குற்றம் 23 @ விமர்சனம்

kut 7

‘ரெதான் – தி சினிமா பீப்பல்’  நிறுவனத்தின் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க,

அருண் விஜய் , மகிமா நம்பியார், தம்பி ராமையா, விஜயகுமார், அபிநயா, அமீத்பார்கவ், வம்சி கிருஷ்ணா , அரவிந்த் ஆகாஷ் , சுஜா வாருணி, கல்யாணி நடராஜன் ஆகியோர் நடிக்க ,

ஈரம்,  வல்லினம், ஆறாது சினம் போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் கவர்ந்திருக்கும் இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கும் படம் குற்றம் 23. 

 படம் எப்படி ? பார்க்கலாம் .

வில்லிவாக்கம் செயின்ட் தாமஸ் சர்ச்சில் அதிகாலை நேரத்தில் பாவ மன்னிப்புக் கேட்க வந்த ஜெஸ்ஸிகா என்ற பெண்ணும் (மிஷா கோஷல்) பாதிரியாரும் கொல்லப்படுகிறார்கள் .

kut 88

வழக்கின் விசாரணை அதிகாரியாக அசிஸ்டன்ட் கமிஷனர் வெற்றி மாறன் (அருண் விஜய்)  வருகிறார் . அவருக்கு உதவியாளராக சப் – இன்ஸ்பெக்டர் திருப்பதி (தம்பி ராமையா).

வெற்றிமாறனின் அண்ணன் (அமித் பார்க்கவ்) அண்ணி அபி (அபிநயா) . கல்யாணம் ஆகி பல வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், 

மாமியாரின் குத்தல் பேச்சும் அக்கம் பக்கத்தினரின் கிண்டலும் அபியை தொடர் வேதனைகளுக்கு ஆளாக்குகின்றன .

வெற்றி மாறனின் விசாரணையில்,  கொல்லப்பட்ட ஜெஸ்ஸிகா கர்ப்பிணி என்பது தெரிய வருகிறது .

kut 8

அடுத்து அமைச்சர் ஒருவரின் மகள் சீமந்தம் நடக்கும் தினத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள்.  இன்னொரு தொழில் அதிபரின் மகளும் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்கிறாள்.

ஜெஸ்ஸிகா மற்றும் பாதிரியார் கொலையான நேரத்தில்  சர்ச்சுக்குப் போன தென்றல் என்ற பெண்ணிடம் (மஹிமா நம்பியார்) வெற்றி மாறன் தொடர் விசாரணைக்குப் போக ,

மோதலும் பின்னர் கல்யாண விருப்பமும் அதன் வழியே காதலும் வருகிறது .

வெற்றி மாறனின் தொடர் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் எல்லோருமே,  வரம் என்ற மருத்துவ மனையில், 

குழந்தை இன்மை சிகிச்சைக்காக போய் அதன் பின்னர் கர்ப்பவதியானவர்கள் என்பது தெரிய வருகிறது .

kut 4

குழந்தை இன்மை சிகிச்சைக்காக  போகும் பெண்களுக்கு எல்லாம் K23  என்ற ரகசிய அடையாளத்துடன் கூடிய தனியான வகையில் சிகிச்சை அளிக்கப்படுவதும்,

கர்ப்பமான நிலையில் பெண்கள்  தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது . இந்த நிலையில் வெற்றிமாறனின் வீட்டுக்குள்ளேயே ஓர் பேரதிர்ச்சிப் பேரழிவுச் சம்பவம் நிகழ்கிறது .

வெற்றி மாறனின் அம்மா ஐம்பது லட்சம் வரதட்சனை பணம் கேட்டதாக அபியின் அம்மா குற்றம் சாட்டுகிறார் . வெற்றி மாறன் தன் தாய் மற்றும் சகோதரனை சந்தேகிக்கும் சூழல் வருகிறது .

சூழல் ஒரு நிலையில்  சுழல் ஆகி எல்லோரையும் அலைக்கழிக்க , வெற்றி மாறனின் அடுத்தடுத்த விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சியான , கொடூரமான , நெகிழ்ச்சியான நிகழ்வுகளே இந்த குற்றம் 23.

kut 222

ஆஹா !

ஆக்ஷன், திரில் , அழகியல் , சமூக அக்கறை , சென்டிமென்ட் குறிப்பாக பெண்கள் சென்டிமென்ட் இவை எல்லாமும் சரியாக சிறப்பாக அழுத்தமாக அமைந்த, 

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு . எவ்ளோ நாளாச்சு !

மர்மக்  கதை மன்னன் ராஜேஷ்குமாரின் நாவலில் இருந்து ஒரு விசயத்தை முறைப்படி அனுமதி பெற்று வாங்கி,

அதற்கு  குற்றங்குறை இல்லாத ஒரு முழுமையான திரைக்கதை அமைத்து , மிக அட்டகாசமான படமாக்கலும் தந்து விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் .

இது ஒரு முழுமையான படம் ; முழுமையாக இயக்குனரின் படம் . சபாஷ் அறிவழகன் !

Arun Vijay @ Kuttram 23 Movie Shooting Spot Stills

படத்தின் மையக்கதைக்குப் பொருத்தமான அந்த விந்தணு பாய்ச்சல், கார்ட்டிக்ஸ் துகள் எதிர்கொள்ளல், , ஒரு அணு உள்ளே போன உடன் கார்ட்டிக்கல் கேட் மூடும் அதிசயம் முதற்கொண்டு, 

குழந்தை பிறக்கும் வரையிலான அந்த அசத்தலான  டைட்டில் பின்னணி அனிமேஷன்,

அதற்கு பொருத்தமான செண்டிமெண்ட் சிக்கல், அதற்கு ஏற்றபடி அமைந்த கதாநாயகியின் வேலை, அந்தக் கதைக்குள் உள்ள எமோஷனல் இல்லாத விஞ்ஞானம் ,

அந்த விஞ்ஞான விசயத்தை ஏற்றுக் கொள்வதிலும் நம் மண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தூய்மை , கலாச்சாரம் , பண்பாடு அதில் உருவாகும் பாசம் , நேர்மை மனசாட்சி , தியாகம் இவற்றின் விளைவுகள் ,

 வில்லன் வில்லனானதற்கும ஒரு அழுத்தமான காரணம் , அதில் வரும் வசனம் , அதுவே படத்தின் பெயராகும்  அழகு ,

kut 11

குழந்தை அமையாத பெண்களை குத்திக் காட்டுவதால் ஏற்படும் வேதனை மற்றும் விபரீதம் , இதை பணம் பிடுங்கிகள் பயன்படுத்திக் கொள்ளும் நரித்தனம் , அதில் விளையும் கொடூரம் ,

அனாதைக் குழந்தைகளின் அவல நிலை , தாய்மையின் பெருந்தன்மை மிக்க நிஜமான பரிமாணம் என்று …

சும்மா 360 டிகிரியும் சூப்பரோ சூப்பராக சுற்றிச் சுழன்று இருக்கும்  திரைக்கதையையும் அதைப் படைத்து இருக்கும் அறிவழ்கனையும் என்ன சொல்லிப் பாராட்ட ! வார்த்தைகள் தோற்கின்றன .

அவரது வசனம் மட்டும் சும்மாவா ?

“மகாத்மா காந்தி செகுவாரா எல்லாம் இப்போ பேஷன் அடையாளம் ஆகியாச்சு ” என்று போகிற போக்கில் குண்டூசியால் குத்தி விட்டுப் போவதாகட்டும் ,

kut 5

மருத்துவ வளர்ச்சி எது மருத்துவக் குற்றம் எது என்பதை உதாரணம் சொல்லி விளக்கும் அந்த வாள்வீச்சு நெடுவசனம் ஆகட்டும். மாஸ் அண்ட் கிளாஸ் .

ஹாய், மச்சான் , பை டா , சாப்ட்டியா , தோ வர்றேன், சீ போடா போன்ற  வார்த்தைகள் தவிர சினிமாவில் வசனத்துக்கு பெரிதாக வேலை இல்லை என்று நம்புகிற, 

நவீன  படைப்பாளி ஆட்டு மந்தைக் கூட்டம் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது .

நடிக நடிகையர் தேர்வு , அவர்களிடம் வேலை வாங்கிய விதம் , படத்தை பிரேம் பிரேமாக செதுக்கி இருக்கும் தன்மை , படத்தை நகர்த்தும் மேட்டிமைத்தனம் ,

படத்தை முடித்த விதம் இவற்றில் வெளிப்படும் அபார டைரக்ஷன் மூலம்

kut 1

கண்ணியமான சமூக அக்கறை உள்ள அழகியல் தெரிந்த கமர்ஷியல் டைரக்டராக ஜொலிக்கிறார் அறிவழகன்.

ஒரு நடிகர் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்ற உணர்வே தோன்றாத அளவுக்கு கேரக்டரில் கரைந்து உருகி அப்புறம் குளிர்ந்து கெட்டிப் பட்டு  வெற்றி மாறனாகவே கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் அருண் விஜய் .

போலீஸ் அதிகாரியாக முதல் படம் அருணுக்கு . ஆனால் ஐம்பது படங்களில் போலீஸ்கார ஹீரோவாக நடித்த அனுபவம் இருப்பது போன்ற தெளிவு  தெரிகிறது நடிப்பில் .

முறுக்கேறிய உடம்பு , விறைப்பேறிய உடை , தெறிப்பேறிய நடிப்பு . சபாஷ் அருண் விஜய் . இந்தப் படம் உங்கள் நடிப்புப் பயணத்தில்  ஒரு பொன்னான திருப்பம் . பயணம் சிறக்கட்டும் இனி !

kut 2

இயக்குனரின் விஷுவல் கற்பனைகளை காட்சிப் படுத்துவதில் ஹெர்குலிஸ் பலமாக உடன் நிற்கிறார் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் .

தரை மட்டத்தில் இருந்து மேகங்களுக்கு பின்னால் வரை பாயும் பாய்ச்சல் ஒரு விதம்  என்றால் , ஒரு மீச்சிறு இடத்தில் அருண் விஜய்யும் அரவிந்த் ஆகாஷும் போடும் பொறி பறக்கும் அந்த ,

பரபர படபட தடதட சண்டைக் காட்சியை படமாக்கி இருப்பது இன்னொரு விதம் !. ஆசம் அட்டகாசம்….   சபாஸ்கரன் !

படத்தின் முதல் பிரேமில் இருந்து ‘நாம் தியேட்டரில் திரைக்கு வெளியே இல்லை ஒரு மருத்துவ உலகின் உள்ளே இருக்கிறோம் என்று ரசிகன் உணரும் அளவுக்கு,

kut 33

அந்த ஈர நீலம் , வெள்ளை சற்றே பச்சை கலந்த வண்ணத் தன்மை , தோற்றம் , இவற்றை உருவாக்கிய விதம் ஆகட்டும் ,

அரங்கப் பொருட்களின் மூலம் இயல்புத் தன்மை மற்றும் பூடக உணர்வை கொண்டு வந்த வகையில் கலை இயக்குனர் சக்தி வெங்கட் ராஜ் அசத்தி இருக்கிறார் .

இவரோடு ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் சேர்ந்து சாதித்து இருக்கும் அற்புதம் அந்த டோன்.

பாடல்கள் சுமார் ராகமே என்றாலும் பின்னணி இசையில் அமைதிக்கு அமைதி ஆரவாரத்துக்கு ஆரவாரம் என்று திகில் பிகில் ஊத வைக்கிறார் இசை அமைப்பாளர் விஷால் சந்திர சேகர்.

kut 55

மிரட்டலான பின்னணி இசை . கிரேட் ஜாப் விஷால் .

புவன் ஸ்ரீனிவாசனின் படத் தொகுப்பு , ஜஸ்ட் இன்பார்மேஷனாக வரும் வசனங்களை அடுத்த காட்சியின் சைலன்ட் விஷுவலின் மேலே ஏற்றி படத்துக்கு வேகம் கூட்டுகிறது

சுட்டிப் பெண் தோற்றம் ஆனால் மேச்சூரிடியான பேச்சு , அழகான முக பாவனைகள் , கேமராவுக்கு தன்னைக் கொடுக்கும் விதம் என்று உள்ளம் கொள்ளை கொள்கிறார் மஹிமா நம்பியார் .

பயமுறுத்திய வில்லன் பெயரில் ஒரு ஜிலு ஜிலு கதாநாயகி

kut 3

பெண்கள் செண்டிமெண்ட் என்ற பெரிய பாலத்தை ஒற்றைத் தூணாக தாங்குகிறார் அபிநயா .

தவறென்று தோன்றும் ஒரு சிறு அழுக்கை அனுமதித்தால் அப்புறம் அழுகை கூட இல்லை என்ற நிலையில் ஒரு நேரிய பெண்ணாக அவர் எடுக்கும் முடிவும் அதனால் ஏற்படும் விளைவும் …

தியேட்டரில் பெண்களை கதற வைக்கும் .

ஒரு நீண்ட இடை வேளைக்குப் பிறகு இந்தப் படத்தில் கைதட்டல் வாங்குகிறார் தம்பி ராமையா

kut 9

காஸ்மாபாலிட்டன் டாக்டராக வரும் கல்யாணி நடராஜன் , அடியாளாக வரும் அரவிந்த் , வில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா எல்லோருமே பொருத்தமான தேர்வும் சிறப்பான நடிப்புமாக  அமைகிறார்கள் .

சமையல் அறையில் வெற்றி மாறனும் அண்ணி அபியும் பேசிக் கொள்ளும் காட்சி மட்டும் இல்லாமல் இருந்தால் , வீட்டில் நடக்கும் அந்த விபரீதக் காட்சி ரசிகரின் இதயங்களில் பெரும் பூகம்பததையே உண்டு பண்ணி இருக்கும் .

ஆனால் போலீஸ் ஹீரோ லாஜிக் பார்த்து அந்தக் காட்சியின் எபெக்ட்டை தானே குறைத்துக் கொள்கிறார் இயக்குனர் .

kut 22

படத்தின் இறுதியில் குழந்தை இல்லாத அம்மாக்கள் , அம்மா இல்லாத குழந்தைகள் இருவரையும் ஒரு புள்ளியில்  இணைக்கும் அந்த கிளைமாக்ஸ் ,

தெரிந்த விசயம்தான் என்றாலும் சினிமாவில் சொன்ன வகையில் போற்றுதலுக்குரிய புண்ணியம் .

இளைஞர்கள் பெரியவர்கள்  மட்டுமல்லாது டி வி சீரியலில் செட்டில் ஆகி விட்ட  பெண்களையும் எழுப்பி தியேட்டருக்கு கொண்டு வரும் அரிய வாய்ப்புள்ள படம் இது

kut 77

மொத்தத்தில்

குற்றம் 23…. கொற்றம் 100 !

மகுடம் சூடும் கலைஞர்கள்

—————————————-

அறிவழகன் , அருண் விஜய், பாஸ்கரன், சக்தி வெங்கட் ராஜ், விஷால் சந்திரசேகர், அபிநயா, மகிமா நம்பியார் ,
‘ரெதான்’ இந்தர் குமார் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு, ஸ்ரீராம்

 

 

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *