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். 

ஒரு சில போதாமைகள் இருந்தாலும் மே மாத கோடையைக் கண் முன் கொண்டு வருகிறது சுமி பாஸ்கரனின் ஒளிப்பதிவு . 

ஜிப்ரனின் இசை படத்தின் பலம். 

கேடுகெட்ட அப்பனான காளி வெங்கட்  திருந்தி சைக்கிள் வாங்கியபோதே படம் முடிந்து விட்டது . அதற்கு அப்புறம் சிறுவர்களுக்குள் சைக்கிள் போட்டி, அதில் நீதிக்கதை என்று சினிமா காட்டி இருக்கிறார்  கமலக் கண்ணன் 

இப்படி சில குறைகள் இருந்தாலும் கிராமிய வாழ்வை, அதிலும் அதிகம் சொல்லப் படாத கிராமப்புற சிறுவர்களின் வாழ்வை, அவர்களின் மன நிலையை ,சூழலை, தவறென்று செய்யாமல் செய்யும் தவறுகளை, விளைவுகள் அறியாத குழந்தைத்தனத்தை, ஒரு கட்டுப்பாட்டுக்குள் தனது விருப்பங்களுக்காக போராடும் பரிதாபத்தை சொன்ன வகையில் , 

ஒரே தாவாக தாவாக ஏறி கம்பீரமாக சீட்டில் உட்கார்ந்து சைக்கிள் ஓட்டுகிறது இந்த குரங்கு பெடல். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *