மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யர்னேணி மற்றும் ரவி சங்கர் தயாரிக்க விஜய் தேவரகொண்டா, சமந்தா, சச்சின் கடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, சரண்யா ஜெயராம், ரோகினி நடிப்பில் சிவ நிர்வாணா எழுதி இயக்கி தெலுங்கில் வந்திருக்கும் படத்தின் தமிழ்ப் பதிப்பு
காஷ்மீரில் உள்ள ஒரு இஷ்ட தெய்வக் கோவிலுக்கு போக விரும்பி, தீவிரவாதிகள் பிரச்னையால் பர்தா அணிந்து இஸ்லாமியப் பெண் போல போகிறாள் திருச்செந்தூரைச் சேர்ந்த பிராமணப் பெண் ஆராத்யா( சமந்தா). இவரது தந்தை சதுரங்கம் சீனிவாசராவ் பிரபல ஜோதிடர் மற்றும் ஆன்மீக உபன்யாசகர்.
காஷ்மீரில் விரும்பி வேலை பார்க்க எண்ணி மாற்றல் வாங்கிக் கொண்டு போகும் இளைஞன் (விஜய் தேவரகொண்டா ) அங்கே ஆரத்யா சொன்ன பொய்ப்படி அவள் பாகிஸ்தானி முஸ்லிம் என்று தெரிந்தும் காதலிக்கிறார் . இவரது அப்பா லெனின் சத்யம் அறிவியலாளர் மற்றும் தீவிர நாத்திகர் .
ஆரத்யா பாகிஸ்தானி என்ற உண்மை தெரிந்த பிறகு சந்தோஷத்துக்குப் பதில் அதிர்ச்சி. காரணம் சீனிவாசராவும் லெனின் சத்யமும் சந்திர கிரகணம் சம்மந்தப்பட்ட ஒரு ஆத்திக நாத்திக விவாதத்தில் கடுமையாக மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள் .
வீட்டில் உண்மை சொல்ல முதலில் எதிர்ப்பு வந்தாலும் அப்புறம் சம்மதம்
ஆனால் நாயகனின் ஜாதகத்தை ஆராய்ந்த பெண்ணின் அப்பா , பையனும் அப்பாவும் ஒரு பெரிய யாக பரிகாரம் செய்யாமல் இந்தக் கல்யாணம் நடந்தால் , நாயகனும் நாயகியும் ஒற்றுமையாக வாழ மாட்டார்கள் . குலம் தழைக்காது என்கிறார் .
யாகத்துக்கு நாத்திக அப்பா மறுக்க,
இரு குடும்பத்தையும் மீறி திருமணம் செய்யும் ஜோடியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படம் .
இளமை துள்ளும் விஜய் தேவரகொண்டா , ஈடு கொடுக்கும் சமந்தா, அட்டகாசமான காஷ்மீர் லொக்கேஷன், அதையும் மற்ற காட்சிகளையும கூட அட்டகாசமாகக் கொடுக்கும் முரளியின் ஒளிப்பதிவு, கூடவே பாயும் ஹேஷம் அப்துல் வகாபின் பாடலிசை மற்றும் பின்னணி இசை , வெண்ணிலா கிஷோரின் காஷ்மீரக் காமெடிகள் என்று பாடல் இளசுகளுக்கான ஈர்ப்பு விசையாக ஆரம்பித்து தொடர்கிறது
அட்டகாசமாக தமிழ் மொழி மாற்று வசனத்தை எழுதி எடுத்து இருக்கிறார் விஜய் பாலாஜி
விஜய் தேவரகொண்டா, சமந்தா, சச்சின் கடேகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, சரண்யா ஜெயராம், ரோகினி எல்லோருமே சிறப்பாக அழகாக ரம்மியமாக நடித்துள்ளனர் . ஆனால் சின்னச் சின்ன நுண்மையான முக பாவனைகளை அற்புதமாகக் காட்டி எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி . அசத்தல்
என்னதான் இளமை அழகு ஜொலித்தாலும் இரண்டாம் பகுதியில் ஒன்று எதிர்பார்க்கும் காட்சிகள் அல்லது தேவையில்லாத காட்சிகள் கதைப்போக்குகள் வரிசை கட்டி வருகின்றன.
இடையில் கமர்சியல் என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் கதற அடிக்கவும் செய்கிறார்கள் .
ஜெயராம் – ரோகினி சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் குலேபகாவலி காலத்து உத்திகள்
கல்யாணத்துக்குப் பிறகு நாத்திக ஆத்திக சண்டை ஜோடியை எப்படிப் பாதித்தது என்பதை அதிகம் சொல்லி , தனிப்பட்ட காதல் ஊடலை கம்மியாக சொல்லி இருக்க வேண்டும் .
மாற்றி சொன்னதால் தயிர் சாதம் அளவுக்கு ஊறுகாயையும் ஊறுகாய் அளவுக்கு தயிர் சாதமும் வைத்த கதையாகி விட்டது.
ஒருவேளை ஆந்திராவில் சாப்பாட்டை விட ஊறுகாய்தான் முக்கியமோ என்னவோ